Paristamil Navigation Paristamil advert login

வீடுகளுக்கு குழாயில் இயற்கை எரிவாயு; தமிழகம் முழுதும் 30,000 பேர் பதிவு

வீடுகளுக்கு குழாயில் இயற்கை எரிவாயு; தமிழகம் முழுதும் 30,000 பேர் பதிவு

21 ஆனி 2024 வெள்ளி 01:33 | பார்வைகள் : 493


சென்னையில் 500 வீடுகளுக்கு குழாயில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்படும் நிலையில், தமிழகம் முழுதும் காஸ் வினியோக நிறுவனங்களிடம், இதுவரை 30,000 பேர் பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், 14.20 கிலோ எடையில் எல்.பி.ஜி., சமையல் காஸ் சிலிண்டர் வினியோகம் செய்கின்றன. இந்த எரிவாயு, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின் போது வெளியேறும் மூலப்பொருளில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

கர்நாடகா, குஜராத் உட்பட பல மாநிலங்களில், வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்படுகிறது. இது, எல்.பி.ஜி., காஸ் உடன் ஒப்பிடும் போது, 20 சதவீதம் செலவு குறைவாக இருப்பதுடன், சுற்றுச்சூழலையும் பாதிப்பதில்லை.

தமிழகத்தில் குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்ய, இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில், எண்ணுார் துறைமுக வளாகத்தில், எல்.என்.ஜி., எனப்படும் திரவ நிலை இயற்கை எரிவாயு முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு வெளிநாடுகளில் இருந்து கப்பலில் எரிவாயு எடுத்து வரப்படுகிறது. இந்த எரிவாயு, வாகனங்களுக்கு சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவாகவும், வீடுகளுக்கு பி.என்.ஜி., எனப்படும் குழாய் வழித்தடம் வாயிலாகவும் வினியோகம் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் 2030க்குள் 2.30 கோடி வீடுகளுக்கும், 2785 சி.என்.ஜி., மையங்கள் வாயிலாக வாகனங்களுக்கும் இயற்கை எரிவாயு வினியோகம் செய்ய, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், டோரண்ட் காஸ், அதானி உட்பட ஏழு நிறுவனங்களுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இத்திட்டத்தை ஒருங்கிணைக்கும் முகமையாக, 'டிட்கோ' எனப்படும் தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் செயல்படுகிறது. வீடுகளுக்கு குழாயில் எரிவாயு வினியோகம் செய்ய, குழாய் வழித்தடம் அமைக்கும் பணியில் காஸ் வினியோக நிறுவனங்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன.

சென்னையில் டோரண்ட் நிறுவனம், அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் 5000 வீடுகள் குழாயில் எரிவாயு வினியோகிக்க பதிவு செய்துள்ள நிலையில், 500 வீடுகளில் எரிவாயு வினியோகம் செய்கிறது. மாநிலம் முழுதும் இதுவரை 30,000 வீடுகள் குழாய் எரிவாயு பெற, காஸ் வினியோக நிறுவனங்களிடம் பதிவு செய்துள்ளன. வாகனங்களுக்கு வினியோகிக்க, 326 சி.என்.ஜி., மையங்கள் செயல்படுகின்றன.

இது குறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் ஏழு காஸ் வினியோக நிறுவனங்களும், வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில் எரிவாயு வினியோகிக்க குழாய் பதிக்கும் பணிகளை வேகமாகச் செய்கின்றன; அந்த பணி நிறைவடையும் இடங்களில் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி முன்பதிவு செய்கின்றன.

ஒவ்வொரு நிறுவனமும் பதிவு செய்வோருக்கு, பல்வேறு கட்டண சலுகைகளை வழங்குகின்றன. குழாய் பதிக்க விரைந்து அனுமதி வழங்குமாறு, உள்ளாட்சி அமைப்புகளிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்