விரதங்களுக்கு மதங்களில் முக்கியத்துவம் கொடுப்பது ஏன்..?
6 வைகாசி 2024 திங்கள் 05:12 | பார்வைகள் : 1052
விரதம் இருப்பது என்பது தனிநபர் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், அது இன்னும் பல்வேறு ஆச்சரியமூட்டும் நன்மைகளுக்காக போற்றப்படுகிறது. சுய கட்டுப்பாடு மற்றும் தெய்வீகத்துடனான தொடர்பு போன்றவற்றை மேம்படுத்தும் ஒருவகையான ஆன்மீக ஒழுக்கத்தின் வடிவமாக விரதம் பார்க்கப்படுகிறது. பெரும்பாலான மதங்களில் விரதம் ஏன் மற்றும் எதற்காக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்துக்கள் கடைபிடிக்கும் விரதம் : உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் விரதம் மேற்கொள்வது என்பது ஒரு பொதுவான நடைமுறையாக இருந்து வருகிறது. இந்த விரதங்கள் என்பது ஒரு நாள் அல்லது ஏதேனும் திருநாளுக்கானது மட்டுமல்லாமல், ஆண்டு முழுவதும் பல்வேறு நாட்களில் செய்யப்படுகிறது. நவராத்திரியின் போது பின்பற்றப்படும் 9 நாள் விரதங்கள் முதல் ஒரு நாள் ஏகதேசி விரதம் வரை பலர் பல்வேறு விதமான விரதங்களை கடைப்பிடித்து வருகின்றனர். விரதம், இருப்பது உடலையும் மனதையும் தூய்மைப்படுத்துவதற்கு உதவுகிறது. ஆன்மீகப் பயணத்தில் கவனம் செலுத்துவதற்கும், தெய்வீகத்தோடு ஆழ்ந்த தொடர்பு வைத்துக் கொள்வதற்கும் இது உதவுவதாக நம்பப்படுகிறது.
கிறிஸ்தவர்கள் பின்பற்றும் விரதம் : ஈஸ்டர் திருநாளுக்கு முன்பு முன்பிலிருந்து 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் விரதம் இருப்பது வழக்கம். இதன்போது ஒரு சில உணவுகள் மற்றும் செயல்பாடுகளை கிறிஸ்தவர்கள் தவிர்த்து விடுவார்கள். இதனை அவர்கள் கடவுளுக்கு செய்யக்கூடிய ஒரு சிறிய தியாகமாக பார்க்கிறார்கள். பல கிறிஸ்துவ சமூகங்களில், வேறு சில நாட்களிலும் மக்கள் விரதங்களை பின்பற்றி பணம் மற்றும் உணவை ஏழை எளியோருக்கு தானமாக வழங்கி வருகின்றனர்.
இஸ்லாமியர்களின் விரதம்: இஸ்லாமியர்கள் வழக்கமாக ரம்ஜான் மாதத்தில் விரதம் இருப்பார்கள். அனைத்து வயது வந்த முஸ்லிம்களும் இந்த விரதம் இருப்பது கட்டாயமாக இஸ்லாமியத்தில் கருதப்படுகிறது. நோய்வாய்ப்பட்ட நபர்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், பயணங்களில் இருப்பவர்கள் அல்லது மாதவிடாய் நாட்களில் இருக்கும் பெண்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ரம்ஜான் நோன்பின் போது சூரிய உதயம் மற்றும் மறைவுக்கு இடைப்பட்ட நேரத்தில் உணவு, பானம், புகைப்பிடித்தல் மற்றும் தாம்பத்தியம் போன்றவற்றில் இருந்து விலகி இருப்பார்கள்.
அனைத்து மதங்களிலுமே பெரும்பாலும் விரதங்கள் பின்பற்றப்படுகிறது. விரதங்களை அனைவரும் பின்பற்றினாலும் அதற்கு அவர்கள் பல்வேறு பெயர்களை சூட்டுகின்றனர். மேலும் பல்வேறு காரணங்களுக்காக மக்கள் விரதங்களில் ஈடுபடுகிறார்கள். ஆன்மிக காரணங்கள் முதல் உடலையும், ஆன்மாவையும் சுத்தம் செய்யும் ஒரு வழக்கமாகவும் விரதம் பார்க்கப்படுகிறது. இப்போது விரதம் இருப்பதால் கிடைக்கும் ஒரு சில பலன்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டுள்ள ஒரு நபர் விரதம் இருக்கும் பொழுது அது அவருடைய உடலையும், ஆன்மாவையும் தூய்மைப்படுத்துகிறது. உணவு, தண்ணீர் அல்லது பிறவற்றிலிருந்து விலகி இருப்பதன் மூலமாக சுய கட்டுப்பாடு கிடைக்கிறது. விரதம் இருப்பது வேண்டுதல், தியானம் போன்றவற்றிற்கான ஒரு நல்ல சூழலை உருவாக்கி கொடுக்கிறது.
எவன் ஒருவன் தன்னுடைய பசியையும், பொறாமையையும் கட்டுப்படுத்திக் கொள்கிறானோ அவன் சுய ஒழுக்கத்தை நோக்கிய பயணத்திற்கு தயாராகி விட்டான் என்று பல கற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். விரதம் இருப்பதற்கு சுய ஒழுக்கம் மற்றும் மன தைரியம் அவசியம். நமக்கு பிடித்தமான விஷயங்களில் இருந்து விலகி இருப்பது அவ்வளவு சாதாரண காரியம் அல்ல. ஆனால் அதனை நீங்கள் கற்றுக் கொண்டு விட்டால் வாழ்க்கையின் பிற பகுதிகளை சமாளிப்பது உங்களுக்கு எளிதாகிவிடும்.
ஆன்மீக காரணங்களுக்காக விரதம் கடைப்பிடிக்கப்பட்டாலும், மக்கள் உணவு மற்றும் பானங்களில் இருந்து விலகி இருந்து ஏழை எளியோருக்கு அவற்றை தானமாக வழங்கும் ஒரு நல்ல காரியம் இதன் மூலமாக நடக்கிறது. எனவே பல வழிகளில் விரதம் மக்களுக்கு உதவி புரிகிறது. பசியின் அனுபவத்தை பெற்று அதனால் ஏற்படக்கூடிய சிரமங்கள் என்னென்ன என்பதை புரிந்து கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைகிறது.