தொழுநோய் பரவ இந்த விலங்குகளே காரணம் - ஆய்வு தகவல்
6 வைகாசி 2024 திங்கள் 12:43 | பார்வைகள் : 2172
சுவிஸ் பல்கலை ஒன்று மேற்கொண்ட ஆய்வொன்றில், அணில்களின் எலும்புகளில், குஷ்டரோகம் என அழைக்கப்படும் தொழுநோயை உண்டாக்கும் நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், தொழுநோய் பரவுவதில், அணில்களின் பங்களிப்பும் இருந்திருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
சுவிட்சர்லாந்தின் Basel பல்கலை ஆய்வாளர்கள், medieval எனப்படும் இடைக்காலத்தில், இங்கிலாந்தில் வாழ்ந்த அணில்களின் எலும்புகளில், அதே காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் எலும்புகளில் காணப்பட்ட தொழுநோயை உண்டாக்கும் நோய்க்கிருமிகளையொத்த கிருமிகள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
அதாவது, அந்த காலகட்டத்தில், தொழுநோய் பரவ அணில்கள் காரணமாக அமைந்திருக்கலாம் என கருதுகிறார்கள் ஆய்வாளர்கள்.
அணில்களிடமிருந்து மனிதர்களுக்கு தொழுநோய் பரவியதா, அல்லது, மனிதர்களிடமிருந்து அணில்களுக்கு தொழுநோய் பரவியதா என்பதை உறுதி செய்ய இயலவில்லை.
இன்னொரு விடயம் என்னவென்றால், இந்த கண்டுபிடிப்பு இந்த காலத்துக்கும் மிகவும் இன்றியமையானதாகும். காரணம் என்னவென்றால், இன்னமும் இந்த நோயை முற்றிலும் ஒழிக்கமுடியவில்லை. இப்போதும், ஆண்டுக்கு சுமார் 200,000 பேர் தொழுநோய்க்கு ஆளாகிறார்கள்.
எப்படி அந்த நோய் பரவிக்கொண்டிருக்கிறது என்பது இன்னமும் விடை தெரியாத கேள்வியாகவே நீடிக்கிறது.
ஒரு சூழலில், விலங்குகளில் தொழுநோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், தொழுநோயை ஒழிக்க முடியாமல் இருப்பதற்கு இத்தகைய விலங்குகள் காரணமாக இருக்கலாம் என்னும் கருத்து உருவாகியுள்ளது.
தொழுநோய் (leprosy) என்பது, மைக்கோபாக்டீரியம் லெப்ரே (Mycobacterium leprae) என்னும் நோய்க்கிருமியால் பரவும் ஒரு நோய் என்பது குறிப்பிடத்தக்கது.