நடிகரில் தொடங்கி அரசியல் கட்சி வரை ...! விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்!
22 ஆனி 2024 சனி 09:25 | பார்வைகள் : 1704
பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பாடகி ஷோபா தம்பதிக்கு, சென்னையில் 1974, ஜூன் 22ஆம் தேதி மகனாக பிறந்தவர் நடிகர் ஜோசப் விஜய். சமுதாயக் கருத்துகளை கொண்டு பரபரப்பான இயக்குநராக எஸ்.ஏ.சந்திரசேகர் வலம் வந்து கொண்டிருந்த நேரத்தில், வெற்றி, நான் சிவப்பு மனிதன், சட்டம் ஒரு விளையாட்டு போன்ற படங்களில் விஜய்யை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார்.
குடும்பமே சினிமா குடும்பம் என்பதால், சிறு வயதிலேயே திரைப்படங்கள் மீதும் திரைத்துறையின் மீதும் விஜய்க்கு ஆர்வம் அதிகரித்தது. எனவே, கல்லூரியில் அது தொடர்பான படிப்பையே தேர்வு செய்தார் விஜய். ஆனால் நடிக்கும் ஆர்வத்தில் இருந்த விஜய் விசுவல் கம்யூனிகேசன் படிப்பை பாதியில் விட்டுவிட்டு நடிக்க வந்துவிட்டார்.
அம்மா ஷோபா திரைக்கதையில், அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் விஜய். ஆனால், அந்த படம் பெரிய அளவுக்கு கைகொடுக்காததால், விஜயகாந்தை வைத்து எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய செந்தூரபாண்டி படத்தில் விஜய்யை அவரது தந்தை நடிக்க வைத்தார். இப்படி, விஜய்யின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்தான் காரணம் என்பதை மறுக்க முடியாது.
செந்தூரபாண்டி படத்தின் மூலம் பட்டிதொட்டியெங்கும் ஊடுருவிய நடிகர் விஜய், தொடர்ந்து தந்தையின் இயக்கத்திலேயே ரசிகன், தேவா, விஷ்ணு என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். வெறும் நடிப்போடு நின்றுவிடாமல் கமர்ஷியல் ஹீரோவுக்கு தேவையான நடனம், ஆக்ஷன் ஆகியவற்றையும் கற்றுக் கொண்டு படிப்படியாக முன்னேறத் தொடங்கினார் விஜய்.
இருப்பினும், சாதாரண ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்த விஜயை 1996ஆம் ஆண்டு வெளியான ‘பூவே உனக்காக’ படத்தின் மூலம் வெளியே கொண்டு வந்தவர் இயக்குநர் விக்ரமன். இந்த படத்தின் இறுதியில் விஜய் பேசிய காதல் வசனங்கள் விஜய்யை ரசிகர்களிடையே பிரபலமாக்கியது. இதற்கு முன்பு விஜய் நடித்த அத்தனைப் படங்களில் இருந்து முழுமையாக மாறி, புதுப்பொலிவுடன் வெளியான விஜய்க்கு ரசிகர் பட்டாளம் குவியத் தொடங்கியது. இதுதான் விஜய்யின் முதல் வெற்றிப் படிக்கட்டு.
திரை வாழ்க்கைக்கு மட்டுமின்றி, திருமண வாழ்க்கைக்கும் ‘பூவே உனக்காக’ திரைப்படம்தான் முக்கியமானது. இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டு, லண்டனில் படித்து வளர்ந்த ஈழத்தமிழர் சங்கீதா, ‘பூவே உனக்காக’ படத்தைப் பார்த்துதான், விஜய்யின் தீவிர ரசிகராக மாறினார். விஜய்யை பார்ப்பதற்காக லண்டனில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்தவர், முதலில் ரசிகையாக அறிமுகமாகி, பின்னர் தோழி, காதலி என மாறி மனைவியாகவும் மாறினார்.
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பாலசேகரன் இயக்கத்தில் வெளியாகி வெள்ளிவிழா கண்ட ‘லவ் டுடே’ இளைஞர்களிடம் விஜய்க்கான தனி இடத்தைப் பிடித்துக் கொடுத்தது. 1998ல் சங்கிலி முருகன் தயாரிப்பில் ஃபாசில் இயக்கத்தில் வெளிவந்த ‘காதலுக்கு மரியாதை’ திரைப்படம் விஜய்யை அனைத்து வீடுகளுக்குள்ளும் கொண்டு சேர்த்தது. இளையராஜாவின் இசையும், படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. இந்த படம் தான் விஜய்யை இளைஞர்களைத் தாண்டி, பிற வயதினரையும் கவர்ந்திழுக்க வைத்தது.
அதன்பின்னர் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆன விஜய், 1999, ஆகஸ்ட் 25ஆம் தேதி தனது காதலி சங்கீதாவை குடும்பத்தினரின் ஆசியோடு கரம்பிடித்தார். அன்று முதல் விஜய்யின் காஸ்ட்யூம் டிசைனராக மாறிப் போனார் சங்கீதா. விஜய்யின் அனைத்து படங்களில் அணியும் அத்தனை காஸ்ட்யூம்களை தேர்வு செய்து கொடுப்பவர் சங்கீதா தான்.
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் எழில் இயக்கத்தில் வெளியான ‘துள்ளாத மனமும் துள்ளும்’ திரைப்படமும் விஜய்க்கு நல்ல பெயரை எடுத்துக் கொடுத்தது. விஜய் - சிம்ரன் இடையிலான கவித்துவமான காதல் ரசிகர்களை கவர்ந்தது. தனித்துவமான கதை, இனிமையான பாடல்கள், விஜய்யின் நடிப்பு, நடனம், நகைச்சுவை ஆகியவை இந்த படத்திற்கு பெரும் வெற்றியை வாங்கிக் கொடுத்தது.
ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான ‘குஷி’ படத்தின் மூலம் மற்றொரு உச்சத்தை எட்டினார் விஜய். காதலர்களுக்குள் ஏற்படும் ஈகோவை விஜய் - ஜோதிகா இருவருமே அற்புதமாக வெளிப்படுத்த, மெகா ஹிட் அடித்தது அந்த திரைப்படம். அதேபோல், சித்திக் இயக்கத்தில் நகைச்சுவை கதையாக வெளிவந்து சக்கைப் போடு போட்ட பிரண்ட்ஸ், பிரியமானவளே, பத்ரி, ஷாஜகான், யூத், பகவதி, திருமலை என அடுத்தடுத்து கமர்ஷியல் படங்களில் நடித்து, தனக்கென ஒரு தனி இடத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் விஜய்.
அதன்பிறகு தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ஒக்கடு படத்தை விஜய்யை வைத்து இயக்குநர் தரணி ரீமேக் செய்தார். அந்த படம்தான் கில்லி. 2004ஆம் ஆண்டு வெளியான கில்லி, பட்டித்தொட்டியெங்கும் சொல்லியடித்தது. தொடர்ந்து திருப்பாச்சி, சிவகாசி ஆகிய படங்களும் கை கொடுக்க, பின்னர் பிரபுதேவா இயக்கிய ‘போக்கிரி’ அசுரத்தனமான வெற்றியைக் கொடுத்தது.
இடையிடையே சில தோல்வி படங்கள் வந்தாலும், சோர்ந்து போகாத விஜய், சங்கர் இயக்கத்தில் நண்பன், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி ஆகிய படங்கள் மூலம் தனது இமேஜை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டார். பின்னர் கத்தி, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்த விஜய், அவ்வபோது சில தோல்வி படங்களையும் கொடுத்தார். ஆனால், அந்த படங்கள் அனைத்தும் கமர்ஷியல் ரீதியாக வெற்றிபெற்றது என்பதுதான் முக்கியமான விஷயம்.
திரைப்படங்களில் நடித்து வந்தாலும், அவ்வபோது சமூக நலனிலும் அக்கறை செலுத்தி வந்த நடிகர் விஜய், தனது ரசிகர்கள் மன்றங்கள் மூலம் பல்வேறு நலத்திட்டப் பணிகளையும் செய்து வந்தார். அத்துடன், திடீரென ரசிகர்களின் வீடுகளுக்கு விசிட் அடித்து, அவர்களை உற்சாகப்படுத்தவும் தயங்கவில்லை. இதன் அடுத்தகட்டமாக, கடந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் அரசுப் பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கென்று தனியொரு விழாவை நடத்தி, அவர்களுக்கு பரிசுகளை வழங்கிய விஜய், அண்மையில் வெளியான லியோ படத்தில், ‘நான் ரெடிதான் வரவா’ என்ற பாடல் மூலம் தனது அரசியல் வருகையையும் உறுதி செய்தார்.
அதற்கு முன்னதாகவே, விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலர் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு, வெற்றியை விஜய்க்கு பரிசாக கொடுத்தனர். இதையடுத்து, அண்மையில் ‘தமிழக வெற்றிக் கழகம்’என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய், தற்போது கமிட் ஆகியிருக்கும் படங்களைத் தவிர, இனி வேறு படங்களில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்தார். அதாவது, 2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்துள்ள விஜய், தனது ரசிகர்களையும், மன்ற நிர்வாகிகளையும் அதை நோக்கி பயணிக்க வைத்துள்ளார்.
திரைப்படங்களில் சாதாரண நடிகராக தொடங்கி, சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்த நடிகர் விஜய், அடுத்து அரசியலிலும் சொல்லியடிப்பார் என்று ஆணித்தரமான நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.