Paristamil Navigation Paristamil advert login

30 ஆண்டுகளை நிறைவு செய்த Euro tunnel..!

30 ஆண்டுகளை நிறைவு செய்த Euro tunnel..!

6 வைகாசி 2024 திங்கள் 11:50 | பார்வைகள் : 2891


பிரான்ஸ்- இங்கிலாந்தை இணைக்கும் Euro tunnel, இன்று (மே 6) 30 ஆண்டுகள் ஆகிறது.  இதுவரை 500 மில்லியனுக்கும் அதிகமானோர் அதில் பயணித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

உலகில் உள்ள மிக நீளமான கடல் அடியில் இருக்கும் சுரங்கமான இதனை 1994 ஆம் ஆண்டு மே 6 ஆம் திகதி, பிரெஞ்சு ஜனாதிபதி François Mitterrand, மற்றும் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் அம்மையார் (Elizabeth II) திறந்துவைத்தார்கள். அதுவரை தனித்தீவாக இருந்த இங்கிலாந்தை முதன்முறையாக, பாதை ஒன்று இணைத்தது.

இவ்விரண்டு நாடுகளுக்குமிடையே சுரங்கப்பாதை அமைக்கவேண்டும் என்பது நெப்போலியன் காலத்து ஆசையாகும். 1801 ஆம் ஆண்டு ஒரு முயற்சி இடம்பெற்று, உடனடியாகவே அது தோல்வியில் முடிந்தது. 

பின்னர், 1878 ஆம் ஆண்டு முதல் 1883 ஆம் ஆண்டு வரை  கலே பகுதியின் Sangatte நகரில்  இருந்து பிரித்தானியா நோக்கி கடலுக்கடியில் தோண்டப்பட்டது. 1,800 மீற்றர் தூரத்துக்கு சுரங்கம் தோண்டப்பட்டது. ஆனால் அது இடையிலேயே நிறுத்தப்பட்டது. 

பின்னர், François Mitterrand ஜனாதிபதியாக 1981 ஆம் ஆண்டு எலிசே மாளிக்கைக்கு வந்தார். அவரது முயற்சி தான் இன்று நாம் பார்க்கும் சுரங்கத்தின் இறுதி வடிவம்.

பிரான்ஸ்-பிரித்தானியாவின் கூட்டு முயற்சியில் ஜனவரி 20 ஆம் திகதி 1986 ஆம் ஆண்டு இரு நாட்டில் இருந்தும் சுரங்கம் தோண்டும் பணி ஆரம்பித்தது. 

கடலின் தரைப்படுக்கையில் இருந்து 80 மீற்றர் ஆழத்தில், 150 கிலோமீற்றர் தூரத்துக்கு சுரங்கம் தோண்டவேண்டும்.

ஏழு ஆண்டுகளாக இரவு பகலாக பணிகள் இடம்பெற்றன. 12,000 பேர் பணி புரிந்தனர்.

டிசம்பர் 1 ஆம் திகதி 1990 ஆம் ஆண்டு பிற்பகல் 12.12 மணிக்கு இரு நாட்டு பணியார்களும் சுரங்கம் வழியாக ஒருவரை ஒருவர் சந்தித்தனர். உலகமே இந்த வெற்றியை கொண்டாடியது. 

Philippe Cozette எனும் பிரெஞ்சு பணியாளரும், Graham Hagg எனும் இங்கிலாந்து பணியாளரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டு கைகுலுக்கி கொண்டனர். இரு நாட்டு கொடிகளுடனும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

கலேயில் இருந்து டோவருக்கு 35 நிமிடங்களில் கண்ணை மூடித்திறக்க தொடருந்து மின்னல் வேகத்தில் வந்தடையக்கூடிய உலகமே வியந்து பார்த்த அந்த சுரங்கம் இறுதியாக மே 6 ஆம் திகதி 1994 ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது.

இம்த சுரங்கத்துக்காக 7 பில்லியன் யூரோக்கள் செலவாகும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், இறுதியில் அது 12 பில்லியன் யூரோக்களில் சென்று முடிவடைந்திருந்தது. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்