Paristamil Navigation Paristamil advert login

தேங்காய் பால் பட்டாணி பிரியாணி..

தேங்காய் பால் பட்டாணி பிரியாணி..

25 ஆனி 2024 செவ்வாய் 08:39 | பார்வைகள் : 901


இன்று மதியம் என்ன சமைப்பது என்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் பட்டாணியும், தேங்காயும் இருக்கிறதா? அப்படியானால், சுவையான பிரியாணி செய்து சாப்பிடுங்கள். இந்த தேங்காய் பால் பட்டாணி பிரியாணி செய்வது மிகவும் எளிமையானது. முக்கியமாக இது சாப்பிடுவதற்கு ரொம்பவே அருமையாக இருக்கும் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க இப்போது இந்த பதிவில் தேங்காய் பால் பட்டாணி பிரியாணி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

தேங்காய் பால் பட்டாணி பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 1 கப்
பட்டாணி - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1(நீளமாக நறுக்கியது)
தேங்காய் பால் - 1 கப் (கெட்டியானது)
புதினா - 1/2 கப்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
வர மிளகாய் - 2
துருவிய தேங்காய் - 3 ஸ்பூன்
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 4 பல்
நெய் - 1 ஸ்பூன்
பிரியாணி இலை - 1
பட்டை - சிறிதளவு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

தேங்காய் பால் பட்டாணி பிரியாணி செய்ய முதலில், எடுத்து வைத்த பாஸ்மதி அரிசியை தண்ணீரில் நன்றாக கழுவி 15 நிமிடம் ஊற வைத்து பிறகு அதை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் புதினா, கரம் மசாலா, பச்சை மிளகாய், வர மிளகாய், துருவிய தேங்காய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இதனை அடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் அதில், பிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பின்னர் நீழ்வாக்கில் நறுக்கி வைத்த வெங்காயத்தை இதனுடன் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். 

வெங்காயம் நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்த மசாலா பேஸ்டை சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். பிறகு அதில் பட்டாணி சுவைக்கு ஏற்ப உப்பு பாஸ்மதி அரிசி ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். இப்போது எடுத்து வைத்த தேங்காய் பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் கிளறி விடுங்கள். 

தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் குக்கரை மூடி மூன்று விசில் வைத்து இறக்கவும். பின் அதில் பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லியை தூவி பரிமாறவும். அவ்வளவுதான், அட்டகாசமான சுவையில் தேங்காய் பால் பட்டாணி பிரியாணி தயார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்