தெலுங்கு இயக்குனர் படத்தில் மீண்டும் தனுஷ்?

5 வைகாசி 2024 ஞாயிறு 15:05 | பார்வைகள் : 4726
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், ’ராயன்’ என்ற படத்தில் நடித்து இயக்கி முடித்து உள்ள நிலையில் இந்த படம் விரைவில் திரைக்கு வெளியாக உள்ளது. இதை எடுத்து தற்போது அவர் சேகர் கம்முள்ள இயக்கத்தில் ’குபேரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் அவர் பிச்சைக்காரனாக இருந்த ஒருவர், டான் ஆக மாறுவது எப்படி என்ற கேரக்டரில் நடித்து வந்துள்ளார் என்றும் தெரிய வருகிறது. இந்த படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் நிலையில் தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் கசிந்துள்ளது.
தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தையும் ஒரு தெலுங்கு இயக்குனர் தான் இயக்குகிறார் என்றும் அவர் ஸ்ரீகாரம் என்ற படத்தை இயக்கிய கிஷோர் என்றும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க உள்ளார் என்பதும் இவர் ஏராளமான சூப்பர் ஹிட் தெலுங்கு படங்களை தயாரித்து உள்ள நிலையில் தமிழில் விஜய் நடித்த ’வாரிசு’ என்ற படத்தையும் தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் இந்த படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் தனுஷ், சேகர் கம்முலா படத்தை முடித்தவுடன் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’இளையராஜா’ படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் அந்த படத்தை முடித்துவிட்டு தான் அவர் கிஷோர் படத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.