Paristamil Navigation Paristamil advert login

சித்தராமையாவும், சிவகுமாரும் ஆடு புலி ஆட்டம்: கர்நாடக காங்கிரசில் பரபரப்பு

சித்தராமையாவும், சிவகுமாரும் ஆடு புலி ஆட்டம்: கர்நாடக காங்கிரசில் பரபரப்பு

25 ஆனி 2024 செவ்வாய் 03:09 | பார்வைகள் : 1379


லோக்சபா தேர்தல் முடிவுக்குப் பின் கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையாவை நீக்க ஒரு கோஷ்டியினரும், துணை முதல்வர் சிவகுமாரின் அதிகாரத்தை குறைக்க முதல்வர் கோஷ்டியினரும் ஆடு புலி ஆட்டத்தை துவக்கியுள்ளனர்.

கர்நாடக காங்கிரசில் முதல்வர் மாற்றம் குறித்து சர்ச்சை நடப்பது புதிய விஷயம் அல்ல. அவ்வப்போது முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆதரவு தலைவர்கள், அமைச்சர்கள் முதல்வர் மாற்றம் குறித்து, பொது இடங்களில் கருத்துத் தெரிவித்து, கட்சி மேலிடத்தின் கோபத்துக்கு ஆளாவது வழக்கம்.

லோக்சபா தேர்தலுக்கு முன் இதுகுறித்து சர்ச்சை நடந்தது. இவர்களின் பேச்சு, கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், இவர்களின் வாய்க்கு காங்கிரஸ் மேலிடம் பூட்டு போட்டது. தற்போது மீண்டும் வாயை திறந்துள்ளனர்.

லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், அதற்கான கிரெடிட்டை தாங்கள் பெறவும், தோற்றால், அந்த பொறுப்பை வேறொருவர் தலையில் கட்டவும், முதல்வரும், துணை முதல்வரும் திட்டமிட்டிருந்தனர்.

ஆளுங்கட்சியாக இருந்தும், காங்கிரஸ் வெறும் ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. பெங்களூரு ரூரல் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷ் தோல்வி அடைந்தார். இது சிவகுமாருக்கு அரசியல் ரீதியில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தன் தம்பியை வெற்றி பெற வைக்க அதிகபட்சம் முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை.

சுரேஷின் தோல்விக்கு, முதல்வர் சித்தராமையா மறைமுக காரணம் என, சிவகுமாரின் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். துணை முதல்வர் சிவகுமார் உள்ளுக்குள் குமுறுகிறார்.

லோக்சபா தேர்தலில் கட்சி தோல்வி அடைந்ததை காரணமாக வைத்து சித்தராமையாவை, முதல்வர் பதவியில் இருந்து துாக்க அவரது எதிரிகள், திரைமறைவில் காய் நகர்த்துகின்றனர். சட்டசபை கூட்டம் முடிந்த பின், இவர்கள் சுறுசுறுப்படையலாம். இதை முதல்வர் சித்தராமையாவும் உணர்ந்துள்ளார்.

சிவகுமாரின் செல்வாக்கை குறைக்கும் நோக்கில், கூடுதல் துணை முதல்வர் பதவியை உருவாக்கும்படி, சித்தராமையா ஆதரவு அமைச்சர்கள், தலைவர்கள் கட்சி மேலிடத்துக்கு, நெருக்கடி கொடுக்கின்றனர்.

இதன் வாயிலாக சித்தராமையாவை முதல்வர் பதவியில் தக்கவைக்க திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் பெங்களூரில், கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று கூறுகையில், “நான் முதல்வர் பதவியில் இருந்து மாறினாலும், திட்டங்கள் நிறுத்தப்படாது. யார் முதல்வரானாலும் திட்டங்கள் தொடரும். இதில் யாருக்கும் எந்த குழப்பமோ, சந்தேகமோ வேண்டாம்,” என்றார்.

முதல்வரை மாற்றும் பேச்சு அடிபடும் சூழ்நிலையில், அதுகுறித்து மேலிடத்தில் விவாதிக்கப்படுகிறதோ என்ற சந்தேகத்தை முதல்வரின் பேட்டி எழுப்பியுள்ளது.

இது முதல்வரின் கோஷ்டிக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்