Paristamil Navigation Paristamil advert login

சபாநாயகருக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வாழ்த்து

சபாநாயகருக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வாழ்த்து

26 ஆனி 2024 புதன் 07:39 | பார்வைகள் : 317


சபாநாயகராக தேர்வான ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
18 வது லோக்சபாவின் சபாநாயகராக பா.ஜ.,வைச் சேர்ந்த ஓம் பிர்லா தேர்வானார். 2வது முறையாக இந்த பதவிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். அவரை பிரதமர் மோடியும், எதிர்க்கட்சி தலைவர் ராகுலும் இணைந்து அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்து கைகுலுக்கி வாழ்த்தினர். பிறகு இருவரும் ஓம் பிர்லாவை வாழ்த்தி பேசினர்.

நம்பிக்கை

பிரதமர் மோடி பேசியதாவது: 2வது முறை சபாநாயகராக தேர்வாகி ஓம் பிர்லா சாதனை படைத்து உள்ளார். காங்., கட்சியின் பல்ராம் ஜாக்கருக்கு பிறகு 2வது முறை தேர்வாகி உள்ளார். சபாநாயகர் பணி கடினமானது என்றாலும்,நீங்கள் தேர்வு செய்யப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சி. எதிர்காலத்திலும் எங்களை வழிநடத்த உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்.
லோக்சபாவை எப்படி கையாள வேண்டும் என அவருக்கு தெரியும். பல்வேறு முன்னெடுப்புகளுக்கு முன்னுதாரணமாக இருந்துள்ளார். 17 வது லோக்சபாவில் பல்வேறு சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டன. 3ம் பாலினத்தவர் உரிமைகள் பாதுகாப்பு மசோதா, 3 புதிய குற்றவியல் நடைமுறை மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டன.
18 வது லோக்சபா அடுத்தடுத்து சாதனை படைத்து வருகிறது. வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி நாடு சரியான திசையில் பயணித்து கொண்டுள்ளது. நாட்டின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இந்த அவை உறுதுணையாக இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ராகுல் வாழ்த்து

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசியதாவது: சபாநாயகரின் அவை பணிகளுக்கு உறுதுணையாக இருப்போம். மக்கள் குரல் இங்கு ஒலிக்க அனுமதிப்பார் என்று நம்புகிறோம். இந்த அவை எப்படி செயல்படுகிறது என்பதைக் காட்டிலும், மக்களுக்கான குரலை எப்படி அனுமதிக்கிறது என்பதே முக்கியம். அரசுக்கு அதிகாரம் இருந்தாலும், மக்களின் குரலாக எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. இவ்வாறு ராகுல் பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்