புகலிடக்கோரிக்கையாளர்களை வேறு நாட்டுக்கு அனுப்ப திட்டமிட்ட பிரித்தானியா
7 வைகாசி 2024 செவ்வாய் 08:51 | பார்வைகள் : 2714
பிரித்தானியா, புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்த திட்டமிட்டுள்ளதைப்போல, மற்றொரு நாட்டுக்கு அனுப்ப திட்டமிட்டதாக, லீக் ஆன ஆவணங்கள் சிலவற்றிலிருந்து தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோரையும், புகலிடக்கோரிக்கையாளர்களையும், ருவாண்டாவுக்கு அனுப்பி, அங்குவைத்து அவர்களுடைய புகலிடக்கோரிக்கைகளை பரிசீலிப்பது ருவாண்டா திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
புகலிடக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவோர் ருவாண்டாவில் தொடர்ந்து வாழ அனுமதிக்கப்படுவார்கள்.
அதாவது, புகலிடக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவர்கள் மீண்டும் பிரித்தானியாவுக்கு வரமுடியாது! பிரித்தானியாவில் வாழும் கனவில் வருவோர், ஆப்பிரிக்க நாடு ஒன்றில் வாழும் நிலைதான் கடைசியில் ஏற்படும்.
இந்நிலையில், ருவாண்டாவைப் போலவே, மற்றொரு நாட்டுக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களை அனுப்ப பிரித்தானியா திட்டமிட்டது குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.
புகலிடக்கோரிக்கையாளர்களை அனுப்ப பிரித்தானியா திட்டமிட்ட மற்றொரு நாடு ஈராக்.
பிரித்தானியாவுக்கும் ஈராக்குக்கும் இடையில் புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் திட்டம் ஒன்று ஏற்கனவே உள்ளது. பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் எந்த நாட்டவரும் ருவாண்டாவுக்கு அனுப்பப்படலாம்.
ஆனால், ஈராக்குக்கோ, ஈராக் நாட்டவர்கள் மட்டுமே திருப்பி அனுப்பப்படுவதுதான் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.