சுவிற்சர்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட இலங்கை ஆதிவாசிகளின் மனித எச்சங்கள், கலைப்பொருட்கள்
13 ஆனி 2024 வியாழன் 10:07 | பார்வைகள் : 1579
சுவிற்சர்லாந்தில் உள்ள அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருந்த இலங்கை ஆதிவாசிகளின் 12 எலும்புக்கூடுகள், 30 மண்டை ஓடுகள் மற்றும் 400 கிலோகிராம் எடையுள்ள கலைப்பொருட்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நெதர்லாந்தில் இருந்து கலைப்பொருட்கள் நாட்டிற்கு வெற்றிகரமாக மீண்டும் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, சுவிற்சர்லாந்தில் இருந்து இந்த மனித எச்சங்கள் மற்றும் கலைப்பொருட்களை மீண்டும் கொண்டு வருவதற்கு கவனம் செலுத்தப்பட்டதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
சுவிற்சர்லாந்தின் பேசல் அருங்காட்சியகத்தில் இருந்து நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பூர்வீக மனித எச்சங்கள் மற்றும் கலைப்பொருட்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (12) கொழும்பு தாமரைத் தடாகத்தில் இடம்பெற்றது. இதில் ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னில எத்தோ கலந்துகொண்டார்.
கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் தம்பன வாரிக மஹகெதரவின் கோரிக்கைக்கு அமைய சுவிஸ் அரசாங்கத்துடன் இணைந்து முறையான ஒப்பந்தத்தின் மூலம் இந்த பொருட்கள் மீண்டும் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மனித எச்சங்கள் மற்றும் கலைப்பொருட்கள் பற்றிய தகவல்களை வழங்கிய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒஷான் வெடகே சுட்டிக்காட்டியுள்ளார்.