கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பல கோடி ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள்
21 ஆனி 2024 வெள்ளி 12:35 | பார்வைகள் : 1846
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 4 கோடியே 80 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை எடுத்துச் செல்ல முயன்ற விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை விமானத்தில் வந்த நபர் ஒருவர் 18 தங்க பிஸ்கட்டுகளை புலம்பெயர்ந்த விமான பயணிகள் முனையத்தின் மலசலகூடத்தில் வைத்து குறித்த அதிகாரியிடம் கொடுத்துள்ள நிலையில், அவர் அவற்றை தனது ஆடையில் மறைத்துக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்றதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்போது, சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுகள் 02 கிலோ 86 கிராம் எடையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் 15 வருடங்களாக விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய 40 வயதுடைய ஹக்மன பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
60 ஆயிரம் ரூபாவுக்காக குறித்த தங்க பிஸ்கட்டுகளை விமான நிலையத்திலிருந்து வௌியே எடுத்துச் செல்ல இந்த பாதுகாப்பு அதிகாரி முயற்சித்ததாக சுங்கப் பிரிவினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.