அமெரிக்காவை பந்தாடிய ஜோஸ் பட்லர்! அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து அணி
24 ஆனி 2024 திங்கள் 08:51 | பார்வைகள் : 1315
ஐசிசி டி20 உலகக் கோப்பையில் அமெரிக்க அணியை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பையில் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்களின் சிறப்பான விளையாட்டால் அமெரிக்க அணி 18.5 ஓவர்களில் 115 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அமெரிக்க அணியில் அதிகபட்சமாக நிதிஷ் குமார் 30 ஓட்டங்களும், கோரி ஆண்டர்சன் 29 ஓட்டங்களும் குவித்தனர்.
இங்கிலாந்து அணியில், கிறிஸ் ஜோர்டான் 4 விக்கெட்டுகளையும், சாம் கரன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
116 ஓட்டங்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியில், கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் பிலிப் சால்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி எளிதான வெற்றியை உறுதி செய்தனர்.
பட்லர் 38 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் விளாசி 83 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். பிலிப் சால்ட் 21 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன்மூலம் 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து அணி இலக்கை எட்டி வெற்றியை தனதாக்கியது.
அத்துடன் 'சூப்பர் 8' சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவை 10 விக்கெட்டுகளில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.