Paristamil Navigation Paristamil advert login

ஆண்களை விட பெண்களுக்கு அதிகளவிலான மனக்கவலை ஏற்படக் காரணம் என்ன?

ஆண்களை விட பெண்களுக்கு  அதிகளவிலான மனக்கவலை ஏற்படக் காரணம் என்ன?

20 ஆனி 2024 வியாழன் 09:22 | பார்வைகள் : 1419


மனக்கவலை கோளாறுகள் பொதுவாக அனைவருக்கும் உண்டாகும் ஒன்று தான். ஆண் பெண் பேதம் இன்றி அனைவருக்கும் மனக்கவலை கோளாறுகள் ஏற்பட்டாலும், புள்ளி விவரத்தின் அடிப்படையில் பார்க்கையில் ஆண்களை விட பெண்களே அதிகளவு மனக்கவலை கோளாறுகளுக்கு உள்ளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்த ஐந்து முக்கிய காரணங்களை பற்றி இப்போது பார்ப்போம்.
உயிரியல் காரணங்கள்: உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் ஆண்களை விட பெண்களுக்கு மிகவும் வித்தியாசமான முறையில் செயல்படும். குறிப்பாக மாதவிடாய் காலங்களின் போதும், கருவுற்ற காலங்களிலும் பெண்களின் உடலில் உண்டாகும் மாற்றங்கள் வித்தியாசமானவை. குறிப்பாக பெண்களுக்கு உள்ள ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்டேரோன் என்னும் இரண்டு முக்கிய ஹார்மோன்கள் அவர்களை மூளையில் வித்தியாசமான வேதியல் மாற்றங்களை உண்டாக்குகின்றன. இவற்றினால் பெண்கள் ஆண்களை விட அதிக அளவில் மனக்கவலை கோளாறுகளுக்கு ஆளாகின்றனர்.

சமாளிக்கும் உத்திகள்: மன அழுத்தம் ஏற்படும் போது அதனை சமாளிக்க பொதுவாக ஆண்களும் பெண்களும் வெவ்வேறு வித்தியாசமான வழிமுறைகளை கையாள்கின்றனர். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்கள் பற்றி வெளியே சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே வைத்துக்கொண்டு, அதிகளவு எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்கின்றனர். ஆண்களோ மன அழுத்தத்தை போக்க வித்தியாசமான வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். இதன் காரணமாக ஆண்களை விட பெண்களுக்கு மனக்கவலைகள் அதிகமாக உள்ளன.

மூளையில் ஏற்படும் வேதியல் மாற்றங்கள்! மூளையில் அவ்வபோது ஏற்படும் வேதியல் மாற்றங்களை பொருத்தவரை ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகப் பெரும் அளவில் வித்தியாசம் உள்ளது. இந்த மாற்றங்கள் ஆண்களுக்கு ஒரு விதமாகவும் பெண்களுக்கு வேறு விதமாகவும் வேலை செய்கிறது. இதுவும் பெண்களுக்கு அதிக அளவில் மனக்கவலை கோளாறுகள் ஏற்பட காரணமாக உள்ளது. உதாரணத்திற்கு பெண்களின் உடலில் உள்ள செரோடொனின் மற்றும் மனநிலை சம்பந்தமான மாற்றங்களை கட்டுபடுத்தும் நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் பெண்களுக்கு வேறு விதமாக வேலை செய்கிறது. இதனால் ஆண்களை விட பெண்களுக்கு மனக்கவலைகள் இயற்கையாகவே அதிகமாக உள்ளது

இழிவாக நடத்தபடுவது மற்றும் அதிர்ச்சி சம்பவங்கள்: இன்றைய நவீன சமூகத்திலும் பெண்கள் உடலளவிலும் மனதளவிலும் பல்வேறு ஒடுக்குமுறைகளை சந்திக்க வேண்டி உள்ளது. உதாரணத்திற்கு பொது இடத்தில் ஒரு பெண் சென்றால் கூட பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்றியும், ஒரு வித அச்சத்துடனேயே செல்ல வேண்டிய சூழலே நிலவுகிறது. ஆண்களை விட பெண்கள் உடலளவில் பெருமளவு துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். மேலும் பாலில் அச்சுறுதல்களுக்கும் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம். இவற்றை தவிர்த்து சிறு வயதில் சந்தித்த கொடுமைகள், அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் ஆகியவை ஒட்டுமொத்தமாக சேர்ந்து பெண்களுக்கு அதிகளவு மனக்கவலைகள் ஏற்பட காரணமாக உள்ளது.

உளவியல் அழுத்தம் : ஆண்களை விட பெண்கள் உளவியல் ரீதியாக அதிகளவு அழுத்தங்களை சந்திகின்றனர். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால், அலுவலக பணியையும் பார்த்துக் கொண்டு, வீட்டில் உள்ள வேலையையும் பார்க்க வேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது. இது உடலளவிலும் மனதளவிலும் சோர்வை உண்டாக்கி, அதிகளவு மனக்கவலை கோளாறுகள் ஏற்பட காரணமாகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்