இலங்கையில் மின் கட்டணத்தைக் குறைக்குமாறு பரிந்துரை
6 வைகாசி 2024 திங்கள் 12:31 | பார்வைகள் : 1430
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மின்சார சபை 8 ஆயிரத்து 200 கோடி ரூபா இலாபம் ஈட்டியுள்ளதால், பொருளாதார நெருக்கடியைக் குறைக்கும் வகையில் மின் கட்டணத்தை மேலும் 20 சதவீதத்தால் குறைக்குமாறு நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மின்சார சபைக்கு கிடைத்த இலாபத்தைக் கருத்தில் கொண்டு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் மின்சார சபை என்பன இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக்குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான காமினி வலேபொட குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் பொருளாதாரச் சிரமங்களை இதன்மூலம் ஓரளவு குறைக்க முடியுமெனவும் இதன்போது அவர் தெரிவித்தார்.
கடந்த வருடம் மின்சார சபையின் அண்ணளவாக இலாபம் 6 ஆயிரம் கோடி ரூபா எனவும் 2024 ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் பெறப்பட்ட 5 ஆயிரத்து 100 கோடி ரூபாவையும் சேர்த்து 2024 மார்ச் 31 ஆம் திகதி வரை 8 ஆயிரத்து 200 கோடி ரூபா இலாபமாக ஈட்டப்பட்டுள்ளதாக அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.