Factum Perspective: இலங்கையில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் சக்தியாக விளையாட்டு மற்றும் பொருளாதாரம்
22 ஆனி 2024 சனி 16:13 | பார்வைகள் : 1248
ஆராயப்படாவிட்டாலும் அல்லது குறைவாக ஆராயப்பட்டிருந்தாலும் கூட, முதலீட்டாளர்கள் இலங்கையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய வழிமுறைகளில் ஒன்று விளையாட்டாகும். தொழிற்துறையின் விரைவான உயர்வு மற்றும் அதன் வளர்ந்து வரும் பெறுமதி, விளையாட்டில் முதலீடு செய்வதன் முக்கிய நன்மைகளில் ஒன்றாகும்.
பிரதான விளையாட்டு சுற்றுப் போட்டிகளின் வளர்ச்சி மற்றும் ஒளிபரப்பு உரிமைகளின் விரிவாக்கம் ஆகியவற்றின் விளைவாக விளையாட்டுகள் வணிகமயமாகிவிட்டதுடன், முதலீட்டாளர்களுக்கு அதிகமான வாய்ப்பு உள்ளன. இந்த ஆக்கம் இலங்கையின் விளையாட்டுத் துறையை மேம்படுத்த உதவும் முக்கிய உத்திகளை ஆராய்கிறது.
உட்கட்டமைப்பில் முதலீடு
களமட்ட விளையாட்டு பங்கேற்பு மற்றும் நிலைத்தன்மையான அபிவிருத்தி ஆகியவற்றுக்கு இடையேயான வலுவான தொடர்பை உலகளாவிய தரவு தொடர்ந்து வெளிப்படுத்துகின்றது என்று யுனெஸ்கோ கூறியுள்ளது. விளையாட்டின் மூலம் உருவாக்கப்படும் சமூக வருமானம் குறித்த தற்போதைய ஆராய்ச்சியானது, வளர்ந்து வரும் விளையாட்டில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு அமெரிக்க டொலரும் நீண்ட காலத்திற்கு 3 முதல் 124 அமெரிக்க டொலர் வரை உருவாக்குகிறது என்பதைக் காட்டுகிறது. ஆயினும்கூட, விளையாட்டுத்துறை முதலீட்டின் களமாக இன்னமும் குறைவாகப் பயன்படுத்தப்பட்டதுடன் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.
பொதுவாக விளையாட்டு மற்றும் குறிப்பாக விளையாட்டு உட்கட்டமைப்பின் நன்மைகளை உணர்ந்து, சீனா, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் தொடர்புடைய உட்கட்டமைப்பில் அதிகமாக முதலீடு செய்துள்ளன.
உதாரணமாக, சீனா, அதன் தேசிய உடற்தகுதி நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, 1995 இல் விளையாட்டு உட்கட்டமைப்பில் முதலீடு செய்ய ஆரம்பித்தது.
அவுஸ்திரேலியா சமூக விளையாட்டு உட்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் களமட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. அவுஸ்திரேலியா இப்போது சமூக விளையாட்டு உட்கட்டமைப்பு மூலம் ஒவ்வொரு ஆண்டும் USD 16.2 பில்லியன் மதிப்புள்ள சமூக, சுகாதார மற்றும் பொருளாதார நலன்களை பெறுவதாக அறிக்கையளித்துள்ளது.
பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் முழுவதும் தடகளப் போட்டிகளை வழங்குவதன் மூலம் அமெரிக்கா தனது கல்வி முறைமையில் விளையாட்டு உட்கட்டமைப்பை இறுக்கமாக ஒருங்கிணைத்துள்ளது. இது இந்த நாடுகள் உலகளாவிய விளையாட்டு சக்திகளாக மாற உதவியது.
பிரதான விளையாட்டு நிகழ்வுகளை நடாத்துதல்
ஒவ்வொரு தேசமும் ஓர் விளையாட்டு நிகழ்வை நடாத்துவதற்கு வலுவான முயற்சியை எடுப்பதற்கான அதனது சொந்த உந்துதல்களைக் கொண்டிருக்கும் போது, மிகவும் கட்டாயமானது நிதியியல் ஆதாயம் ஆகும். இந்த வகையான நிகழ்வுகள் சர்வதேச அளவில் ஒரு நாட்டின் நற்பெயரை மேம்படுத்துவதற்கும் வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதற்கும் மேலதிகமாக குறிப்பிடத்தக்க நேர்மறையான பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த நிகழ்வுகளை நடாத்துவதால், பார்வையாளர்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள, உள்ளூர் இடங்களை ஆராய்வதற்காக மற்றும் நடாத்தும் நாட்டின் கலாச்சாரத்தை அனுபவிப்பதற்காக போட்டிகளை நடாத்தும் நாட்டிற்குச் செல்வதால் சுற்றுலாவை கணிசமாக மேம்படுத்தலாம். சுற்றுலாப் பயணிகளையும் பணிகளையும் கொண்டு வருவதோடு, சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை நடாத்துவது, டிக்கெட் விற்பனை, பொருட்கள் விற்பனை மற்றும் சுற்றுலா தொடர்பான வணிகங்களில் இருந்து பணத்தை கொண்டு உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்த முடியும்.
இந்த பொருளாதார ஏற்றம் உணவு சேவைகள், போக்குவரத்து மற்றும் ஹோட்டல்கள் போன்ற பல தொழிற்துறைகளை அடிக்கடி பாதிக்கிறது. சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் சர்வதேச உறவுகள் மற்றும் இராஜதந்திரம் இடம்பெறலாம். இவை அரசியல் சிரமங்களுக்கு மத்தியில், நாடுகள் ஒத்துழைப்பதற்கும் உரையாடல்களுக்குமான நடுநிலையான தளத்தை வழங்குகின்றன.
ஓர் பெரிய விளையாட்டு நிகழ்வை நடாத்துவது பாரிய பொறுப்பாகும் என்பதுடன் 2012 ஒலிம்பிக்கிற்கான ஏலத்தை லண்டன் வென்றபோது, பலரும் நகரம் அதன் முன்னைய ஏற்பாட்டாளர்களில் சிலருக்கு ஏற்பட்ட அதே விதியை சந்திக்கும் என்று நம்பினர். இருப்பினும், அரசாங்க அறிக்கையின்படி, இவ்வாறான நிகழ்வை நடத்துவதிலிருந்து UK பொருளாதாரமானது வர்த்தகம் மற்றும் முதலீட்டில் £9.9 பில்லியன் அதிகரிப்பை கண்டது, ஆயினும் விளையாட்டுகளை நடாத்துவதற்கான செலவீனத்தை £8.9 பில்லியனாக மதிப்பிட்டுள்ளது.
பல நாடுகள் தங்களது நாடுகளில் முக்கிய விளையாட்டு நிகழ்வுகளை நடாத்துவதன் மூலம் பயனடைந்துள்ளன. 2022 இல் ஒலிம்பிக் போட்டிகளை நடாத்தும் சீனா மற்றும் FIFA உலகக் கோப்பையை கட்டார் நடாத்துவது என்பன இரண்டு உதாரணங்களாகும். 2022 இல் பெய்ஜிங் ஒலிம்பிக்கின் வருமானம் 2.29 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ள அதே நேரத்தில் செலவீனம் 2.24 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது. மீதி 52 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலாபமாக உள்ளது.
ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, 2022 உலகக் கோப்பையில் இருந்து 7.5 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை FIFA ஈட்டியுள்ளது, அந்த வருமானத்தில் இருந்து 1.56 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஏற்பாட்டாளர் நாடுகளுக்கு செல்கின்றது. கட்டாரின் வருவாய் முதன்மையாக சுற்றுலா மற்றும் வணிகப் பயணங்களில் இருந்து வருகிறது.
இலங்கை இன்னும் பொருளாதார ரீதியாக முன்னேறவில்லை என்றாலும், இது போன்ற விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஒரு நாள் அங்கு மேற்கொள்ளலாம். பல ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் இலங்கையைப் போலவே பொருளாதார ரீதியாகப் போராடிக் கொண்டிருந்தது.
சிங்கப்பூர் இப்போது Formula One பந்தயத்திற்கான ஒரே வீதிச்சுற்றை கொண்டுள்ளதுடன், இதில் ஒவ்வொரு ஆண்டும் இரவில் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் நடாத்தப்படுகிறது. இந்த நிகழ்வு மெரினா கடற்கரை வீதிச்சுற்றில் நடைபெறுவதுடன் Formula One பந்தயங்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஆசியாவின் முதலாவது இரவு பந்தய மற்றும் முதல் வீதிச்சுற்றாகும்.
சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை நடாத்துவதில் பல நன்மைகள் இருந்தாலும், குறைபாடுகளும் உள்ளன என்பதை நினைவில் கொள்வது அவசியமாகும். இதில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்தல், நிகழ்வுக்கான தளவாடங்களை முகாமை செய்தல் மற்றும் விளையாட்டு போட்டிகளின் ஒருமைப்பாட்டைப் பேணுதல் ஆகியவை உள்ளடங்கும். இந்த நிகழ்வுகளின் நேர்மறையான தாக்கத்தை அதிகரிக்க சரியான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு அவசியமாகும்.
ஒளிபரப்பு உரிமைகள் மற்றும் அனுசரணைகளை பணமாக்குதல்
ரசிகர் பட்டாளத்தை உருவாக்குதல் மற்றும் விளையாட்டுகளை ஊக்குவிப்பது ஆகிய இரண்டும் விரிவான ஊடக உள்ளடக்கத்தைச் சார்ந்துள்ளது. விளையாட்டு வீரர்கள் மற்றும் அணிகள் தொலைக்காட்சி, வானொலி, அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடக தளங்களில் அதிகரித்த உள்ளடக்கம் மூலமாக புலனாகுநிலையைப் பெறுகின்றன. இது ஆர்வத்தைத் தூண்டுவதுடன் அனுசரணைக்கான வாய்ப்புகளைத் திறக்கிறது. ஊடக நிறுவனங்களுடன் ஒத்துழைப்பதன் மூலமும், சுவாரஸ்யமான உள்ளடக்கத்தை உருவாக்குவதன் மூலமும், டிஜிட்டல் அலைவரிசைகளை பயன்படுத்துவதன் மூலமும் விளையாட்டு உள்ளடக்கத்தை மிகவும் பரவலாகக் கிடைக்கச் செய்யலாம்.
ஒளிபரப்பு மற்றும் ஊடக உரிமைகளின் விற்பனையானது விளையாட்டு வணிகத்தில் முக்கிய வருமான வழிமுறையாக மாறியுள்ளது. இந்த உரிமைகளை விற்பனை செய்வதன் மூலமான பாரியளவான பணவருகை தொழிற்துறைக்கு பல வழிகளில் பயனளித்துள்ளது. இது திறமையான விளையாட்டு வீரர்களின் இயலளவை மேம்படுத்தலையும், நீண்ட கால நிதியியல் நிலைத்தன்மை மற்றும் அணிகளின் வினைத்திறனை மேம்படுத்தலையும், சந்தையில் அவர்களை அதிக போட்டித்தன்மையுடன் உருவாக்கலையும் சாத்தியமாக்கியுள்ளது.
விளையாட்டரங்கு விளம்பரம், தொழிற்துறை அனுசரணை ஒப்பந்தங்கள் மற்றும் பெயரிடும் உரிமைகள் போன்ற பிற வருமான வழிவகைகளை அதிகரிக்க ஒளிபரப்பு உரிமைகள் உதவுவதுடன், இவை அனைத்தும் ஒளிபரப்பு வழங்குகின்ற புலனாகுநிலையின் காரணமாக கூடுதல் மதிப்பைப் பெறுகின்றன.
எமது உள்ளூர் திறமைகளுக்காக இலங்கை மற்றைய நாடுகளின் ரசிகர்களை ஈர்க்க முடிந்தால், அது விளையாட்டு வீரர்களுக்கும் நாட்டுக்கும் பெரும் நன்மையை தரும். சரியான வசதிகள் வழங்கப்பட்டால், இலங்கை விளையாட்டு வீரர்கள் மற்றைய நாடுகளின் பார்வையாளர்களை ஈர்க்கவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கவும் மற்றும் வெளிநாட்டுப் பணத்தைக் கொண்டு வரவும் முடியும் என்பதிலும் சந்தேகமில்லை. திறமைகளை ஒளிபரப்புவதே நம்மால் முடியுமான ஒரே வழிமுறையாகும்.
IPL இனைப் பாருங்கள். இந்தியன் பிரீமியர் லீக் இந்தியாவில் ஆண்டுதோறும் நடாத்தப்படுகிறது. இது 2007 இல் BCCI ஆல் நிறுவப்பட்டதுடன், பத்து நகர அடிப்படையிலான உரிமையாளர் அணிகளால் போட்டியிடப்படுகிறது. 2023-27 IPL தொடரின் தொலைக்காட்சி உரிமை 5.1 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது.
இலங்கையிலும் உள்நாட்டு கிரிக்கெட் சுற்றுப்போட்டி உள்ளது. நாம் அதிகமான முதலீட்டாளர்களை கண்டுபிடிக்க வேண்டும், எனவே உரிமையாளர்கள் மிகவும் பிரபலமான வெளிநாட்டு வீரர்களை ஈர்க்க முடியும். அதிகமான ரசிகர்கள் வரும் போது அதிகமான பணம் கிடைக்கும்.
விளையாட்டு வாய்ப்புகளை பல்வகைப்படுத்துதல்
சமீபத்திய ஆண்டுகளில், இலங்கை கிரிக்கெட், ரக்பி மற்றும் கால்பந்தாட்டம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளில் தனது திறமைக்காக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நேசத்துக்குரிய விளையாட்டுகளுக்கான உற்சாகத்தின் மத்தியில் பயன்படுத்தப்படாத திறன்களின் ஓர் பகுதி உள்ளது.
ரக்பி பெருமைக்குரியதுடன் கிரிக்கெட் ஒரு தேசிய ரிதியான ஈர்ப்புடையதாகும், ஆனால் நாட்டின் விளையாட்டுக் கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டையும் உயர்த்தும் திறனைக் கொண்டுள்ள பயன்படுத்தப்படாத விளையாட்டு சந்தை உள்ளது. இதில் கரப்பந்து போன்ற விளையாட்டுகளும் உள்ளடங்கும். அவை பாரம்பரியமாக தேசத்தில் பிரபலமாக இல்லாவிட்டாலும், இவை வளர்ச்சி மற்றும் சர்வதேச கவனத்திற்கு மகத்தான வாக்குறுதியைக் கொண்டுள்ளது.
நாட்டின் தேசிய விளையாட்டாக இருந்தாலும், இலங்கை கரப்பந்து அணி போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை. 2011 இல், ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப்பில் இலங்கை எட்டாவது இடத்தைப் பிடித்தது. சில கடின உழைப்புக்குப் பிறகு, கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற மத்திய ஆசிய ஆண்களுக்கான கரப்பந்து சவால் கோப்பையை வென்றது.
அரச ஆதரவு மற்றும் கொள்கை
அரசு மற்றும் பொதுத்துறையில் விளையாட்டு நிகழ்ச்சித் திட்டங்களை மேம்படுத்துவதில் விளையாட்டுக் கொள்கை முக்கிய பங்கு வகிக்கிறது. ஓர் தெளிவான மற்றும் நன்கு வரையறுக்கப்பட்ட விளையாட்டுக் கொள்கையானது விளையாட்டு விருத்திக்கான கட்டமைப்பை வழங்குவதோடு அரசாங்கத்தின் இலக்குகள் மற்றும் நோக்கங்களுடன் திட்டங்கள் இணங்கியிருப்பதை உறுதிசெய்ய உதவும்.
மேலதிகமாக, விளையாட்டு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை ஆதரிப்பதில் அரசாங்க நிதியுதவி பிரதான பங்கு வகிக்கிறது. விளையாட்டு வசதிகள், பயிற்றுவிப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் திறமைகளை அடையாளம் காணும் நிகழ்ச்சித் திட்டங்கள் போன்ற வளங்களை வழங்க அரசாங்க நிதி உதவியாக இருக்கும். இது விளையாட்டு விஞ்ஞான ஆராய்ச்சியை ஆதரிக்கவும், உயர்தர விளையாட்டு நிகழ்ச்சித் திட்டங்களுக்கு நிதி வழங்கவும் பயன்படுத்தப்படலாம்.
விளையாட்டுத்துறையை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய தேசிய விளையாட்டு பல்கலைக்கழகத்தை திறப்பது முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும். விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க, பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனத் தெரிவித்தார். இந்த ஆண்டு முதல் காலாண்டில் செயற்பாடுகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டது. இலங்கை அரசாங்கம் பாடசாலை கிரிக்கெட்டுக்காக 1.5 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
விளையாட்டு நீண்ட காலமாக சமூகத்திற்கு முக்கியமானது, ஏனெனில் அவை ஒருங்கிணைப்பு, உளக்கூர்மை மற்றும் உடற்தகுதி ஆகியவற்றை மேம்படுத்துகின்றன. இருப்பினும், விளையாட்டு திறன் தனிநபர் விருத்தி மற்றும் பொழுதுபோக்குக்கு அப்பாற்பட்டதாகும். வினைத்திறனாக பயன்படுத்தினால், விளையாட்டு பொருளாதார வலுவூட்டல், இளைஞர் ஈடுபாடு மற்றும் தேசிய வளர்ச்சிக்கான ஊக்கியாக மாற்றமடையும்.
விளையாட்டுக்கு தனித்துவமான ஆற்றல் உள்ளது. அவை சமூகங்கள் மற்றும் முழு நாடுகளையும் பாதிக்கின்றன. அவை பலவிதமான உணர்வுகளையும் ஆர்வத்தையும் தூண்டலாம். அவை கடினமான காலங்களில் தனிநபர்களை மேம்படுத்த முடியும். அவற்றால் கடினமான காலங்களில் நாடுகளுக்கு, அதாவது இலங்கை போன்ற நாடுகளுக்கு உதவ முடியும்.
சுஹாஸ் ஜெயலத் கடந்த வருடம் க.பொ.த உயர்தரத்தில் சித்தி பெற்றார். CIMA மற்றும் IIT இல் ஈடுபட்டுள்ள அவர், கால்பந்து, கிரிக்கெட் மற்றும் ஃபார்முலா 1 ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவராவார். அவரை suhasjayalath@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.
Factum என்பது ஆசிய – பசுபிக்கை மையமாக கொண்ட சர்வதேச உறவுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றிய சிந்தனைக் குழுவாகும், அதனை www.factum.lk மூலமாக அணுகலாம்.
இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் ஆசிரியரின் சொந்தக் கருத்துக்கள் என்பதுடன் நிறுவனத்தின் பிரதிபலிப்புக்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
நன்றி வீரகேசரி