Paristamil Navigation Paristamil advert login

மன்னாரில் கடன் தொல்லையால் இளம் தாய் எடுத்த விபரீத முடிவு

மன்னாரில் கடன் தொல்லையால் இளம் தாய் எடுத்த விபரீத முடிவு

18 ஆவணி 2023 வெள்ளி 11:53 | பார்வைகள் : 2692


ஒரு குழந்தையின் தாயான இளம் பெண் கடன் தொல்லை மற்றும் பிரிந்து வாழும் கணவனால் இடையிடையே துன்புறுத்தலுக்கு உள்ளாகிய காரணத்தினால் மன விரக்தி அடைந்த நிலையில் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் மன்னார் வங்காலை நறுவலிக்குளம் மாதிரி கிராமத்தில் நேற்று (17) இரவு இடம்பெற்றுள்ளதாக மரண விசாரணை மூலம் தெரியவருகின்றது.

உயிரிழந்தவர் 22 வயதுடைய திருமதி றெஜினோல்ட் வாசுகி என்ற இரண்டரை வயதுடைய ஒரு பெண் குழந்தையின் தாயாவார்.

இச்சம்பவம் தொடர்பாக இறந்தவரின் தாயாரிடம் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணை மூலம், குறித்த பெண் 05 வருடங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். எனினும் இரண்டு வருடங்களாக கணவனை பிரிந்து வாழ்ந்துள்ளார்.

மன்னாரில் ஒரு கடையில் வேலை செய்து வந்துள்ள இவருக்கு கடன் மற்றும் பிரிந்து வாழும் கணவனால் அடிக்கடி தொல்லைகள் ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

சம்பவத்தினத்தன்று இறந்தவர் தனது பணி தளத்திலிருந்து அரை நேரத்துடன் வீடு திரும்பியிருந்ததாகவும் பின் இரவு எட்டு மணியாகியும் இவரை வீட்டில் காணவில்லையென தேடியபோது இவர் தங்கள் வீட்டு அறையை உள் பக்கமாக பூட்டிக் கொண்டு தற்கொலை செய்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டதாக மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும்படி மரண விசாரணை அதிகாரியினால் பணிக்கப்பட்டதுடன் பின் இவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படியும் பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்