தி.மு.க., கொண்டாட்டம்; மக்கள் திண்டாட்டம்: அண்ணாமலை காட்டம்
18 ஆனி 2024 செவ்வாய் 10:12 | பார்வைகள் : 1919
ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாட்டம் அடைந்துள்ளனர் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: ரேஷன் கடைகளில் தடையின்றி பாமாயில், துவரம் பருப்பு வழங்க வேண்டும். திமுக கொண்டாட்டத்தில் உள்ளது. ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாட்டம் அடைந்துள்ளனர். இன்னும் முழுமையாக ரேஷன் பொருட்களை மக்களுக்கு வழங்காமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி ரேஷன் பொருட்களை விநியோகிக்காமல் இருப்பதா?. பிப்ரவரி மாதமே 60 ஆயிரம் டன் துவரம் பருப்பு, 6 கோடி லிட்டர் பாமாயில் வாங்க கோரப்பட்ட டெண்டர் என்னவானது?. தரமற்ற துவரம் பருப்பை அனுப்பிய நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
இ.பி.எஸ்., கண்டனம்
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொது விநியோகத்தில் வரலாற்றுச் சாதனைகளைப் புரிந்து, நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த தமிழகத்தில், உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு அவலநிலைக்கு சீர்கெடச் செய்த இந்த திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.
ஏழை எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் எவ்வித தட்டுப்பாடும் இன்றி சீராக விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.