பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் அமைதியாக ஈடுபட உதவும் குறிப்புகள்...
24 ஆனி 2024 திங்கள் 13:51 | பார்வைகள் : 1295
பிள்ளைகளை வளர்ப்பது என்பது ஒரு அற்புதமான, அதே நேரத்தில் சவால்கள் நிறைந்த ஒரு பயணம் ஆகும். துக்கம் இல்லாத இரவுகளில் துவங்கி குழந்தையோடு ஓடி ஆடி, அவர்கள் பின்னே ஓடுவது மற்றும் அவர்கள் பெரியவர்கள் ஆனதும் அவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்வது நிச்சயமாக எல்லோராலும் சாதாரணமாக செய்து விட முடியாது.
பிள்ளைகளை வளர்ப்பதால் ஒரு சில பெற்றோர்கள் மன அழுத்தத்திற்கு கூட ஆளாவது உண்டு. எனினும் அமைதியான குழந்தை வளர்ப்பு பயணத்தை மேற்கொள்வதற்கு நீங்கள் சிறு சிறு விஷயங்களை பின்பற்றினாலே போதுமானது. அந்த வகையில் குழந்தை வளர்ப்பில் பெற்றோருக்கு உதவக்கூடிய ஒரு சில குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
தியானம் என்ற கலையை ஏற்றுக் கொள்ளுதல் : நம்மைச் சுற்றி எவ்வளவு குழப்பங்கள் நீடித்து வந்தாலும் அமைதியாக ஒரு சூழ்நிலையை கையாளுவதற்கு தியானம் ஒரு வலிமையான கருவியாக செயல்படுகிறது. தியானத்தை பயிற்சி செய்வது குழந்தை வளர்ப்பு காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை குறைத்து, பெற்றோர் மற்றும் குழந்தை உறவை மேம்படுத்த உதவும் என்று ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய அன்றாட வழக்கத்தில் ஆழ்ந்த மூச்சு பயிற்சி அல்லது பாடி ஸ்கேன் போன்ற எளிமையான தியான பயிற்சிகளை சேர்ப்பதன் மூலமாக சவாலான சூழ்நிலைகளை கூட நீங்கள் மிக பொறுமையாக கையாளலாம்.
சுய பராமரிப்பின் முக்கியத்துவத்தை கற்றுக் கொள்ளவும் : காலியான ஒரு குடுவையிலிருந்து எதையும் பிறருக்கு நீங்கள் கொடுக்க முடியாது என்ற பழமொழிக்கு ஏற்ப நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே உங்கள் பிள்ளைகளை சிறப்பாக உங்களால் வளர்க்க முடியும். எனவே அவ்வப்போது உங்களை ரீசார்ஜ் செய்து கொண்டு, உங்கள் ஆற்றலை மீண்டும் நிரப்புவதற்கு உதவும் வகையில் சுய பராமரிப்புக்கு நீங்கள் முன்னுரிமை வழங்க வேண்டும். உங்கள் மன அழுத்தத்தை குறைத்து ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த உதவும் சுய பராமரிப்பு செயல்பாடுகளில் தினமும் ஈடுபடுங்கள். ஒரு குறுகிய தூர நடைபயணம், உங்களுக்கு பிடித்தமான ஹாபி அல்லது தனிமை போன்ற எதுவாக வேண்டுமானாலும் அது இருக்கலாம். இவ்வாறு நீங்கள் செய்யும் பொழுது உணர்வுகளை எப்படி சமநிலைப்படுத்துவது என்பதை எளிதாக புரிந்து கொண்டு, சவால்களை சந்திக்க தயாராகி விடுவீர்கள்.
உண்மையான சூழ்நிலையை புரிந்து கொள்ளுதல் : எதார்த்தமற்ற எதிர்பார்ப்புகள் காரணமாகவே பெரும்பாலான பெற்றோர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இது சமூகம் மூலமாகவோ அல்லது நீங்கள் வகுத்து வைத்துள்ள ஒரு சில தரநிலைகள் காரணமாகவோ ஏற்படலாம். எனவே எப்பொழுதும் உங்கள் மீதும் பிள்ளைகள் மீதும் எதார்த்தமான எதிர்பார்ப்புகளை அமைத்துக் கொள்வது நல்லது. எல்லா விஷயத்திலும் பெர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது முற்றிலும் தவறு. அடையக்கூடிய இலக்குகளை அமைத்து, சிறு சிறு வெற்றிகளை கொண்டாடுங்கள். பெர்ஃபெக்டாக இருந்தால் மட்டுமே நான் ஒரு நல்ல பெற்றோர் என்ற எண்ணத்தை கைவிடுங்கள்.
நீங்கள் உணர்வதையும், உங்களுக்கு என்ன தேவை என்பதையும் வெளிப்படையாக பேசவும் : உங்கள் பிள்ளைகளோடு நல்ல ஒரு உறவை வளர்ப்பதற்கு அவர்களுடன் நீங்கள் வெளிப்படையாக மனதில் இருப்பதை தெளிவாக பேச வேண்டும். அதேபோல உங்கள் பிள்ளை பேசும் பொழுது அவர்களது கண்களைப் பார்த்து அதனை காது கொடுத்து நீங்கள் கேட்க வேண்டும். மேலும் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக ஃபீட்பேக்குகளை வழங்குங்கள். எந்த ஒரு முடிவுக்கு வராமல் உங்கள் பிள்ளைகளின் யோசனைகள் மற்றும் உணர்வுகளை பொறுமையாக கேளுங்கள். உங்களுடைய தேவைகள் மற்றும் எல்லைகளை தெளிவாக அவர்களுக்கு புரிய வையுங்கள். இதன் மூலமாக அமைதியான மற்றும் ஆதரவு நிறைந்த ஒரு வீட்டு சூழலை உங்களால் அமைக்க முடியும்.
உதவி கேட்க கூச்சப்பட வேண்டாம் : குழந்தை வளர்ப்பு என்பது உங்களை மட்டுமே சார்ந்த ஒரு விஷயமாக நீங்கள் பார்க்கக் கூடாது. நண்பர்கள், குடும்பத்தார் அல்லது நிபுணர்களின் உதவியை நாடுவது தவறில்லை. பிறரின் உதவிகளை நீங்கள் நாடும் பொழுது உங்களுக்கு உள்ள மன அழுத்தம் குறைந்து பிள்ளைகளை எப்படி சரியான முறையில் வளர்ப்பது என்பது சம்பந்தப்பட்ட பல்வேறு விதமான யோசனைகள் உங்களுக்கு கிடைக்கும். அந்த யோசனைகளில் இருந்து உங்கள் பிள்ளைக்கு எது சரியாக இருக்கும் என்பதை நீங்கள் சிந்தித்து முடிவு எடுக்கலாம். வலுவிழந்தவர்கள் மட்டுமே உதவி கேட்பார்கள் என்று நினைத்து விடாதீர்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்லது நினைக்கும் நபர்களிடம் உதவி கேட்பதால் நிச்சயமாக நாம் குறைந்து போக போவது இல்லை.