அடக்கு முறையை கண்டு அஞ்ச மாட்டோம்: ஆர்ப்பாட்டத்தில் இ.பி.எஸ்., பேச்சு
24 ஆனி 2024 திங்கள் 07:18 | பார்வைகள் : 1464
திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. அடக்கு முறையை கண்டு அஞ்ச மாட்டோம்' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறினார்.
கள்ளச்சாராயத்தை ஒழிக்க தவறியதாக, தமிழக அரசைக் கண்டித்து கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது. அப்போது இ.பி.எஸ்., பேசியதாவது:
உயர் அதிகாரிகளுடன் பலமுறை கூட்டம் நடத்திய முதல்வர் ஸ்டாலின் கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிவிட்டார். ஏழைகளை பற்றி அரசுக்கு கவலையில்லை. நகரின் மையப்பகுதியில் அரசின் ஆதரவு இல்லாமல் கள்ளச்சாராயம் விற்பனை செய்ய முடியாது. அடக்கு முறையை கண்டு அஞ்ச மாட்டோம்.
பொறுப்பு தமிழக அரசு தான்
கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். 58 மரணங்களுக்கும் பொறுப்பு தமிழக அரசு தான். காற்றை எப்படி தடை செய்ய முடியாதோ, அதுபோல மக்களின் உணர்வுகளை தடை செய்ய முடியாது. மக்களுக்கு நீதி கேட்பதில் என்ன தவறு. போராட்டத்தை முடக்க முயன்றாலும், அஞ்ச மாட்டோம். திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது.
ஆறாய் ஓடும் கள்ளச்சாராயம்
அதிகாரத்தை வைத்துக்கொண்டு தி.மு.க.,வினர் அதிகாரிகளை ஆட்டிப்படைக்கிறார்கள். அ.தி.மு.க.,வின் ஆர்ப்பாட்டத்திற்கு மேடை அமைக்கக்கூட இடையூறு செய்தார்கள். தற்காலிக மேடையில் இப்போது நிற்கிறேன். மாவட்ட கலெக்டர் பொய் கூறியதால், கள்ளச்சாராயம் குடித்தவர் பலர் சிகிச்சைக்கு வராமல் உயிரிழந்தனர். தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுகிறது. இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.