வந்தே மெட்ரோ ரயில் ஓரிரு மாதங்களில் ஓடும்
20 ஆனி 2024 வியாழன் 03:50 | பார்வைகள் : 1550
வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணி முடிந்து, இறுதிக்கட்ட ஆய்வு நடப்பதாகவும், ஓரிரு மாதங்களில், முதல் ரயில் இயக்கப்படும் எனவும், ஐ.சி.எப்., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்., தொழிற்சாலையில், முதல் முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும், 'வந்தே பாரத்' ரயில்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மெட்ரோ ரயில் போக்குவரத்துக்காக, 'வந்தே மெட்ரோ' ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. குறுகிய துாரத்திற்கு வேகமாக செல்லும் வகையில், இந்த ரயில் இருக்கும். முதல் ரயில் தயாரித்துள்ள நிலையில், அதில் இறுதிக்கட்ட ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து, ஐ.சி.எப்., அதிகாரிகள் கூறியதாவது:
முதல் வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணி முடிந்து, ஐ.சி.எப்., வளாகத்தில் உள்ள ரயில் பாதையில் இயக்கி இறுதிக்கட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அடுத்த கட்டமாக, வேகமாக ஓட்டி சோதனை நடத்த உள்ளோம். அடுத்த ஓரிரு மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும்.
பயணியரை கவரும் வகையில் உள்அலங்காரமும், சொகுசு இருக்கைகளும் இருக்கும். ரயிலின் வேகத்தை விரைவாக கூட்டுவதோடு, மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.
தற்போது குறுகிய துாரத்தில் இயக்கப்படும், 'மெமு' வகை ரயில்களை நீக்கி விட்டு, படிப்படியாக வந்தே மெட்ரோ ரயில் பெட்டிகளை இணைத்து இயக்க, ரயில்வே முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.