வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு உயர்வு
4 வைகாசி 2024 சனி 05:45 | பார்வைகள் : 2022
அமெரிக்க டொலர் உள்ளிட்ட முக்கிய நாடுகளின் நாணயத்திற்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், அமெரிக்க டொலருக்கு எதிராக 9.1 வீதத்தினாலும், யூரோவிற்கு எதிராக 12.7 வீதத்தினாலும், பிரித்தானிய பவுண்டிற்கு எதிராக 10.8 வீதத்தினாலும் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.
சீன யுவானிற்கு எதிராக 11.4 வீதத்தாலும், ஜப்பானிய யெனுக்கு எதிராக 21 வீதத்தாலும், இந்திய ரூபாய்க்கு எதிராக 9.5 வீதத்தாலும், அவுஸ்திரேலிய டொலருக்கு எதிராக 14.2 வீதத்தாலும் ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு கடன்களை மீளச் செலுத்துவதை இலங்கை நிறுத்தியிருந்தது.
இந்நிலையில், பொருளாதார மீட்சியை உறுதிப்படுத்த கடுமையான நிதி ஒழுக்கத்தைப் பேணுவதாகவும், பலதரப்புக் கடனைத் தொடர்ந்து செலுத்தி வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அந்த வகையில், 2022 ஆம் ஆண்டு 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனும், 2023 ஆம் ஆண்டு 2.6 பில்லியன் டொலர் கடனும் சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற பலதரப்புகளுக்கு திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான அறிவிப்புடன் இருதரப்பு வெளிநாட்டுக் கடன் செலுத்துதல்கள் மட்டுமே இடைநிறுத்தப்பட்டதாக அமைச்சர் சியம்பலாபிட்டிய கூறியுள்ளார்
எவ்வாறாயினும், "பொருளாதார மீட்சியை எளிதாக்குவதற்கான முடிவுகளை எடுக்கும்போது கடுமையான நிதி ஒழுக்கத்தை பேணி வருகிறோம்" என்று அமைச்சர் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.