கே.எல் ராகுலை உலகக்கிண்ண அணிக்கு தெரிவு செய்யாதது ஏன்? பதிலளித்த அஜித் அகர்கர்
3 வைகாசி 2024 வெள்ளி 08:42 | பார்வைகள் : 1304
உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணியில் கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்படாததற்கு, பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார்.
சூன் மாதம் டி20 உலகக்கிண்ண தொடர் தொடங்க உள்ள நிலையில், ஒவ்வொரு நாடும் தங்களது அணியை அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் கே.எல்.ராகுல் உட்பட சில வீரர்கள் தெரிவு செய்யப்படாதது மற்றும் சிராஜ் உள்ளிட்ட ஓரிரு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டதற்கும் விமர்சனங்கள், கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில், அணித்தலைவர் ரோஹித் ஷர்மா மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் இருவரும், செய்தியாளர் சந்திப்பில் விமர்சனம் மற்றும் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
அப்போது கே.எல்.ராகுல் குறித்து அகர்கர் கூறுகையில், ''ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் தொடக்க வீரராக ஆடி வருகிறார். நாங்கள் முக்கியமாக நடுத்தர வரிசை விருப்பங்களைத் தேடுகிறோம்.
எனவே, அதற்கு சாம்சனும், பண்ட்டும் மிகவும் பொருத்தமானவர்கள் என்று நாங்கள் உணர்ந்தோம். சாம்சன் வரிசையில் எங்கு வேண்டுமானாலும் துடுப்பாட்டம் செய்ய முடியும். எனவே, இது நமக்குத் தேவையானதைப் பற்றியது, யார் சிறந்தவர் என்பதைப் பற்றியது அல்ல'' என தெரிவித்துள்ளார்.