யூரோ கிண்ணம்... ஜேர்மனியில் கொள்ளை சம்பவத்தில் சிக்கிய சுவிஸ் அணி
26 ஆனி 2024 புதன் 08:10 | பார்வைகள் : 959
ஜேர்மனியில் யூரோ கிண்ணம் தொடருக்காக ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த சுவிட்சர்லாந்து அணி வீரர்களின் மடிக்கணினிகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஞாயிறன்று நடந்த போட்டியில் சுவிட்சர்லாந்து அணி ஜேர்மனியை 1-1 என்ற கோல் கணக்கில் சமன் செய்திருந்தது. மட்டுமின்றி தங்கள் குழுவில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
தற்போது சுவிட்சர்லாந்து அணி வீரர்கள் தங்கள் மடிக்கணிகளை தொலைத்துள்ளனர். சுவிஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த ஹொட்டல் அறைக்குள் புகுந்து மர்ம நபர் 3 மடிக்கணினிகளை கொள்ளையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாலி அணியுடனான தங்கள் அடுத்த போட்டிக்காக சுவிஸ் அணி தயாராகி வந்த நிலையிலேயே கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. மட்டுமின்றி, சுவிஸ் அணி பயன்படுத்தி வந்த கால்பந்து தொடர்பான தொழில்நுட்பமும் களவாடப்பட்டுள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து நடந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், போட்டியில் துல்லியமான பகுப்பாய்விற்கு தரவுகள் நேரடியாகத் தேவைப்படும் ஒன்றல்ல என குறிப்பிட்டுள்ள நிர்வாகி ஒருவர்,
சுவிஸ் தேசிய அணியின் தரவுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றால், ஒரு தவறான அணி மீதான தாக்குதல் அது என்றே கருதப்படும் என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்ததில், ஒருவரே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்த நபரை தீவிரமாக தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து அணி ஹங்கேரியுடன் 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்ததுடன் ஸ்கோட்லாந்து மற்றும் ஜேர்மனி அணிகளை சமன் செய்துள்ளது.
இரண்டாவது சுற்றில் இத்தாலியை எதிர்கொள்ளவிருக்கும் சுவிஸ் அணி, கால் இறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.