குவைத் தீ விபத்தில் பலியான இந்தியர்களின் உடல்கள் கொச்சி வந்தடைந்தன
14 ஆனி 2024 வெள்ளி 08:16 | பார்வைகள் : 1744
குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உட்பட 45 இந்தியர்களின் உடல்கள் இந்திய விமானப்படை விமானம் மூலம் கொச்சி கொண்டு வரப்பட்டது.
குவைத்தின் மங்காப் என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், நேற்று முன்தினம்( ஜூன் 12) அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 49 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த 7 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரண தொகையை மாநில அரசு அறிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு அவற்றை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணிகளில் குவைத் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் உடலை இந்தியா கொண்டு வர விமானப்படைக்கு சொந்தமான சி 130 என்ற விமானம் நேற்று குவைத் சென்றது. அங்கிருந்து உயிரிழந்தவர்களின் உடலை எடுத்துக் கொண்டு வந்த விமானம் கொச்சி வந்தடைந்தது. விமானத்தில் இருந்து 31 உடல்கள் கீழே கொண்டு வரப்பட்டன. எஞ்சிய 14 உடல்கள் டில்லி கொண்டு செல்லப்பட உள்ளன.
விமான நிலையத்தில் மத்திய அமைச்சர்கள் கீர்த்தி வரதன் சிங், சுரேஷ் கோபி, கேரள முதல்வர் பினராயி விஜயன், அம்மாநில அமைச்சர்கள், தலைவர்கள், தமிழக அரசு சார்பில் செஞ்சி மஸ்தான் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். சர்வ மத பிரார்த்தனையும் நடந்தது.
இதன்பிறகு, இறந்தவரின் உடல்கள் அவரவரின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏழு தமிழர்களின் உடல் தனித்தனி ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அனுமதி கிடைக்கவில்லை
இந்நிலையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது: குவைத் செல்வதற்கு, அனுமதி கிடைக்காதது துரதிர்ஷ்டம். தீவிபத்தில் உயிரிழந்தவர்களில் அதிகமானோர் கேரளாவைச் சேர்ந்தவர்களும். சிகிச்சையில் உள்ளவர்களில் பெரும்பாலானோரும் எங்களது மாநிலத்தை சார்ந்தவர்கள் தான் என்றார்.