டிஜிட்டல் படையெடுப்பா...?
27 ஆவணி 2023 ஞாயிறு 09:30 | பார்வைகள் : 2974
இலங்கை மீது இந்தியா டிஜிட்டல் படையெடுப்பை மேற்கொள்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது முன்னிலை சோஷலிசக் கட்சி.
அந்தக் கட்சியின் கல்விச் செயலாளர் புதுது ஜாகொட கண்டியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இது குறித்த சில அடிப்படைச் சந்தேகங்களை எழுப்பியிருந்தார்.
இலங்கைக் குடிமக்கள் அனைவருக்கும் வழங்கப்படவுள்ள இலத்திரனியல் அடையாள அட்டையை தயாரிக்கும் ஒப்பந்தம், இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்படுவதை ஒட்டியே, இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது.
2013இல் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கும் பணிகளை மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.
அப்போது அந்த ஒப்பந்தம் பாகிஸ்தானின் தேசிய தரவு மற்றும் பதிவு அதிகாரசபைக்கு வழங்கப்பட்டது.
அதன்பின்னர் தரவுகளை ஒழுங்கமைத்து இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
ஆனால், அந்த திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. அப்போது, பாகிஸ்தான் நிறுவனத்திடம் இலங்கையர்களின் தனிப்பட்ட தரவுகள் சிக்கப் போகிறது என்றோ, இதனால் தேசிய பாதுகாப்பு ஆபத்துக்கு உள்ளாகும் என்றோ எந்தக் கட்சியும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
இப்போது இந்தியாவின் மெட்ராஸ் செக்யூரிட்டி பிரின்டேர்ஸ் நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்படவுள்ளது என்ற நிலையில்தான், இந்தியாவின் டிஜிட்டல் கொலனியாக இலங்கை மாறப் போகிறது என்றும், இந்தியாவின் டிஜிட்டல் படையெடுப்பு என்றும் சில கட்சிகள் எதிர்க்கத் தொடங்கி விட்டன.
ஒரு நாட்டின் தரவுகள் இன்னொரு நாட்டின் கையில் கிடைக்கும் போது - பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படுவது வழக்கம் தான்.
இலங்கையர்களின் தரவுகளை ஒருங்கிணைக்கும் போது, அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும் சரி, சீன நிறுவனமாக இருந்தாலும் சரி, இந்திய நிறுவனமாக இருந்தாலும் சரி- பாதுகாப்பு மீறல் இருக்கத் தான் செய்யும்.
தனிப்பட்ட தரவுகளைத் திரட்டும், எந்தவொரு புலனாய்வு அமைப்பும், கிடைக்கின்ற எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி தரவுகளைத் திரட்டிக் கொள்ளும். எதையும் விட்டு வைக்காது.
எனவே, இந்திய நிறுவனம் இலத்திரனியல் அடையாள அட்டைக்குரிய தரவுகளைச் சேகரிக்கும் போது, அவை இந்திய புலனாய்வு அமைப்புகளால் பயன்படுத்தப்படாது என்று உறுதி கூற முடியாது. அவ்வாறு நம்பிக்கை கொடுக்கப்பட்டால் அது பொய்யானது.
இலத்திரனியல் அடையாள அட்டை தனிநபர்களின் முக அமைப்பு, கைவிரல்களின் ரேகை அமைப்பு, கண்விழி அமைப்பு உள்ளிட்ட உயிரியல் தரவுகளையும் கொண்டதாக இருக்கும்.
இந்தியாவில் இத்தகைய தரவு திரட்டல் பெரும்பாலும் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.
ஆதார் அட்டை திட்டத்தின் மூலம், இந்த தரவுகள் திரட்டப்பட்டுள்ளன. படிப்படியாக ஆதார் அட்டை எல்லா செயல்முறைகளுக்குமான அத்தியாவசிய தேவையாக மாற்றப்பட்டிருக்கிறது.
வங்கிக் கணக்குகள் தொடக்கம், அரச அலுவல்களுக்கு மாத்திரமன்றி, நகைகள், காணிகள், வீடுகளின் கொள்வனவு விற்பனைகளுக்கும் கூட, ஆதார் அட்டை அவசியமாக்கப்பட்டுள்ளது.
எந்தக் கொடுக்கல் வாங்கல்களுக்கும் அது பயன்படுத்தப்படுவதும், தனிநபர்களின் ஆதார் இலக்கம் எல்லா வங்கிக் கணக்குகளுக்கும், பயன்படுத்தப்படுவதும், அரசாங்கத்தினால் குடிமக்களின் வருமானம், செலவினம், சேமிப்புகள் போன்ற தரவுகளை திரட்டவும், வருமான வரி அறவீட்டை சுலபப்படுத்தவும், உதவுகிறது.
வரி ஏய்ப்பாளர்களை அடையாளம் காணவும், சொத்து முறைகேடுகளை தடுக்கவும் இந்த ஆதார் அட்டை முறை பெருமளவில் உதவியிருக்கிறது.
இந்தியாவில் ஆதார் அட்டை நடைமுறை கொண்டு வரப்பட்ட பின்னர் தான், வாக்காளர் அட்டைகள் முறைப்படுத்தப்பட்டன. கடவுச்சீட்டுகள் வழங்கலிலும் ஒழுக்க மீறல்கள் தடுக்கப்பட்டன.
அதற்கு முன்னர் இந்தியாவில் தேசிய அளவில் எந்த அடையாள அட்டையும் இருந்ததில்லை.
இலங்கையில் 1970ஆம் ஆண்டில் இருந்து தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
ஆனாலும், அதனை தனியே தமிழர்களைப் பிரித்தறிந்து அடையாளம் காணுவதற்கான பாதுகாப்பு நோக்கங்களுக்காகவே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது.
இப்போது தான் அரசாங்கம் டிஜிட்டல் அடையாள அட்டைகள் மூலம், தரவுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பயன்படுத்த முற்படுகிறது.
அரசாங்கம் இந்த திட்டத்தை 10 ஆண்டுகளுக்கு முன்னரே நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்த திட்டம் செயற்படுத்தப்படவில்லை.
இப்போது இந்திய நிறுவனத்தின் ஊடாக அனைத்து குடிமக்களின் தரவுகளையும் ஒருங்கிணைக்கவும், இலத்திரனியல் அடையாள அட்டைகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது இலங்கையர்களின் தனிப்பட்ட தரவுகளை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்குச் சமமானது தான். விமான நிலையங்களில் உயிரியல் தரவு சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த அண்மையில் அமெரிக்கா உதவ முன்வந்த போது அதற்கு எதிர்ப்புக் கிளம்பியது நினைவிருக்கலாம்.
இவ்வாறான எதிர்ப்புகளின் ஊடாக இந்த திட்டங்களை நிறுத்தி விட முடியாது. ஏனென்றால், இலங்கையைப் பொறுத்தவரையில் பல்வேறு முன்னேற்றங்களை எட்ட வேண்டுமாயின், இலத்திரனியல் அடையாள அட்டை முறை அவசியம்.
குறிப்பாக, வருமான வரி அறவீடு, சொத்துக்கள் விற்பனை- கொள்வனவு, வங்கிக் கணக்குப் பரிமாற்றங்கள் போன்ற, அரசாங்கத்தின் வருமானங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை இந்த இலத்திரனியல் அட்டைகளின் ஊடாக ஏற்படுத்த முடியும்.
இலங்கையர்கள் வருமான வரி செலுத்துவது மிகமிக குறைவு என்பது அண்மையில் வெளியான தரவுகளின் மூலம் தெரியவந்திருக்கிறது.
பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண உதவ முன்வந்த சர்வதேச நாணய நிதியம், இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் 1300 பில்லியன் ரூபா வரி வருமானத்தை திரட்ட வேண்டும் என்று அரசாங்கத்துக்கு நிபந்தனை விதித்திருந்தது.
ஆனால், அரசாங்கம் முதல் அரையாண்டில் 1317.05 பில்லியன் ரூபா (92 வீதம்) வரி வருமானத்தையே அடைந்திருக்கிறது.
வருமான வரி அறவீட்டுக் குறைபாடுகளால் தான் இந்த நிலை காணப்படுகிறது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் 5 இலட்சம் பேரின் கோவைகள் பதிவு செய்யப்படுள்ள போதும், 31 ஆயிரம் பேரே வருமான வரியைச் செலுத்துகின்றனர். நாட்டில் 1 இலட்சத்து 5 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் உள்ள போதும், 328 நிறுவனங்கள் மட்டுமே, மொத்த வருமான வரியில் 82 வீதத்தை செலுத்துகின்றன.
எஞ்சியவை வரி செலுத்தவில்லை. அல்லது வரி ஏய்ப்பில் ஈடுபடுகின்றன.
இவ்வாறான மோசடிகளுக்கு தீர்வு காண்பதும், வங்கி சொத்து மோசடிகளை தடுப்பதற்கும், அரசாங்கத்துக்கு கிடைக்க வேண்டிய வருமானங்களை முறையாக அறவிடுவதற்கும், ஏனைய நிர்வாக தேவைகளுக்கும் இந்த இலத்திரனியல் அடையாள அட்டைகள் கைகொடுக்கும்.
இலத்திரனியல் அட்டையை அறிமுகம் செய்வது பல்வேறு வழிகளில அரசாங்கத்துக்கு நன்மையை ஏற்படுத்தும். விரைவாக இதனை நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் வெளிநாட்டு நிறுவனங்களை அழைக்கத் தான் வேண்டும்.
ஏனென்றால், உள்நாட்டில் அத்தகைய பாரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இல்லை. டிஜிட்டல் கட்டமைப்பை இலங்கை உருவாக்கத் தவறி விட்டது.
உள்நாட்டில் இலத்திரனியல் தொழில்நுட்ப நிறுவனங்களை பெரியளவில் உருவாக்கத் தவறியது இலங்கையின் பெருங் குறைபாடு.
அதேவேளை, வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையினால் தீமைகளும் இருக்கின்றன.
குறிப்பாக இலங்கையர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட தரவுகள், அந்த நிறுவனங்களிடம் சிக்கி விடும். இலங்கையர்கள் பலருக்கும் தெரியாத சொந்த தகவல்களைக் கூட, அவர்களால் உயிரியல் தொழில்நுட்பங்களின் மூலம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இது ஒரு வகையில் தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் தான். இது இலங்கையை இந்தியாவின் டிஜிட்டல் கொலனியாக்கி விடும் என்ற புபுது ஜாகொடவின் கருத்து முற்றிலுமாக நிராகரிக்க கூடியதல்ல.
ஆனால், சின்னஞ்சிறிய நாடான இலங்கை, போதுமான டிஜிட்டல் கட்டமைப்புகளை வளர்த்தெடுக்கத் தவறியதற்காக அவ்வாறான இழப்புகளை சந்தித்தே ஆக வேண்டும்.
இல்லையேல், பொருளாதார ரீதியாக இடம்பெறும் குற்றங்களையோ, ஏய்ப்புகளையோ தடுக்கவோ தவிர்க்கவோ முடியாது.
நன்றி வீரகேசரி