Paristamil Navigation Paristamil advert login

தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள்; சாம் பிட்ரோடா மீண்டும் சர்ச்சை பேச்சு

தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள்; சாம் பிட்ரோடா மீண்டும் சர்ச்சை பேச்சு

8 வைகாசி 2024 புதன் 15:08 | பார்வைகள் : 1854


பரம்பரை சொத்து வரி குறித்து தெரிவித்த கருத்தினால் ஏற்பட்ட சர்ச்சையை காங்கிரஸ் கட்சி சமாளிப்பதற்குள் அக்கட்சியின் அயலக அணி பொறுப்பாளர் சாம் பிட்ரோடா, தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள் போலும், கிழக்கு இந்தியர்கள் சீனர்களை போலும், மேற்கு இந்தியர்கள் அரேபியர்கள் போல் உள்ளனர் என்று கூறி அடுத்த சச்சரவை துவக்கி வைத்துள்ளார். இதனை சமாளிப்பதற்காக, இது போன்ற கருத்துகளை ஏற்றுக் கொள்ள முடியாது என காங்கிரஸ் கூறியுள்ளது.

சர்ச்சை

காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளரான சாம் பிட்ரோடா டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‛‛அமெரிக்காவில் பரம்பரை வரி என்று ஒன்று இருக்கிறது. ஒருவருக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் சொத்துகள் இருந்தால், அதில் அவருடைய வாரிசுகள் 45 சதவீதத்திற்கு மட்டுமே உரிமை கோரி, பெற முடியும். 55 சதவீதத்தை அரசு எடுத்துக் கொள்ளும். இந்தியாவில் அப்படி ஏதும் இல்லை. ஒருவருக்கு ரூ.100 கோடி சொத்து இருந்தால், அத்தனையும் வாரிசுகளுக்கே சென்றடையும். இதுபோன்ற விஷயங்களை விவாதிக்க வேண்டும்'' எனக் கூறியிருந்தார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தங்களின் கருத்து அல்ல என காங்கிரஸ் கூறியது. பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் இந்த விவகாரத்தை அரசியல் பிரசாரங்களில் எழுப்பி காங்கிரசை கடுமையாக விமர்சித்தனர்.

பேட்டி

இந்நிலையில் சாம் பிட்ரோடா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: சில சண்டைகளை விட்டுவிட்டு மக்கள் ஒன்றாக வாழக்கூடிய மகிழ்ச்சியான சூழலில் 75 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களைப் போன்று தோற்றமளிக்கிறார்கள். இந்தியாவைப் போன்ற பலதரப்பட்டோர் வாழும் தேசத்தை மகிழ்ச்சியாக வைத்து இருக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். இவரது இந்த கருத்து தற்போது சர்ச்சை ஆகி உள்ளது. பா.ஜ.,வினர் சாம் பிட்ரோடாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கோபம்

தெலுங்கானாவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது; தென் இந்தியர்களை ஆப்ரிக்கர் என்கிறார் சாம் பிட்ரோடா. தென் இந்தியர்களை நிறத்தை வைத்து காங்கிரஸ் விமர்சிக்கிறது. சாம்பிட்ரோடா, காங்கிரஸ் இளவரசரின் ஆலோசகராகவும், நண்பராகவும் உள்ளார். காங்கிரஸ் கட்சியின் 3வது நடுவராகவும் உள்ளார். பிட்ரோடாவின் கருத்துகள் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த இனவெறி கருத்து குறித்து காங்கிரஸ் இளவரசர் பதிலளிக்க வேண்டும். ஒருவரின் நிறம் அவரது நாட்டின் அடையாளத்தை வெளிப்படுத்துமா என கேள்வி எழுப்பினார்.

சமாளிப்பு

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்காக சாம்பிட்ரோடா தெரிவித்த கருத்துகள் துரதிஷ்டவசமானது. ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்த விவகாரத்தில் இருந்து காங்கிரஸ் முற்றிலும் விலக்கி கொள்கிறது எனக்கூறியுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்