மகளிர் டெஸ்டில் 600 ரன் குவித்த முதல் அணி! புதிய வரலாறு படைத்த இந்தியா
29 ஆனி 2024 சனி 09:02 | பார்வைகள் : 989
மகளிர் இந்திய அணி 603 ஓட்டங்கள் குவித்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்துள்ளது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்று இந்திய அணி முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க வீராங்கனைகள் ஷஃபாலி வெர்மா 205 ஓட்டங்களும், ஸ்மிரிதி மந்தனா 149 ஓட்டங்களும் குவித்தனர்.
விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 86 ஓட்டங்களும், அணித்தலைவர் ஹர்மன்பிரீத் கவுர் 69 ஓட்டங்களும் விளாசினர்.
இதன்மூலம் 603 ஓட்டங்கள் குவித்த இந்திய அணி டிக்ளேர் செய்தது.
மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த அணியும் ஒரு இன்னிங்சில் 600 ஓட்டங்கள் குவித்ததில்லை. அவுஸ்திரேலிய அணி 575 ஓட்டங்கள் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்த நிலையில், இந்திய அணி அந்த சாதனையை முறியடித்து சரித்திரம் படைத்துள்ளது.