ஈரானில் மீன் மழை - நிபுணர்கள் விளக்கம்

7 வைகாசி 2024 செவ்வாய் 10:59 | பார்வைகள் : 7386
ஈரானில், மீன்மழை பெய்யும் வீடியோ ஒன்று வேகமாக பகிரப்பட்டுவருகிறது.
ஈரானில், Yasuj என்னுமிடத்தில், நேற்று பெருமழை பெய்த நிலையில், வானிலிருந்து மீன்களும் மழையாக பொழிந்துள்ளன.
காரில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவர், தனது காரிலிருந்து இறங்கி, தரையில் கிடக்கும் உயிருள்ள மீன் ஒன்றை கையில் எடுத்துக்காட்டும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
2020ஆம் ஆண்டு, டெஹ்ரானில் இதேபோல வானிலிருந்து கத்திரிக்காய்கள் விழும் காட்சி ஒன்று வைரலானது. பின்னர், அது போலி வீடியோ என தெரியவரவே, அதிகாரிகள் 5 பேரைக் கைது செய்தார்கள். ஆகவே, இதுவும் போலி வீடியோவாக இருக்கலாம் என சிலர் கூறியுள்ளார்கள்.
என்றாலும், மீன்மழை மட்டுமல்ல, தவளைமழை, வௌவால் மழை, வெட்டுக்கிளி மழை, நண்டுமழை, பாம்புமழை என பலவகை மழைகள் பொழிந்துள்ளதாக National Geographic தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
அதாவது, சூறாவளி அடிக்கும்போது, இதுபோல மீன்கள், தவளைகள் போன்ற உயிரினங்களை பலத்த காற்று அள்ளிக்கொண்டுவந்து நிலத்தில் போடுவதாக பருவநிலை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.