தமிழக வீரர் நடராஜனுக்கு உலகக்கிண்ண அணியில் இடமில்லை - அவுஸ்திரேலிய முன்னாள் வீரர்
4 வைகாசி 2024 சனி 10:20 | பார்வைகள் : 767
தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் உலகக்கிண்ண அணியில் இடம்பெறாதது ஆச்சரியமாக இருப்பதாக ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் டி20 உலகக்கிண்ண தொடரில் விளையாட உள்ள இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது.
அதில் யார்க்கர் கிங் என்றழைக்கப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கராசு நடராஜன் இடம்பெறாதது எதிர்மறை விமர்சனங்களை பெற்றது.
முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் ஏன் நடராஜனை தெரிவு செய்யவில்லை என பிசிசிஐ-யை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் அவுஸ்திரேலிய முன்னாள் வீரரும், CSK அணிக்காக விளையாடியவருமான ஷேன் வாட்சனும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் நடராஜன் குறித்து கூறுகையில், ''யார்க்கரை உள்ளே வைக்கும் நடராஜனின் திறமை, அவர் பந்துவீசும்போது வேகத்தின் மாறுபாடு, ஒவ்வொரு ஓவருக்கும் மீண்டும் அதை அவர் தொடர்வார். அதனால் தான் அவர் இந்திய டி20 அணியில் இல்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஏனெனில் அவரது நிலையான செயல்திறன் காரணமாக, குறிப்பாக துடுப்பாட்ட வீரர்கள் வலுவான நிலையில் உள்ளபோதும் அவர் சிறப்பாக பந்துவீசுகிறார். அவர் சிறப்பாக செயல்படும்போது இந்தியர் மட்டுமின்றி, உலக கிரிக்கெட்டும் மகிழ்ச்சியாக இருக்கும்'' என தெரிவித்துள்ளார்.