தேர்தல் கமிஷன் பணி சிறப்பு - பிரதமர் மோடி பாராட்டு
7 வைகாசி 2024 செவ்வாய் 08:42 | பார்வைகள் : 1535
காந்தி நகர் தொகுதிக்குட்பட்ட ரானிப் பகுதி அருகே நிஷான் மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில் பிரதமர் மோடி ஓட்டளித்தார். ஓட்டளித்த பின்னர் அவர் அளித்த பேட்டியில்; ஜனநாயகத்திருவிழாவின் தேர்தலில் மக்கள் மிக எளிதாக, எவ்வித சிரமமுமின்றி ஓட்டளித்தனர். வன்முறை இல்லாத சிறப்பான ஏற்பாடுகளை செய்த தேர்தல் கமிஷனுக்கு எனது பாராட்டுதலை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
Image 12662923ம் கட்ட லோக்சபா தேர்தல் 12 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளில் இன்று (மே 07) ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. தனது சொந்த மாநிலமான குஜராத்தின் ஆமதாபாத்தில் காந்தி நகர் தொகுதிக்குட்பட்ட ரானிப் பகுதி அருகே நிஷான் மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில் பிரதமர் மோடி ஓட்டளித்தார்.
குழந்தைகளை கொஞ்சிய பிரதமர்
முன்னதாக பிரதமர் மோடியை குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் வரவேற்றனர். குழந்தைகள் வரைந்த ஓவியங்களை பிரதமர் மோடியிடம் காட்டிய போது, அதில் கையெழுத்திட்டார். தொடர்ந்து மக்கள் பலரும் பிரதமருடன் கைகுலுக்கினர். பல குழந்தைகளை கையில் வாங்கி கொஞ்சினார் பிரதமர். மேலும் பார்வையற்ற பெண் ஒருவரிடம் சென்ற பிரதமர் மோடி, நலம் விசாரித்தார். மோடியின் தோளில் கைவைத்து அப்பெண் உரிமையுடன் உரையாடினார்.
பிரதமர் மோடியை காண குழந்தைகள் உட்பட மக்கள் கூட்டம் குவிந்தது. காண குவிந்த மக்கள், பிரதமர் மோடி உடன் மொபைல் போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தனது ஜனநாயக கடமையை ஆற்றிய பின், ஓட்டுச்சாவடி அருகே, மக்கள் மத்தியில் ஓட்டளித்து விட்டேன் என கையில் இருந்த மையை பிரதமர் மோடி காட்டினார்.
மக்கள் அனைவரும் ஓட்டளியுங்கள்!
ஓட்டுச்சாவடிக்கு வெளியே, நிருபர்களிடம் பிரதமர் மோடி கூறியதாவது: இன்று மூன்றாம் கட்ட ஓட்டுப்பதிவு. தேர்தலின் போது வன்முறை சம்பவங்கள் பதிவாகவில்லை. வன்முறை இல்லாத தேர்தல் இது. சிறப்பாக பணியாற்றிய தேர்தல் கமிஷனுக்கு எனது பாராட்டுகள். ஜனநாயகத்தை மக்கள் பண்டிகை போல் கொண்டாட வேண்டும். ஜனநாயகத் திருவிழாவின் தேர்தலில் மக்கள் மிக எளிதாக, எவ்வித சிரமமுமின்றி ஓட்டளித்தனர். வெப்பம் அதிகமாக இருப்பதால் மக்கள் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மக்கள் அனைவரும் திரண்டு வந்து ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.