ஆகஸ்ட் முதல் தமிழ் புதல்வன் திட்டம்: முதல்வர் ஸ்டாலின்
14 ஆனி 2024 வெள்ளி 15:07 | பார்வைகள் : 1671
தமிழ் புதல்வன் திட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் துவங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேர்ந்து இருக்கும் மாணவர்களின் வங்கி கணக்குகளில் மாதம் ரூ.1,000 வரவு வைக்கப்படும்.
பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த ஐம்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் 'தமிழ் புதல்வன்' திட்டத்தின் கீழ் ரூ.1,000 உதவி தொகை வழங்கப்படும். உலக அளவில் சவால் விடும் வகையில் தமிழக மாணவர்கள் வளர வேண்டும் என்பது என் ஆசை. புதுமைப்பெண் திட்டத்தை பலரும் பாராட்டுகின்றனர். காலை உணவு திட்டம் மூலம் 16 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.
பள்ளிகளில் 21,000 ஸ்மார்ட் வகுப்புகள் துவங்கப்படும்; 600 ஸ்மார்ட் வகுப்புகள் இன்று துவங்கப்பட்டுள்ளன படிங்க... படிச்சுக்கிட்டே இருங்க. படிப்பு ஒன்று தான் யாராலும் பறிக்க முடியாதது. அறிவியல் வளர்ச்சி அதிகரித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி பேசு பொருள் ஆகி உள்ளது. நீட் தேர்வை முதலில் எதிர்த்தது தமிழகம் தான். இந்த தேர்வுக்கு விரைவில் முடிவு கட்டுவோம். கல்வியிலும் மோசடி செய்வதே நீட் தேர்வு. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.