அவுஸ்திரேலியாவில் பெண்ணின் மூளைக்குள் புழு...

29 ஆவணி 2023 செவ்வாய் 11:35 | பார்வைகள் : 7779
அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் 64 வயதுடைய பெண்மணி ஒருவர், கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, வறட்டு இருமலும் இரவு நேரங்களில் கடுமையான வியர்வையுமாக, வித்தியாசமான அறிகுறிகள் காணப்பட்டுள்ளன.
மருத்துவர்கள் ஒவ்வொரு பிரச்சினையாக ஆராய்ந்து வந்துள்ளனர்.
2022இல் கூடுதலாக அவருக்கு மறதியும் மன அழுத்தமும் ஏற்படவே, அவரது மூளையை ஒரு MRI ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிடலாம் என முடிவு செய்துள்ளார்கள் அவர்கள்.
MRI ஸ்கேன் முடிவுகள், அந்தப் பெண்மணியின் மூளையின் முன் பகுதியில் ஏதோ காயம் ஏற்பட்டுள்ளதைக் காண்பிக்க, அறுவை சிகிச்சை செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சையின்போது, சிவப்பு நிறத்தில் ஏதோ நூல் போல இருப்பதை மருத்துவர்கள் கவனிக்க, அது சட்டென அசைந்துள்ளது. அப்போதுதான் அது ஒரு புழு என்பதை மருத்துவர்களுக்குத் தெரியவந்துள்ளது.
8 சென்றிமீற்றர் நீளமுடைய அந்த புழுவை மருத்துவர்கள் அகற்றியுள்ளார்கள்.
அந்தப் புழு அகற்றப்பட்டபின், அந்தப் பெண்ணுக்கு மறதிப் பிரச்சினையும், மன அழுத்தமும் குறைய ஆரம்பித்துள்ளது.
Ophidascaris robertsi என்னும் அந்த உருண்டைப்புழு, அவுஸ்திரேலியாவின் சில மாகாணங்களில் மட்டும் காணப்படும் carpet pythons என்னும் ஒருவகை மலைப்பாம்புகளின் வயிற்றுக்குள் மட்டுமே காணப்படும்.
ஆக, அந்தப் பெண், சாலட் எதையோ சாப்பிடும்போது, அந்த பாம்பின் கழிவு பட்ட இலை எதையாவது சாப்பிட்டிருக்கலாம்.
அந்த இலையிலிருந்த அந்த உருண்டைப்புழுவின் முட்டையையும் சேர்த்து அவர் சாப்பிட்டிருக்கக்கூடும்.
அதுதான் இந்தப் பிரச்சினைக்குக் காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கருதுகிறார்கள்.
மருத்துவ வரலாற்றில் இப்படி அந்த புழு மனித மூளையில் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இதுபோன்ற விடயங்கள் எதிர்காலத்திலும் நிகழ வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.