Paristamil Navigation Paristamil advert login

உடல் எடையை பராமரிக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

உடல் எடையை பராமரிக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

13 ஆனி 2024 வியாழன் 15:38 | பார்வைகள் : 334


உடல் பருமன் என்பது தீவிர சுகாதாரப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். உடலில் கூடுதலாக கலோரி சேரும் போது அவை கொழுப்பாக மாறி உடல் எடையை அதிகரிக்கின்றன. இந்தியர்களில் 25 சதவிகிதத்தினர் உடல் பருமனாக உள்ளதாகவும், இது நகர்ப்புறங்களில் 53 சதவிகிதமாகவும் கிராமப்புறங்களில் 19 சதவிகிதமாகவும் உள்ளது என இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் கூறுகிறது.

உடல் பருமன் காரணமாக கொழுப்பு கல்லீரல், டைப்-2 டயாபடீஸ், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தல், கல்லீரல் நோய், தூக்கத்தில் மூச்சுத்திணறல், குறிப்பிட்ட வகை புற்றுநோய் போன்ற பல உடல்நலப் பிரச்சனைகள் வரும் ஆபத்துள்ளது. உடல்பருமன் நம் வாழ்க்கையின் தரத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் நம்முடைய ஆரோக்கியத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை செலுத்துகிறது. உங்கள் உடல் நிறை குறியீடு (BMI) 18 முதல் 25-க்குள் இருந்தால் பிரச்சனை இல்லை. அதுவே 25 முதல் 35 வரை இருந்தால் உடல் பருமனில் முதலாம் நிலை என அழைக்கப்படும். 35-யை விட அதிகமாக இருந்தால் ஆரோக்கியமற்ற உடல்பருமனாக கருதப்படும். எனினும் முறையான பயிற்சிகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றுவதன் மூலம் உடல் பருமன் வராமல் தடுக்கலாம். அதற்கான டிப்ஸ் இதோ…

உடல் பருமனை புரிந்துகொள்ளுதல் : உடல் பருமன் என்பது வெறும் உடல் எடை அதிகரிப்பு மட்டுமானதல்ல. இதனால் டயாபடீஸ், இதய நோய்கள் வரும் ஆபத்துள்ளது. உடல் பருமனை பராமரிப்பதற்கான முதல் படி என்னவென்றால், ஆரோக்கியமான மற்றும் நிலையான உடல் எடையை பராமரித்தல்.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறை பழக்கங்கள் : உடல் பருமன் காரணமாக கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உடையவர்கள் ஒரு நாளில் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இரவு வெகு நேரம் கழித்து சாப்பிடுவது, இரவு நேரத்தில் தின்பணடங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

சீரான உடற்பயிற்சி : உடல் பருமன் வராமல் இருக்க வேண்டுமென்றால் வாரத்தில் குறைந்தபட்சம் 4 முதல் 5 தடவை உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். நடைபயிற்சி, சைக்கிளிங், நீச்சல் போன்ற மிதமான உடற்பயிற்சிகளை தினமும் 15 நிமிடங்கள் செய்தால் உடல் எடையை குறைக்கலாம்.

மருத்துவ உதவி : உடல் பருமனை குறைப்பதற்கான பயணத்தில் நீங்கள் தனியாளாக பயணிப்பதை தவிர்க்க வேண்டும். பயிற்சிபெற்ற நிபுணர்கள் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர்களின் வழிகாட்டுதலின் கீழ் செய்யும் போது நமக்கு உத்வேகம் கிடைக்கும்.

சரிவிகித டயட் : உடல் பருமனுக்கு பின்னால் உள்ள முக்கியமான காரணம் மோசமான உணவுப்பழக்கம். ஜங்க் ஃபுட், சர்க்கரை நிறைந்த குளிர்பானங்கள், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை சாப்பிடுவதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். இதற்குப் பதிலாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் நம் உடலுக்கு தேவையான வைட்டமின், தாதுக்கள், புரதம் ஆகியவை கிடைக்கிறது. அங்கீகாரம் பெற்ற ஊட்டச்சத்து நிபுணரை தொடர்பு கொண்டால் உங்கள் உடல் வாகுக்கு ஏற்ற டயட் முறையை அவர் பரிந்துரைப்பார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்