Paristamil Navigation Paristamil advert login

கள்ளக்குறிச்சியில் ஒரே நாளில் 9 பேர் பலி: சாராய வியாபாரிகள் இருவர் கைது

கள்ளக்குறிச்சியில் ஒரே நாளில் 9 பேர் பலி: சாராய வியாபாரிகள் இருவர் கைது

19 ஆனி 2024 புதன் 13:51 | பார்வைகள் : 531


கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் பகுதியில் ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்தனர். அவர்கள் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக சந்தேகித்து போலீசார் விசாரிக்கின்றனர். ஆனால் உயிரிழந்ததற்கு கள்ளச்சாராயம் காரணமில்லை என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று (ஜூன் 19) ஒரே நாளில் அடுத்தடுத்து பிரவீன், சுரேஷ், சேகர், சுரேஷ்( மற்றொருவர்) உள்ளிட்ட4 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சுமார் 40 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் ஏன தகவல்கள் தெரிவி்க்கின்றன. .இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு இருந்த 15 பேரில் கிருஷ்ணமூர்த்தி, மணி, முருகன் மற்றும் இந்திரா என்ற எபண் என நான்கு பேர் பலியானர். மீதமுள்ளவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.


ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்ததால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், கள்ளச்சாராயம் குடித்து தான் உயிரிழந்திருப்பதாக சந்தேகிக்கின்றனர். இது குறித்து போலீசாருடன் இணைந்து வருவாய்த்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலெக்டர் விளக்கம்

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஷர்வன் குமார் அளித்த விளக்கம்: உயிரிழந்த 8பேரும், வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களின் இறப்புக்கு கள்ளச்சாராயம் என தவறான தகவல் பரப்பப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் ஒருவர் குடிப்பழக்கமே இல்லாதவர்; எனவே, தவறான தகவலை பரப்ப வேண்டாம். கள்ளச்சாராயம் அருந்தியதாக போலீசாரோ, மருத்துவர்களோ உறுதிப்படுத்த வில்லை. வயிற்றுப்போக்கு, வலிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தபிறகே இந்த தகவலை கூறுகிறேன். இவ்வாறு அவர் விளக்கமளித்துள்ளார்.

கைது

இந்நிலையில், கண்ணுக்குட்டி என்ற சாராய வியாபாரி உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டிஜிபி விளக்கம்

இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட அறிக்கையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். கலெக்டர் எஸ்பி ஆகியோர் நேரில் விசாரணை நடத்துகின்றனர். சம்பவத்தின் உண்மை தன்மை குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரிக்கின்றனர் எனக்கூறியுள்ளார்.

இபிஎஸ் கண்டனம்

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கை: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 9 பேர் உயிரிழந்ததாகவும் 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வருகின்ற செய்திகள் கவலையளிக்கின்றன.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் , வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுவதை தொடர்ச்சியாக நான் சுட்டிக்காட்டி வந்தும், இதனால் ஏற்கனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூட கள்ளச்சாராயத்தை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
'கள்ளச்சாராயம் இல்லை- மெத்தனால்' என்று சொன்னது போல மக்கள் வாழ்க்கை விஷயத்தில் வார்த்தை விளையாட்டு விளையாடாமல், கள்ளச்சாராயத்திற்கு எந்த பெயர் இருந்தாலும் அதனை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

அண்ணாமலை கண்டனம்

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சியில் ஒன்பது பேர், கள்ளச்சாராயத்துக்குப் பலியாகியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மரக்காணம், மதுராந்தகம் பகுதிகளில், கள்ளச்சாராயத்துக்கு 23 உயிர்களைப் பறிகொடுத்து ஒரு ஆண்டே ஆன நிலையில், கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த, திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாகியிருக்கிறது. கள்ளச்சாராய வியாபாரிகளுடன், திமுக அமைச்சர் மஸ்தான் நெருங்கிய தொடர்பில் இருந்த விவரம் கடந்த ஆண்டே தெரியவந்தும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கண்துடைப்புக்காக நாடகமாடி, மீண்டும் ஒன்பது உயிர்களைப் பறித்திருக்கும் திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் முழுவதும் ஆறாக ஓடும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் திறனில்லாமல் தொடர்ந்து உயிர்கள் இழப்பிற்குப் பொறுப்பான மதுவிலக்குத் துறை அமைச்சர் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும். கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருக்கும் அமைச்சர் மஸ்தான் மற்றும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காத துறை அமைச்சர் முத்துசாமி ஆகிய இருவரையும் உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


கள்ளக்குறிச்சிக்கு அமைச்சர்கள் விரைவு

கள்ளக்குறிச்சியில் ஏற்கனவே ஒன்பது பேர் பலியான நிலையில் பொதுப்பணித்துறை எ,வ,வேலு, மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் கள்ளக்குறிச்சிக்கு வரைந்துள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு விரைவாக நிவாரணம கிடைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதை தொடரந்து அமைச்சர்கள் நேரில் சென்றுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறுகின்றனர்

தடயங்கள் சேகரிப்பு

சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட தடயங்கள் விழுப்புரம் மாவட்ட தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்