தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பால் புது வரலாறு: பிரதமர் மோடி பெருமிதம்
18 ஆனி 2024 செவ்வாய் 13:52 | பார்வைகள் : 1862
லோக்சபா தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பு யாராலும் கணிக்க முடியாத வகையில் இருந்தது. இந்த உத்தரவு புதிய வரலாற்றை படைத்து உள்ளது, என பிரதமர் மோடி பேசினார்.
3வது முறையாக பிரதமராகபதவியேற்ற பிறகு பிரதமர் மோடி இன்று (ஜூன்-18) தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்றார். அங்கு, பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான நிதியை பிரதமர் விடுவித்தார்.
இதன் பிறகு பிரதமர் மோடி பேசியதாவது: சமீபத்தில் ஜி7 நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்க இத்தாலி சென்றேன். இந்த நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட, இந்திய தேர்தலில் ஓட்டளித்தவர்களின் எண்ணிக்கை 1.5 மடங்கு அதிகம். இந்த தேர்தலில் 31 கோடி பெண்கள் ஓட்டுப் போட்டு உள்ளனர். தேர்தலில் அதிக பெண்கள் ஓட்டுப் போட்டது இந்தியாவில் மட்டுமே. இந்த எண்ணிக்கை, அமெரிக்க மக்கள் தொகைக்கு இணையாக உள்ளது.
நமது ஜனநாயகத்தின் பலம் தான், ஒட்டு மொத்த உலகத்தையும் ஈர்க்கிறது. ஜனநாயக திருவிழாவை வெற்றிகரமாக்கிய வாரணாசி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பு யாராலும் கணிக்க முடியாத வகையில் இருந்தது. இந்த உத்தரவு புதிய வரலாற்றை படைத்து உள்ளது. ஜனநாயக நாட்டில் ஒரு அரசு தொடர்ந்து 3வது முறையாக அமைவது அரிதானது. ஆனால், இந்திய மக்கள் அதனை செய்து காண்பித்து உள்ளனர். இது இந்தியாவில் 60 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. அதற்கு பிறகு, இந்தியாவில் வேறு எந்த அரசும் அதே போன்று அமையவில்லை.
மக்களின் கனவுகளை நிறைவேற்ற அனைத்தையும் செய்வேன். நான் வாரணாசியை சேர்ந்தவன். கங்கை தாய் என்னை தத்தெடுத்து விட்டாள். வாரணாசி மக்கள் என்னை 3வது முறையாக எம்.பி.,யாக மட்டும் தேர்வு செய்யவில்லை. பிரதமர் ஆகவும் தேர்வு செய்துள்ளனர். கடவுள் விஸ்வநாதர், கங்கை தாயின் ஆசியினாலும், காசி மக்களின் அன்பால், 3வது முறையாக நாட்டின் பிரதான சேவகராக வந்துள்ளேன்.
பிரதமர் விவசாய உதவி நிதி திட்டம் உலகின் மிகப்பெரிய திட்டம். இந்த திட்டத்தால் 1 கோடி விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். இதுவரை 3.25 லட்சம் கோடி நிதி விவசாயிகளுக்கு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. இன்று மட்டும் 700 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு உள்ளது.
நமது பொருளாதாரம் வளர்வதில், விவசாயிகள் முக்கிய பங்கு ஆற்ற வேண்டும். டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதில் பெண்கள் முக்கிய பங்கு வகித்தனர். 3 கோடி பேருக்கு வீடு கட்டி கொடுத்து உள்ளோம். பெண்களையும், விவசாயிகளையும் பலப்படுத்தவே எனது 3வது ஆட்சி காலத்தை துவக்கி உள்ளேன். 21ம் நூற்றாண்டில் இந்தியாவை உலகின் பெரிய 3 வது பொருளாதார நாடாக மாற்றுவதில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.