போலீசாரால் உயிருக்கு அச்சுறுத்தல் மேற்கு வங்க கவர்னர் குற்றச்சாட்டு
21 ஆனி 2024 வெள்ளி 01:31 | பார்வைகள் : 1996
கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் உள்ள கோல்கட்டா போலீசாரால் எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது,” என, மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.இங்கு கவர்னர் ஆனந்த போஸ் மற்றும் ஆளும் திரிணமுல் காங்., இடையே சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது.
விசாரணை
கவர்னர் மாளிகையில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்யும் பெண் ஒருவர், கவர்னர் போஸ் மீது பாலியல் புகார் அளித்தார். அது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
சமீபத்தில் மாநில பா.ஜ., தலைவர் சுகந்த மஜும்தார் உள்ளிட்டோர் கவர்னர் போஸை சந்திக்க கவர்னர் மாளிகைக்கு வந்தனர். உரிய அனுமதி இருந்தும் அவர்களை உள்ளே விடாமல் கோல்கட்டா போலீசார் தடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, 'கவர்னர் மாளிகையில் இருந்து போலீசார் அனைவரும் வெளியேற வேண்டும்' என, கவர்னர் உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் அவர்கள் இன்னும் பணியில் உள்ளனர்.
நடவடிக்கை
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கவர்னர் போஸ் கூறியதாவது:
கவர்னர் மாளிகையில் பணியில் உள்ள போலீசார் மற்றும் அவர்களுக்கான பொறுப்பு அதிகாரியால் எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது.
இதற்கான தகுந்த காரணங்கள் என்னிடம் உள்ளன.
பாதுகாப்பற்ற சூழலில் இருப்பது குறித்து மாநில முதல்வர் மம்தாவிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இங்கே பணியில் உள்ள போலீசார், என் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
அவர்களின் அரசியல் எஜமானர்களின் ஆதரவுடன் இது நடக்கிறது. என்னைப் பற்றிய தகவல்களை வேறு சிலருக்கு அவர்கள் வழங்கி வருகின்றனர்.
அவர்கள் யார் என்று எனக்கு தெரியும். ஆனால், அதை சொல்ல விரும்பவில்லை.
கவர்னர் மாளிகையில் பணியாற்றும் போலீசார் ஏதேனும் குற்றச் செயல்கள் செய்தால், அதற்கு மாநில உள்துறை அமைச்சர் தான் பொறுப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.
கவர்னர் போஸ், போலீசார் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியதை அடுத்து மாநில அரசுக்கும், அவருக்கும் இடையிலான மோதல் அதிகரித்து மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.