விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படம் எப்படி இருக்கு..?
13 ஆனி 2024 வியாழன் 09:06 | பார்வைகள் : 2363
குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் பெரியசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி, பாய்ஸ் மணிகண்டன், சிங்கம்புலி, முனிஷ்காந்த் நடிகைகள் அபிராமி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மகாராஜா.
ஒரு அழகான அப்பா - மகள் பாசத்தின் பின்னணியில் அழுத்தமான ஒரு கதையை கூறியுள்ளார் இயக்குநர் நித்திலன். சலூன் கடை வைத்திருக்கும் விஜய் சேதுபதி, பள்ளியில் படிக்கும் அவர் மகள், லஞ்சம் வாங்கும் காவல் அதிகாரி நட்டி, திருட்டுக் கும்பல் இவர்களை சுத்தியே கதை, திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதியும் அவருடைய மகளும் முக்கியமாக கருதும் லட்சுமி காணாமல் போகிறது. அதை வைத்து சாதாரணமாக தொடங்கும் படத்தின் திரைக்கதை, ஆழமான ஒரு புள்ளியை நோக்கி நகர்ந்து அதிர்ச்சியடைய வைக்கிறது. லட்சுமி என்ன என்பது படம் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே தெரிந்துவிட்டாலும், அதன் பின் வரும் காட்சிகள் படத்தின் மைய கருவை நோக்கி அடுத்தடுத்து நகர்ந்துகொண்டே செல்கிறது.
அதுவும், நான் லினியர் முறையில் திரைக்கதையை கையாண்டுள்ளார் இயக்குநர் நித்திலன். கொஞ்சம் தவறினாலும் மொத்தமாக படம் சொதப்பிவிடும் அல்லது புரியாமல் போகும். ஆனால் அதிக கவனத்துடன் திரைக்கதையை கையாண்டு தான் நினைத்ததை கச்சிதமாக சாத்தியமாக்கிவிட்டார் இயக்குனர். படத்தில் சில நிமிட இடைவெளியில் டிவிஸ்ட் ஒன்று வரும், அது என்ன என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு படம் பார்த்தால் நிச்சயம் சுவாரசியம் போய்விடும். எனவே, அதை எங்கும் தெரிந்துகொள்ளாமல் படத்தை பார்க்க சென்றால், ஒரு அழகான Screenplay Treatment-ல் படம் பார்த்த அனுபவம் கிடைக்கும்.
மகாராஜா விஜய் சேதுபதியின் 50வது படம். எனவே சற்று கூடுதல் கவனம் செலுத்தி நடித்துள்ளார். சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் 45 வயதை கடந்த ஒரு நபராக நடித்துள்ளார், நடிப்பில் அவ்வளவு எதார்த்தம். அதேபோல் மற்ற நடிகர்கள் நட்டி, அருள்தாஸ், மணிகண்டன், முனிஷ்காந்த், சிங்கம்புலி உள்ளிட்டோரும் தங்கள் அனுபவத்தைக் காட்டியுள்ளனர். நடிகர்களை தவிர ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன், இசையமைப்பாளர் Ajaneesh Loknath சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். இவர்களைவிட படத்தொகுப்பாளர் பிலோமின் பங்களிப்பு படத்திற்கு கூடுதல் பலம். அவர் படத்தின் மற்றொரு இயக்குனராகவே தெரிகிறார்.
படத்தின் வசனம் மிகவும் முக்கியமான ஒன்று, ரசிகர்களுடன் படத்தை நேரடியாக கன்னெட் செய்யும் மெயின் கருவி வசனம் தான். இந்த படத்தின் இறுதிக் காட்சியில் இடம்பெற்றுள்ள வசனம் நிச்சயம் காண்போரை யோசிக்க வைக்கும். மகாராஜா படத்தில் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் சிலருக்கு திரைக்கதை புரியாமல் போக வாய்ப்பு உள்ளது. அதேபோல் வில்லன் யார் என்பதை ஓப்பனாக கூறாமல் அதையும் இரு டிவிஸ்டாக வைத்திருந்திருக்கலாம்.
அதேசமயம் மகாராஜாவின் மைய கருவில் ஒரு கொரியன் படத்தின் வாடை அடிக்கிறதோ என்று யோசிக்கவும் வைக்கிறது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த மகாராஜா, மக்களின் ஆதரவுடன் கிரீடம் சூடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.