தமிழ் தலைவர்கள் ஒன்றிணைந்து தீர்வு குறித்து தீர்மானிக்க வேண்டும் - இலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகர்
3 வைகாசி 2024 வெள்ளி 09:00 | பார்வைகள் : 1000
இலங்கை தொடர்பில் ஜெனிவா மனித உரிமை பேரவையில் மற்றுமொரு பிரேரணையை கொண்டு வருவதா இல்லையா என்பது இணையனுசரணை குழுவுக்கான பொறுப்பாகும். அதை அந்தக்குழுவே முடிவு செய்ய வேண்டும். ஆனால் செப்டெம்பர் மாத அமர்வில் மற்றுமொரு பிரேரணை இலங்கை தொடர்பில் வரும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என்று இலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகர் அன்றூ பெட்ரிக் தெரிவித்தார்.
மேலும் இலங்கையின் பொருளாதார மீட்சி செயற்பாடுகள் குறித்து கருத்து வெளியிட்ட உயர்ஸ்தானிகர் அது தொடர்பில் திருப்தியடைய முடியும் என்று குறிப்பிட்டார்.
‘இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கை இருந்த இடத்தையும், இன்று இருக்கும் இடத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இது உண்மையில் ஒரு மறுபிரவேசக் கதைதான் ‘’ என்று அன்றூ பெட்ரிக் கூறினார்.
இலங்கைக்கும் நாணய நிதியத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது இரண்டாவது மீளாய்வு நிறைவடைந்துள்ளதுடன் மூன்றாவது தவணைப் பணம் கிடைக்கவுள்ளது.
மேலும் இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள், வர்த்தக தொடர்புகள், ஈரான் – இஸ்ரேல் விவகாரம், காஸா மோதல் நிலைமை போன்றவை குறித்தும் அவர் தனது நிலைப்பாடுகளை அறிவித்தார்.
இதேவேளை தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் தலைவர்கள் ஒருமித்து தீர்மானம் எடுக்கவேண்டும் என்று தெரிவித்த உயர்ஸ்தானிகர் தமிழ் தலைவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதனை தான் கூற முற்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகர் அன்றூ பெட்ரிக் இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார். செவ்வியின் முக்கிய விடயங்கள் வருமாறு,
கேள்வி: இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையிலான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகள் பற்றிய உங்கள் கண்ணோட்டம் என்ன?
பதில்: மிகவும் வலுவான உறவுள்ளதென்று நான் நினைக்கிறேன். அதில் பல்வேறு பரிமாணங்களை நாம் பெற்றுள்ளோம். அதாவது ஐக்கிய இராச்சியத்தில் உறவினர்கள் அல்லது குடும்பத்தைப் பெற்றவர்கள், இங்கிலாந்தில் படித்தவர்கள், இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களிலிருந்தும் எங்களிடம் பலர் உள்ளனர். இதுவே மிகவும் வலுவான கூறுகளில் ஒன்றாகும்.
பலருக்கு ஐக்கிய இராச்சியத்தை தெரியும். நிறைய பேருக்கு ஐக்கிய இராச்சியத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதுதான் உறவுக்கு மிகவும் வலுவான அடிப்படையாகும். மேலும் நிச்சயமாக நாங்கள் மிகவும் வலுவான வணிக உறவைப் பெற்றுள்ளோம். அதைப் பற்றி நீங்கள் பின்னர் சில கேள்விகளைக் கேட்கப் போகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் நாங்கள் உங்களின் (இலங்கையின்) இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தையாக இருக்கிறோம். தற்போது உலகின் பல நாடுகளிலிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பிரிட்டன் இரண்டாவது இடத்தில் இருப்பதாக நான் நினைக்கிறேன். மேலும் பிரிட்டனில் அதிக மாணவர்களும், இலங்கையில் உள்ள பிரிட்டன் கல்வி நிறுவனங்களிலுள்ள மாணவர்களும் உள்ளனர். இது உறவின் மற்றொரு அற்புதமான அம்சமாகும். இங்கு 35க்கும் மேற்பட்ட ஐக்கிய இராச்சிய கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 40,000 பேர் படிக்கிறார்கள். ஐக்கிய இராச்சிய கல்வி தகுதிகள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. எனவே நீங்கள் இங்கே ஒரு ஐக்கிய இராச்சிய தகுதியைப் பெற்றால், எதிர்காலத்தில் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் அதைப் பயன்படுத்தலாம்.
கேள்வி: ஆனால் புள்ளிவிபரங்கள் மற்றும் தரவுகளைப் பார்க்கும் போது, இலங்கையிலிருந்து ஐக்கிய இராச்சியத்துக்கு அனுப்பப்படும் ஏற்றுமதி அதிகரிக்கவில்லையே. இதில் நீங்கள் பார்க்கும் தடை என்ன?
பதில்: தடைகள் இருக்கலாம். ஆனால் அது இயற்கையானது. காலப்போக்கில், விடயங்கள் மாறுகின்றன. இலங்கை என்ன உற்பத்தி செய்கிறது மற்றும் பிரிட்டன் எதை பெறுகிறது என்பது எப்போதும் மாறிக்கொண்டேயிருக்கும்.
ஆனால் நாங்கள் இன்னும் உங்கள் (இலங்கையின்) இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தையாக இருக்கிறோம். எனவே நாங்கள் இன்னும் நன்றாகச் செயற்படுகிறோம். நாங்கள் வெளிப்படையாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிவிட்டோம். எனவே இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தாத வகையில் புதிய திட்டமான அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கான வர்த்தக திட்டம் (Developing Countries Trading Scheme) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இலங்கை உட்பட வளரும் நாடுகள் வர்த்தகம் செய்யும் திட்டமே அதுவாகும். அதாவது இது வளரும் நாடுகளுக்கு கட்டண நன்மைகளை வழங்குகிறது. அந்தத் திட்டத்தின் நன்மைகளைப் பெறுவதற்கு பல இலங்கை நிறுவனங்களுடன் நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம். இது ஏற்றுமதியின் சில முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது. சில ஆடை உற்த்திகள், தேயிலை, ஆயுர்வேத அல்லது மூலிகை பொருட்கள் போன்றவற்றை இது உள்ளடக்கும். இலங்கை இன்னும் அவற்றை முழுமையாக பயன்படுத்துவதாக நான் நினைக்கவில்லை. எனவே நாங்கள் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்.
கேள்வி: இலங்கையின் பொருளாதார மீட்சியை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு தற்போது முடிவடைந்துள்ளதுடன் மூன்றாவது தவணை இலங்கைக்கு கிடைக்கவுள்ளது. இன்னும் சர்வதேச கடன் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும். இலங்கையின் பொருளாதார மீட்சிக் கதையை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?
பதில் பொருளாதார நெருக்கடி முக்கியமானது. அது மீட்சிக்கதைதான். ஆனால் சவால்கள் இன்னும் முடிவடையவில்லை. இன்னும் நிறைய கஷ்டங்கள் உள்ளன. ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்பு நீங்கள் இருந்த இடத்தையும், இன்று இருக்கும் இடத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இது உண்மையில் ஒரு மறுபிரவேசக் கதைதான்.
நிலைமைகள் உண்மையில் சிறப்பாக வந்துள்ளன. ஆனால் அது முடிந்துவிடவில்லை. மேலும் செல்லவேண்டிய நீண்ட பாதையுள்ளது. நீங்கள் பொருளாதாரத்தை சரியாகப் பெற முடியாவிட்டால், ஏனைய அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பது மிகவும் கடினமாகும்.
அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் தொடர்வதை, ஆதரிப்பதை உறுதி செய்கின்றன. இது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் அது குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் பரந்தளவில் அவர்கள் அதனுடன் பயணிக்க வேண்டும் என்பதை ஏற்கிறார்கள். காரணம் அங்கு பல தெரிவுகள் இல்லை. சர்வதேச நாணய நிதியத்தின் திட்டமே உண்மையில் நீண்ட காலத்துக்கு பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு நாடு திரும்புவதற்கான ஒரே பாதையாகும். தற்போது இலங்கை, மீட்சிக் கதையின் நடுவில் உள்ளது. ஆனால் கதை முடிந்துவிடவில்லை. நாங்கள் திரும்பி வந்துவிட்டோம் என்ற எண்ணத்தை மக்களுக்கு வழங்க நான் விரும்பவில்லை. நாங்கள் இருக்கும் இடம் அதுவல்ல என்பது உங்களுக்குத் தெரியும்.
கேள்வி: 2022இல் பொருளாதார நெருக்கடியின்போது மத்திய வங்கியின் கையிருப்பு 17 மில்லியன் டொலர்களாக வீழ்ச்சியடைந்தது. அப்போது இந்தியா 3.8 பில்லியன் டொலர் உதவி செய்தது. ஐக்கிய இராச்சியம் அரசாங்கம் அப்படி உதவி செய்ததை எங்களால் பார்க்க முடியவில்லை. அதற்கு உங்கள் பதில் என்ன?
பதில்: நாங்கள் வேலை செய்யும் விதம் வித்தியாசமானது. ஒவ்வொரு நாட்டிற்கும் வெவ்வேறு நடைமுறைகள் உள்ளன. பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா போன்ற நாடுகள் பின்பற்றும் நடைமுறையானது வித்தியாசமான மாதிரியாகும். அதாவது சர்வதேச நிதி நிறுவனங்களான உலக வங்கி, நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் ஊடாக நாங்கள் செயற்படுகிறோம். சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு நாங்கள் ஆதரவை வழங்குகிறோம்.
உலக வங்கியின் வரவு–செலவுத் திட்டத்தில் இங்கிலாந்து 4வீதம் பங்களிப்பு செய்கிறது. உலக வங்கி இங்கு மேற்கொண்டுள்ள நிவாரண முயற்சிகளில் நாங்கள் முக்கிய பங்காற்றுகிறோம். ஆனால், இந்திய உதவியைப் போன்று அதில் பிரிட்டிஷ் கொடி இல்லை. இந்தியா, நிச்சயமாக வேறுபட்ட அணுகுமுறையைக் கொண்டுள்ளது. அவர்கள் அண்டை நாடு. எனவே இது முற்றிலும் புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால் அமெரிக்கா, ஐரோப்பாவை போன்று நாமும் இலங்கையை ஆதரிப்பதில் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து உதவுவுவோம். நெருக்கடியின்போது 3 மில்லியன் பவுன்கள் மனிதாபிமான உதவியை வழங்கினோம்.
கேள்வி: அரசாங்கம் தயாரித்துள்ள உண்மை மற்றும் நல்லிணக்க செயல்முறை தொடர்பான உங்கள் புரிதல் என்ன?
பதில்: வெளியுறவு அமைச்சர் உண்மை மற்றும் நல்லிணக்க சட்டமூலம் இந்த பிரச்சினையைப் பற்றிய விவாதத்தை ஊக்குவிப்பதற்காக என்று கூறி முன்வைத்துள்ளார். அது குறித்த விவாதம் நடைபெறுவது வரவேற்கத்தக்கது. ஆனால் சம்பந்தப்பட்ட சமூகங்களிடமிருந்து நான் ஒரு விடயத்தை செவிமடுக்கின்றேன். இந்த சிக்கலைத் தீர்க்க பல ஆண்டுகளாக பல செயல்முறைகளை மக்கள் பார்த்திருக்கிறார்கள். பல்வேறு விசாரணைகள், பல்வேறு அறிக்கைகள் உள்ளன. எனவே ஒரு புதிய செயல்முறை வெற்றியடையுமா என்பதில் சந்தேகம் உள்ளது. எனவே சர்வதேச சமூகம் முழுவதும் பகிரப்படும் முக்கியமான விடயம் என்னவெனில், இலங்கைக்குள் நம்பிக்கையை கட்டியெழுப்ப முயற்சிப்பதற்கான உரையாடல்கள் அவசியம். அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கிடையே இது அவசியமாகும். நம்பிக்கையில்லாமல், இது வெற்றியடைவதைப் பார்க்க முடியாது. அனைத்து பங்குதாரர்களும் உரையாடலில் இருக்க வேண்டும்.
கேள்வி: ஜெனிவாவில் தற்போது நடைமுறையிலிருக்கும் இலங்கை குறித்த பிரேரணை முடியப்போகிறது. எனவே ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட இணையனுசரணை நாடுகள் இலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணையை கொண்டு வருமா?
பதில்: இது இணையனுசரணை குழுவுக்கான பொறுப்பாகும். அதை அந்தக் குழுவே முடிவு செய்ய வேண்டும். இன்னொரு பிரேரணை வரும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். 2015 ஆம் ஆண்டு இணை அனுசரணையாளர்களால் கொண்டுவரப்பட்ட பிரேரணை இலங்கை அரசின் இணக்கத்துடனான ஒரு தீர்மானமாக இருந்தது. எனவே நீண்டகால அடிப்படையில் நாம் இப்போது அந்த நிலைமையை மீண்டும் பெற விரும்புகிறோம். எனினும் இலங்கையில் தேர்தல் வருடமாக இருப்பதால் அது மிகவும் கடினமானதென இப்போது மக்கள் என்னிடம் கூறுகிறார்கள். ஆனால் நீண்ட காலத்துக்கு நாம் அதனை முன்னெடுக்க முடியும். அதுவே முன்னோக்கிச் செல்ல மிகவும் பயனுள்ள வழியாகவுள்ளது.
மேலும் சில சமயங்களில் நீங்கள் இங்குள்ள செய்தித்தாள்களைப் படித்தால், பிரேரணை, இலங்கை மீது சர்வதேச சமூகத்தின் கருத்துக்களைத் திணிப்பதாக இருப்பதாக வரைவிலக்கணப்படுத்தப்பட்டிருக்கும். அவ்வாறு கூறுவது நியாயமானதல்ல. காரணம் தீர்மானத்திலுள்ள அனைத்து விடயங்களும் இலங்கையில் விவாதிக்கப்படும் தலைப்புக்களாகும். நீங்கள் இலங்கையில் உள்ளவர்களுடன் பேசினால், வடக்குக்கு சென்றால், கிழக்குக்கு சென்றால் மக்கள் இது குறித்து விவாதிப்பதை காணலாம். எனவே மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் இலங்கையில் நடக்கும் விவாதத்தை பிரதிபலிக்கிறது. மாறாக வெளியிலிருந்து சர்வதேச சமூகம் கருத்துக்களை திணிக்கவில்லை.
கேள்வி: ஐக்கிய இராச்சியம் பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பாக அடிக்கடி விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் நோக்கம் என்ன?
பதில்: நான் பல ஆண்டுகளாக ஒரு இராஜதந்திரியாக இருப்பதுடன் ஐக்கிய இராச்சியம் பாராளுமன்றத்துடன் மிக நெருக்கமாக பணியாற்றுகிறேன். இலங்கை மட்டுமன்றி ஐக்கிய இராச்சியம் பாராளுமன்றம் உலகின் அனைத்து நாடுகள் தொடர்பாகவும் விவாதம் செய்கிறது. இது இலங்கைக்கு மட்டும் உரியதல்ல. ஐக்கிய இராச்சிய பாராளுமன்ற உறுப்பினர்கள், உண்மையில் ஐக்கிய இராச்சிய பொதுமக்கள் ஆவர். நீங்கள் பிரிட்டனுக்கு சென்று செய்தித்தாள்களைப் படித்தால், தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்தால், இலங்கையில் என்ன நடக்கிறது என்பது உட்பட சர்வதேச நிகழ்வுகளைப் பற்றிய விடயங்களே இருக்கும். ஐக்கிய இராச்சியத்துக்கு வெளியே என்ன நடக்கிறது என்பதில் எமக்கு பெரும் ஆர்வம் உள்ளது. எனவே ஐக்கிய இராச்சியம் பாராளுமன்றம் முழு உலகம் _ தொடர்பாக விவாதிக்க விரும்புகிறது. உலகின் பிற பகுதிகளில் என்ன நடக்கிறது என்று விவாதிக்கிறது. இது நீண்ட காலமாக இருந்து வருகிறது. இலங்கை விவகாரம் குறித்து ஆர்வமுள்ள மூன்று வெவ்வேறு அனைத்துக் கட்சிக் குழுக்கள் உள்ளன. மக்கள் அதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். மேலும் இது காலங்காலமாக இருந்து வரும் பாரம்பரியம். இலங்கையின் இரு சமூகங்களிலிருந்தும் ஏராளமானோர் ஐக்கிய இராச்சியத்தில் உள்ளனர். சர்வதேசத்தைப் பற்றி பேசும் பாரம்பரியம் எங்களிடம் உள்ளது.
கேள்வி: புலம்பெயர் மக்கள் இலங்கையில் முதலீடு செய்யவேண்டும் என்பது அரசாங்கத்தின் கோரிக்கையாகும். பிரிட்டனில் வசிக்கும் இலங்கை புலம்பெயர் மக்களுக்கு உங்கள் செய்தி என்ன?
பதில்: ஐக்கிய இராச்சியம் மிகவும் வெற்றிகரமான இலங்கையைச் சேர்ந்த செல்வந்தர்கள், வர்த்தகர்கள் வாழ்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர்கள் இந்த கோரிக்கையை ஆராய்ந்து பார்ப்பார்கள் என்று நம்புகிறேன். இங்கே அவர்கள் முதலீடு செய்ய விரும்புகிறீர்களா இல்லையா என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். இங்கே வந்து வாய்ப்புகள் இருக்கிறதா என்று பார்க்கலாம் என்பதுதான் எங்களின் செய்தியாகும்.
கேள்வி: வடக்கு விஜயத்தின்போது பொது மக்களை சந்தித்துள்ளீர்கள். அவர்கள் என்ன கூறினர்?
பதில்: அங்கு மிகவும் உறுதியான, மிகவும் சுறுசுறுப்பான, மிகவும் ஆற்றல் மிக்க நபர்கள் உள்ளனர். நான் மிகவும் ஈர்க்கக்கூடிய சில தொழில்முனைவோரை சந்தித்தேன். ஆவணப்படம் எடுப்பவர்கள், விளையாட்டு வீரர்களை சந்தித்தேன். வெளிப்படையாக அவர்கள் வெவ்வேறு பார்வைகளைக் கொண்டுள்ளனர். மேலும் போரின் பாரம்பரியத்தை எடுத்துரைப்பது அங்குள்ள மக்களுக்கு மிகவும் முக்கியமானது. ஆனால் பொருளாதார வாய்ப்பு பிரச்சினை முக்கியமாகவுள்ளது. மக்கள் தங்களுக்கு வேலைவாய்ப்புகள் மற்றும் சந்தர்ப்பங்கள் இல்லை என்று அங்குள்ள மக்கள் நினைக்கிறார்கள். இது நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இருப்பது போன்று வடக்கிலும் ஒரு பெரிய பிரச்சினையாகவுள்ளது. எப்படியிருப்பினும் அங்கு விஜயம் செய்தமை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஐக்கிய இராச்சிய அரச குடும்ப உறுப்பினர் இளவரசி இந்த ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு முதல் விஜயத்தை மேற்கொண்டமையையும் நினைவூட்டுகிறேன். கண்ணிவெடி அகற்றப்பட்ட காணிகளுக்கு மக்கள் திரும்புவதற்கு உதவுகின்ற மற்றும் நாங்கள் உதவுகின்ற திட்டத்தையும் அவர் பார்வையிட்டார். நாங்கள் பல தசாப்தங்களாக கண்ணிவெடி அகற்றலுக்கு உதவி வருகிறோம், மக்கள் தங்கள் நிலத்திற்குத் திரும்புவதற்கு உதவுகிறோம்.
கேள்வி: இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் தமக்கான அரசியல் தீர்வை நீண்ட காலமாக கோரி வருகின்றனர். சுதந்திரத்துக்கு முன்னர் ஐக்கிய இராச்சியம் இதனை அறிந்துள்ளது. அது பற்றி உங்கள் பார்வை என்ன?
பதில்: ஐக்கிய இராச்சியம் இலங்கையில் இருந்ததைப் பற்றி நீங்கள் கூறுவதை நான் அறிவேன். நிச்சயமாக, இலங்கையுடனான ஐக்கிய இராச்சியத்தின் தொடர்புக்கு முன்னரே இலங்கையில் இரண்டு சமூகங்களும் நீண்டகாலம் வாழ்ந்துள்ளன. எனவே இது ஐக்கிய இராச்சியத்தின் குறிப்பிட்ட பொறுப்பு என்று நான் நினைக்கவில்லை. ஆனால் சர்வதேச சமூகம் ஒட்டுமொத்தமாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாம் அனைவரும் இலங்கையின் எதிர்காலம் தொடர்பாக ஆர்வமாக உள்ளோம். இரண்டு சமூகங்களும் எப்படி ஒன்றாக வாழ முடியும் என்பதில் நாங்கள் அனைவரும் ஆர்வமாக உள்ளோம். ஆனால் அது எப்படி நடக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் இலங்கை மக்களினால் உருவாக்கப்பட வேண்டும். அதை எப்படி அணுகுவது என்று நாங்கள் மக்களுக்கு சொல்ல முடியும் என்று நான் கருதவில்லை. நான் இங்கு பலதரப்பட்ட தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்தினேன். அப்போது பலவித பார்வைகளை பார்த்தேன்.
அதிகாரப்பகிர்வு இருக்க வேண்டும் என்பதை அனைவரும் பரவலாக ஏற்றுக்கொள்கின்றனர். 13 ஆவது திருத்தச் சட்ட அமுலாக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளன. எனவே தமக்கான தீர்வு எப்படி இருக்கும் என்பதில் தமிழர் தரப்பில் ஒருமித்த கருத்து இருந்தால் அது நல்லது என்று நினைக்கிறேன். தமிழ்த் தலைவர்கள் ஒன்றிணைந்து தங்களுக்கு என்ன வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால், நான் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. அதாவது, நீங்கள் ஒருமித்த கண்ணோட்டத்துடன் இருந்தால், வெற்றி பெறுவீர்கள் என்பது அரசியலின் உண்மை.
கேள்வி: இலங்கைக்கு மலையக மக்களை ஐக்கிய இராச்சியம் 200 வருடங்களுக்கு முன்னர் அழைத்து வந்தது. அந்த மக்கள் இன்றும் வீடு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் நெருக்கடிகளை சந்திக்கின்றனர். இந்தியா உதவிகளை செய்து வருகிறது. ஐக்கிய இராச்சியம் இந்த விடயத்தில் மெளனம் காப்பது ஏன்?
பதில்: நாங்கள் இதில் கவனம் செலுத்தவில்லை என்று கூறுவது நியாயமல்ல என்று நினைக்கிறேன். நாங்கள் இந்த விடயத்தில் ஜனநாயகத்துக்கான வெஸ்ட்மின்ஸ்டர் அறக்கட்டளையுடன் (Westminster Foundation for Democracy) இணைந்து பணியாற்றுகிறோம். எனவே அவர்கள் இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயற்படுகின்றனர். மலையகத் தமிழ் மக்கள் இந்த நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய வசதிகளை கொண்ட பிரிவினராக உள்ளனர் என்பதை இங்குள்ள அரசியல் சமூகம் முழுவதும் ஏற்றுக்கொள்கின்றது. இது ஒரு சர்ச்சைக்குரிய அறிக்கை என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் மக்களுடன் பேசும்போது, இதனை அறியலாம். எனவே இங்குள்ள அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண முடியும் என்பது முக்கியமாகவுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அறக்கட்டளையானது சுகாதாரம் மற்றும் கல்வி மற்றும் பல விடயங்களில் ஆராய்கிறது. எனவே, தேர்தல்கள் வரும்போது, புதிய அரசாங்கம் அமையும் போது, அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது இங்குள்ள புதிய அரசாங்கத்திற்கு முன்னுரிமையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
கேள்வி: இது தொடர்பில் நீங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தரப்பை சந்தித்தபோது அவர் என்ன கூறினார்?
பதில்: அவர்கள் சர்வதேச சமூகம் ஒரு பங்கை வகிக்க வேண்டுமென்று கருதுகிறார் என்று நான் நினைக்கிறேன். பிரிட்டனுக்கு சிறப்புப் பங்கு உண்டு என்ற கருத்தை நான் ஏற்கவில்லை. சர்வதேச சமூகம் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். 75 ஆண்டுகள் ஆகிறது. நீண்டகாலம் ஆகிவிட்டது. இந்தப் பிரச்சினைக்கு உண்மையிலேயே தீர்வு காணக்கூடிய ஒரே இடம் இலங்கை அரசாங்கம்தான்.
கேள்வி: ஐக்கிய இராச்சியத்துக்கும் இது தேர்தல் வருடம். இலங்கையில் பெரிய தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளது. அது தொடர்பில்?
பதில்: அரசியலமைப்பின்படி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதும் அதன் பின்னர் பாராளுமன்றத் தேர்தலும் நடைபெறுவதும் முக்கியமான விடயமாகவுள்ளது. அவை நடக்கும் என்று இப்போது எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். அதாவது ஒரு வருடத்துக்கு முன்னர், ஒருவேளை அது நடக்காது என்று கருதும் ஒரு காலகட்டம் இருந்தது. ஆனால் இப்போது அப்படிச் சொல்வதை நான் கேட்கவில்லை. இரண்டு தேர்தல்களும் நடக்கும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். இங்குள்ள அனைவருக்கும் இது மிகவும் சுவாரஷ்யமான நேரம். யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. தூதரகமாக எங்களது பணி குறிப்பிட்ட கட்சிகளை ஆதரிப்பது அல்ல. ஆனால் நாங்கள் அனைத்து முக்கிய கட்சிகளுடனும் தொடர்பு வைத்திருப்போம். இதுவே எங்கள் பணி. மேலும் நாட்டின் எதிர்காலத்திற்கான அவர்களின் திட்டங்கள் என்ன என்பதைப் புரிந்துகொள்வதும் எங்கள் பணியாகும்.
சர்வதேச சமூகமான நாங்கள் இந்த செயல்முறைக்கு ஆதரவளிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். இது நியாயமான தேர்தல், மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கிறது என்பதை உறுதிப்படுத்துவோம். இலங்கை மிகவும் பெருமை வாய்ந்த, நீண்ட தேர்தல் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. நாங்கள் அரசியலில் தலையிடுவதில்லை.
கேள்வி: ஈரான் - இஸ்ரேல் பதற்றம் தொடர்பில் உங்கள் கருத்து? உலக அமைதி?
பதில்: ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் மோதல் பதற்றத்தை குறைக்கவே வலியுறுத்துகிறது. மத்திய கிழக்கில் ஒரு பரந்த போரை நாங்கள் பார்க்க விரும்பவில்லை.
கேள்வி: காஸாவில் சோகமான நிலை முடிவடைவதை எப்போது பார்க்கலாம்?
பதில்: இது தற்போது உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையாகும். இது ஐக்கிய இராச்சியத்தில் பெரும் கவனத்தைப் பெறுகிறது. பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறுகின்றன. காஸாவில் மோதல் நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முக்கிய, தெளிவான நிலைப்பாடாகும். காஸாவில் உள்ள மக்கள் படும் துன்பம் நீங்க வேண்டும். தொடர்ந்து நீண்ட காலத்திற்கு, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இரு நாடுகள் தீர்வை நாங்கள் தொடர்ந்து ஆதரிக்கிறோம்.
கேள்வி: நீங்கள் இருநாட்டு தீர்வை ஆதரிக்கின்றீர்களா?
பதில்: ஆம் நாங்கள் ஆதரிக்கிறோம். அனைத்து பகுதிகளிலும் அதை வலியுறுத்துகிறோம். இது ஒரு மிக முக்கியமான விடயம். இது இலங்கை உட்பட உலகம் முழுவதும் மிகவும் வலுவான பார்வைகளைக்கொண்ட ஒரு தலைப்பாகவுள்ளது.
நன்றி வீரகேசரி