ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு ராமதாசுக்கு தி.மு.க., நோட்டீஸ்
25 ஆனி 2024 செவ்வாய் 03:11 | பார்வைகள் : 1608
கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக, அவதுாறாக விமர்சித்த பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், மாநில தலைவர் அன்புமணியிடம் ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு, தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் காலனியில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தில், ராமதாஸ், அன்புமணி ஆகியோர் கூறிய குற்றச்சாட்டுக்கு, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர், இருவரிடம் மான நஷ்டஈடாக, 1 கோடி ரூபாய் தர வேண்டும்; மன்னிப்பு கேட்க வேண்டும் என, நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். எம்.எல்.ஏ.,க்கள் சார்பில், தி.மு.க., மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி., அனுப்பியுள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது:
ராமதாஸ், அன்புமணி ஆகியோர், இந்த நோட்டீசை பெற்றுக் கொண்ட, 24 மணி நேரத்துக்குள், ஏதேனும் ஒரு முன்னணித் தமிழ், ஆங்கில நாளிதழ் ஒரு பதிப்பின் வாயிலாகவும், தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களின் வாயிலாகவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தலா ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும்.
இந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் வேறு வகையில் பொய்யான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.