யூரோ கிண்ணம்... ஸ்கொட்லாந்து Vs ஹங்கேரி ஆட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்

24 ஆனி 2024 திங்கள் 08:56 | பார்வைகள் : 3136
ஸ்கொட்லாந்து vs ஹங்கேரி போட்டியின் இடையே பர்னபாஸ் வர்கா பலத்த காயம் அடைந்த நிலையில், அரங்கமே சில நிமிடங்கள் ஸ்தம்பித்துப் போனது.
ஹங்கேரியின் ஸ்ட்ரைக்கரான பர்னபாஸ் வர்கா ஸ்கொட்லாந்தின் முதன்மை வீரரான அங்கஸ் கன் மீது மோதியத்தில் பலத்த காயங்களுடன் தப்பியுள்ளார். மோதிய வேகத்தில் சுருண்டு விழுந்த வர்கா, சில நிமிடங்கள் மூச்சு பேச்சின்றி காணப்பட்டார்.
இதனையடுத்து உடனடியாக நடுவர் ஆட்டத்தை நிறுத்தினார். சக ஹங்கேரி வீரர்கள் துரிதமாக செயல்பட்டு, வர்காவை சுயநினைவுக்கு கொண்டு வந்தனர். மருத்துவ உதவிக் குழுவினரும் உடனடியாக களத்தில் வரவழைக்கப்பட்டனர்.
மட்டுமின்றி, மருத்துவ உதவி முன்னெடுக்கப்பட்ட போது அவரது தனியுரிமையை பாதுகாக்க அவரை சுற்றி ஊழியர்கள் போர்வைகளால் அரண் அமைத்து நின்றனர்.
இச்சம்பவத்தால் பல வீரர்கள், லிவர்பூல் நட்சத்திரம் மற்றும் ஹங்கேரி அணித்தலைவர் Dominik Szoboszlai உட்பட பலர் கண்கலங்கியபடி களத்தில் காணப்பட்டனர். இதனிடையே, சுமார் 10 நிமிடங்கள் முதலுதவி அளித்த பின்னர் வர்கா களத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டார்.
இருதரப்பு ரசிகர்களும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர். இந்த நிலையில், தலைமை பயிற்சியாளர் மார்கோ ரோஸ்ஸி தனது போட்டிக்கு பிந்தைய நேர்காணலில் தெரிவிக்கையில்,
வர்காவுக்கு முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால், இனி வரும் யூரோ கிண்ணம் ஆட்டங்களில் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்கா உயிருக்கு ஆபத்தில்லை என்றும், முகத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை முன்னெடுக்கப்படும் என மார்கோ ரோஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.