Paristamil Navigation Paristamil advert login

பாத யாத்திரை பாரம்பரியத்தை பேணுவது போல் காடுகளை பாதுகாப்பதும் நம் கடமையே - கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம்

பாத யாத்திரை பாரம்பரியத்தை பேணுவது போல் காடுகளை பாதுகாப்பதும் நம் கடமையே - கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம்

27 ஆனி 2024 வியாழன் 10:06 | பார்வைகள் : 146


பாத யாத்திரை பாரம்பரியத்தை பேணுவது போல, பாத யாத்திரைக்காக நாம் பயன்படுத்தும் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள், மூலிகைகள் நிறைந்த காட்டையும் பேணிப் பாதுகாப்பது எமது தார்மீகக் கடமை. உண்மையில் நாம் பயணிக்கும் இந்த காடு நமக்கு சொந்தமானதல்ல. இக்காட்டையே நம்பி வாழ்கிற மிருகங்கள், பறவைகள் மற்றும் ஏனைய உயிரினங்களுக்கே சொந்தம். எனவே, அந்த உயிரினங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நாம் இந்தக் காட்டைப் பயன்படுத்த வேண்டும்..." என உகந்தை முதல் கதிர்காமம் வரையான வனப் பகுதியூடாக பயணிக்கும் யாத்திரீகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார் வரலாற்று ஆய்வாளரும் இலங்கை யாத்திரை சபையின் ஒருங்கிணைப்பாளருமான கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம்.

கதிர்காமம் நோக்கிய பாத யாத்திரைக்காக உகந்தை காட்டுப்பாதை எதிர்வரும் 30ஆம் திகதி திறக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர், அந்த திகதியில் மாற்றம் செய்யப்பட்டு, ஜூலை 2ஆம் திகதி திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நி‍லையில், கதிர்காமம் முருகன் ஆலயத்தில் ஜூலை 6ஆம் திகதி நடைபெறவுள்ள ஆடிவேல் உற்சவத்தின் முதல் நாள் நிகழ்வான கொடியேற்றத்தில் கலந்துகொள்வதற்காக, யாத்திரீகர்கள் காட்டுப்பாதையூடாக நடைபயணம் செய்து, ஆலயத்தை அடைவதற்கான நாட்கள் குறைக்கப்பட்டமை, பக்தர்களிடையே பெரும் குழப்பத்தையும் பயணத்தடைகளையும் ஏற்படுத்த, பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் முன்னர் அறிவிக்கப்பட்டபடி இம்மாதம் 30ஆம் திகதி காட்டுப்பாதை திறக்கப்படுவதாக உடனடி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இத்திகதி மாற்றத்தின் பின்னணிக் காரணங்களாக, பாத யாத்திரையின்போது யாத்திரீகர்கள் வனப் பகுதிகளை அசுத்தப்படுவது, மரக்கிளைகளை ஒடித்து தாவரங்களை அழிப்பது, பிளாஸ்டிக் முதலான குப்பைகளை எறிவது, அந்த பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணுவதால் விலங்குகளுக்கு   பாதிக்கப்படுவது, பறவைகள், விலங்குகள் முதலான உயிரினங்கள் உயிரிழப்பது, இவற்றால் காட்டின் வளங்கள் குன்றிப்போவது... என பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

காட்டுப்பாதை திறப்பில் நாள் குறைப்பு செய்வதென்பது, பக்தர்கள் பாத யாத்திரை பண்பாட்டுப் பாரம்பரியத்தை பேணுவதற்கு தடையை ஏற்படுத்துவதோடு, ஆலயத்துக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையையும் வெகுவாக குறைக்கிறது என கூறும் திருச்செல்வம், அதேவேளை பாத யாத்திரையின்போது சில யாத்திரீகர்கள் காட்டை அசுத்தப்படுத்துவதும் தவறான செயற்பாடே; இதனால் ஒட்டுமொத்த யாத்திரீகர்களும் பயணத்தின்போது சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்றும் வேதனையோடு கூறுகிறார்.

கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை திறக்கவும் மூடவும் நிர்ணயிக்கும் நாட்களின் எண்ணிக்கை, இதனால் முகங்கொடுக்கும் சிக்கல்கள் தொடர்பாக அவர் மேலும் விளக்கமளிக்கையில்,

காட்டுப்பாதை திறத்தல்

"கதிர்காமத்துக்குரிய காட்டுப்பாதை, சாதாரணமாக கதிர்காமம் ஆலய கொடியேற்றத்துக்கு ஒரு கிழமைக்கு முன்னரே திறக்கப்பட வேண்டும்.

பாத யாத்திரீகர்களில் பல விதமானோர் இருக்கின்றனர். 4 நாட்களில் நடந்து சென்று கொடியேற்றத்துக்கு செல்லக்கூடிய வலிமையுள்ள இளைஞர்கள் இருக்கிறார்கள். 5 - 6 நாட்களில் நடந்து செல்லக்கூடிய பிள்ளைகளோடு குடும்பம் குடும்பமாக செல்பவர்கள் இருக்கிறார்கள். வயோதிபர்கள் நடந்து செல்ல 7 - 8 நாட்கள் எடுத்துக்கொள்வார்கள்.

எனவே, எத்தனை நாட்களில் கதிர்காமம் முருகன் ஆலயத்தை சென்றடையலாம் என்பது ஒவ்வொருவரது வலிமை, சக்தியை பொருத்தது.

ஆனால், பாரம்பரியமாக பத்தாம் நாள் படியேறுதல் என்றொரு ஐதீகமுண்டு. எனவே, காட்டுப்பாதை திறக்கப்பட்டு, மெதுவாக நடந்து 10வது நாளில் ஆலயத்துக்கு சென்று முருகனை தரிசிக்கிக்கும் வழமை பண்டைய காலம் முதல்  இருந்துள்ளது.

சரியாக சொல்வதானால், கொடியேற்றத்துக்கு பத்து நாட்களுக்கு முன்பே காட்டுப்பாதை திறக்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்த பத்தாம் நாள் படியேறுதல் என்கிற நியதி பொருத்தமாக இருக்கும்.

ஆனால், போகப்போக, தங்கள் தொழில் காரணமாக நான்கு நாட்களில் கூட ஆலயத்தை பக்தர்கள் சென்றடைகின்றனர். அவர்கள் அப்படி செல்வதனால், சில அதிகாரிகள் நான்கு நாட்களில் கூட செல்லலாம்தானே என்று நினைக்கின்றனர்.

அதன் அடிப்படையிலும் 30ஆம் திகதி திறக்கப்படவிருக்கும் காட்டுப்பாதை, ஜூலை 2ஆம் திகதி திறப்பதென திகதி பிற்போடப்பட்டது. எனினும், தற்போது மீண்டும் பழைய திகதியிலேயே காட்டுப்பாதையை திறப்பதென உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுப்பாதை மூடல்

"காட்டுப்பாதை திறக்கப்படும் நாளினை மட்டுமன்றி, மூடப்படும் நாளினையும் கருத்திற்கொள்ள வேண்டும்.

பொதுவாக, எந்த திருவிழாவானாலும் இந்துக்கள் அதிகமாக செல்வது கொடியேற்றத்துக்கும் தீர்த்தோற்சவத்துக்குமே ஆகும். இந்த இரண்டு உற்சவங்களும் இந்துக்கள் வழிபாட்டு பாரம்பரியத்தில் மிக முக்கியமான தினங்களாக கருதப்படுகிறது.

காட்டுப்பாதையை மூடுவதானால், தீர்த்தோற்சவத்துக்கு ஐந்து நாட்களுக்கு முன் பாதையை மூடலாம். எனவே, காட்டுப்பாதை திறத்தல், மூடுதல் என்பது கொடியேற்றத்தையும் தீர்த்தோற்சவத்தையும் மையமாக வைத்து தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். 

பாத யாத்திரீகர்களின் கவனத்துக்கு... 

* "பொலித்தீன் பைகள் மற்றும் சொப்பிங் பேக் ஆகியவற்றை காட்டுக்குள் கொண்டு செல்வதை யாத்திரீகர்கள் தவிர்க்க வேண்டும். முடியுமானவரை துணிப்பைகளைப் பயன்படுத்த வேண்டும்.  

* தவிர்க்க முடியாத காரணத்தினால் பொலித்தீன் பைகள் மற்றும் பிஸ்கட் பைக்கற்றுகளை கொண்டுசெல்ல நேரிட்டால், அவற்றை காட்டில் கண்ட கண்ட இடங்களில் வீசாமல், உங்கள் பைகளில் வைத்து கொண்டுபோய் குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும்.

* நீங்கள் கொண்டு செல்லும் பால்மா, சீனி, தேயிலை ஆகியவற்றை ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு கொண்டுசென்று  பயன்படுத்த வேண்டும். இப்படிச் செய்வதால் ஷொப்பிங் பேக் பாவனை ‍குறைவடையும்.

நீங்கள் வீசும் பொலித்தீன் பைகளில் உள்ள எஞ்சிய உணவுப் பொருட்களை உண்ணும் மான், முயல் போன்ற சிறிய விலங்குகள் பொலித்தீன் பைகளுடன் அவற்றை உண்டு உயிரிழக்கின்றன.  

* ஒருவர் இரண்டு குடிநீர் போத்தல்களை மட்டுமே கொண்டு செல்வது நல்லது. அவற்றில் நீர் தீர்ந்துவிட்டால், காட்டுப்பாதை வழியில் உள்ள பிளாஸ்டிக் நீர்த்தொட்டிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு அமைப்புகளின் பவுசர் வண்டிகள் ஆகியவற்றில் இருந்து நீரை நிரப்பிக்கொள்ள முடியும்.

* நீங்கள் கொண்டு செல்லும் பழச்சாறு (ஜூஸ்) போத்தல்களை கண்ட இடங்களில் வீச வேண்டாம். அவற்றை உங்கள் பைகளில் வைத்து எடுத்துச் சென்று குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும். நீங்கள் வீசும் வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல்கள் காட்டுச் சூழலை மாசுபடுத்துவதோடு, காட்டின் அழகையே கெடுத்துவிடுகின்றன.

* காட்டில் தேநீர் சுடவைத்துக் குடிக்கவும், உணவு சமைக்கவும், இரவில் மிருகங்களிடம் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும் தீ மூட்டுபவர்கள் தமது வேலை முடிந்தவுடன் அந்தத் தீயை முற்றாக அணைத்து விட்டுச் செல்ல வேண்டும். ஏனென்றால், காட்டில் தீ மூட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. தப்பித்தவறி காட்டில் தீ பரவினால் பசுமையான காட்டின் பெரும்பகுதி கருகி அழிந்துவிடும். காடுகள் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அந்தளவுக்கு மழை  அதிகம் கிடைக்கும்.  

* தற்காலிக கூடாரங்கள் அமைக்க காட்டில் மரங்களை வெட்டுவதும், பழங்களைப் பறிக்க கிளைகளை முறிப்பதும் முற்றாக தவிர்க்கப்பட வேண்டும். இதுவும் தடை செய்யப்பட்ட நடவடிக்கையாகும்.

* காட்டில் மது பாவனை முற்றாக தவிர்க்கப்பட வேண்டும்.

இவற்றை உரிய முறையில் கடைபிடிப்பதன் மூலம் கதிர்காமத்துக்கான பாத யாத்திரையை சிரமமின்றி மேற்கொள்வதோடு, காட்டு வளங்கள் அழிக்கப்படுவதையும் தடுக்கலாம்" என்றார்.   

நன்றி வீரகேசரி

வர்த்தக‌ விளம்பரங்கள்