ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர் - பிடிவாதம் காட்டும் நெதன்யாகு
5 வைகாசி 2024 ஞாயிறு 10:46 | பார்வைகள் : 2120
ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் எகிப்தில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இந்நிலையில், அமெரிக்காவிடம் ஹமாஸ் அதிகாரிகள் ஒரே ஒரு உத்தரவாதம் அளிக்கக் கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஹமாஸ் படைகள் இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்க ஒப்புக்கொண்டுள்ளது. குறித்த பேச்சுவார்த்தையானது எகிப்தின் கெய்ரோவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பேச்சுவார்த்தையின் இரண்டாவது நாளிலும், இஸ்ரேல் தரப்பில் எவரும் கலந்துகொள்ளவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டாலும், ரஃபா மீதான தரைவழித் தாக்குதல் நடந்தே தீரும் என்றும் இஸ்ரேல் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதில் தங்களுக்கு உடன்பாடு இருப்பதாக அறிவித்துள்ள ஹமாஸ் படைகள், ரஃபா தாக்குதலை இஸ்ரேல் கைவிடும் என்ற உத்தரவாதம் அமெரிக்கா அளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
மேலும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை தனிப்பட்டமுறையில் முறியடிக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முயன்று வருவதாகவும் ஹமாஸ் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் இருந்து தப்பிய 1 மில்லியன் பாலஸ்தீன மக்கள் தற்போது ரஃபா பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
ரஃபா பகுதி மீதான தரைவழி தாக்குதல் என்பது பேரழிவுக்கு காரணமாக அமையும் என்றே பல்வேறு அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இந்த நிலையில், போர் அமைச்சரவை சரணாகதியடையத் தேவையில்லை என்றும், இனி ரஃபா தான் என்றும் இஸ்ரேலின் நிதியமைச்சர் Bezalel Smotrich சமூக ஊடகத்தில் காணொளி ஒன்றை பதிவேற்றியுள்ளார்.
மேலும், கெய்ரோவில் பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வரும் நிலையிலும், ரஃபா நகரம் மீதான வான் தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது.