ரபா அகதிகள் முகாம் அருகே வான் வழி தாக்குதலை நடத்திய இஸ்ரேல்
25 ஆனி 2024 செவ்வாய் 09:10 | பார்வைகள் : 1861
பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் ஓயாது என்று சபதம் ஏற்றுள்ள இஸ்ரேல் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இந்த சண்டையில் பெண்கள், குழந்தைகள் உள்பட 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிருக்கு பயந்து எகிப்து எல்லையில் உள்ள ரபா நகரில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த பகுதியையும் இஸ்ரேல் ராணுவத்தினர் விட்டு வைக்கவில்லை.
ரபா நகரில் கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள இஸ்ரேல் படையினர் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளை நோக்கி பீரங்கிகளுடன் முன்னேறி வருகின்றனர்.
ஷாதி அகதிகள் முகாம் அருகே உள்ள உணவு வினியோக மையத்தின் மீது இஸ்ரேல் படையினர் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு சரமாரியாக குண்டுகளை வீசியது. இந்த தாக்குதலில் 3 பேர் இறந்தனர்.
பானி சுலைகா பகுதியில் நடந்த வான்வழி தாக்குதலில் நிவாரண பொருட்கள் ஏற்றி வந்த லாரியின் பாதுகாவலர் உள்ளிட்ட 8 பேர் உயிர் இழந்து விட்டதாக ஹமாஸ் அமைப்பின் சுகாதார துறை தெரிவித்தள்ளது.
நேற்று ஒரே நாள் இரவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆம்புலன்சு சிகிச்சை பிரிவின் இயக்குனர் இறந்தார். ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி ஒருவரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் படை தாக்குதலுக்கு பயந்து பல குடும்பங்கள் ரபாவில் இருந்து வெளியேறி வடக்கு காசாவில் உள்ள கான்யூனிஸ் மற்றும் மத்திய காசாவில் உள்ள டெய்ர் அல் பாலா நகருக்கு தப்பி ஓடி விட்டனர்.