Paristamil Navigation Paristamil advert login

தந்தையின் அன்பு பூமிக்குள் ஓடும் நீரோடை......

தந்தையின் அன்பு பூமிக்குள் ஓடும் நீரோடை......

16 ஆனி 2024 ஞாயிறு 15:39 | பார்வைகள் : 496


தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தாயின் அன்பு எல்லோருக்கும் தெரியும்படி தட்டில் வைத்த தீபம் என்றால் தந்தையின் அன்பு பூமிக்குள் ஓடும் நீரோடை போன்றது. தாய் தன் குழந்தையை கருவில் 10 மாதம் தான் சுமக்கிறாள். ஆனால் தந்தையோ தன் பிள்ளைகளை வாழ்நாள் முழுக்க நெஞ்சிலும், கைகளிலும் வைத்து சுமக்கிறார்.

பிள்ளைகளை நோய் வாய்ப்படாமல் காக்கவும், அவர்களை நன்றாக படிக்க வைத்து, சொந்தக் காலில் நிற்க வைத்து ஆளாக்கவும், பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த ஒரு ஜீவன் என்றால் அது தந்தை தான். குடும்பத்தை பேணி காப்பதில் தாயின் அன்பிற்கு சிறிதும் குறைந்ததல்ல தந்தையின் தியாகம். எந்த ஒரு குடும்பமும் தந்தையால் தான் ஆலமரம் போல் வேறூன்றி வளர்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

பிள்ளைகள் வாழ்வில் சிறந்த நிலைக்கு வருவதற்காக தன்னலமற்று ஆயுள் முழுவதும் உழைப்பவர் தந்தை. குடும்பத்தின் சுமைகளை சுமப்பதோடு மட்டுமின்றி, குழந்தைகளை வழிநடத்தும் நண்பனாகவும், ஆசானாகவும் விளங்குபவர் தந்தை. பெற்று வளர்த்த பெற்றோரையே தூக்கி எறியும் பிள்ளைகள் அதிகரித்துவிட்ட காலத்தில், தாய் தந்தையின் பெருமையும் எந்நாளும் போற்றிப் பணிய வேண்டும் என்பதே இந்த தந்தையர் தினத்தில் அனைவரும் ஏற்க வேண்டிய உறுதி மொழியாக இருக்கும்.

தந்தைகள் பிள்ளைகளிடம் சற்று கராராக நடந்து கொள்வதால் பெரும்பாலும் பிள்ளைகள் அம்மாவிடமே அன்பைத் தேடி ஓடுகின்றனர். ஆனால் அந்த தந்தையின் அர்ப்பணிப்பை பெரும்பாலானோர் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். தந்தையர் தினம் என்றால் வாட்ஸ் அப்பிலோ அல்லது இன்ஸ்டாகிராமிலோ ஸ்டேட்டஸ் வைப்பதோடு நிறுத்திவிடாமல் அனைவரும் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றுவதே அவர்களுக்கு தரும் சிறந்த தந்தையர் தின பரிசாக இருக்கும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்