Paristamil Navigation Paristamil advert login

இந்தியன் தாத்தாவின் 106 வயதில் இதெல்லாம் சாத்தியமா?

இந்தியன் தாத்தாவின்  106 வயதில்  இதெல்லாம் சாத்தியமா?

29 ஆனி 2024 சனி 12:15 | பார்வைகள் : 325


1996-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் இந்தியன். கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில், நெடுமுடி வேனு, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் இந்த படம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. 

இந்தியன் 2 படத்தின் அறிவிப்பு 2017-ம் ஆண்டு வெளியானது. 2019-ம் ஆண்டு இப்படம் தொடங்கப்பட்ட நிலையில், கிரென் விபத்து, கொரோனா பெருந்தொற்று என பல தாமதங்களுக்கு பிறகு ஒருவழியாக ஜூலை 12-ம் தேதி இந்தியன் 2 படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இந்தியன் 2 படத்தில் சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, ப்ரியா பவானி சங்கர், விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இந்தியன் 2 உள்ளது.

இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியானது. இந்த ட்ரெயிலரை கமல் ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும், பொதுவாக கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகிறது. குறிப்பாக ட்ரெயிலரி இந்தியன் தாத்தா கெட்டப், அவர் சண்டையிடும் காட்சிகள் ஆகியவை விமர்சிக்கப்பட்டு வருகின்றன. 

குறிப்பாக இந்தியன் படத்திலேயே சேனாபதி 1918-ம் ஆண்டு பிறந்ததாக காட்டப்பட்டிருக்கும். அதன்படி பார்த்தால் தற்போது அவருக்கு 106 வயதாகிறது. இந்த வயதில் எப்படி அவர் சண்டை போட முடியும் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். சேனாபதி வர்ம கலை பயின்றவர், அவர் ஆரோக்கிய உணவு, சுய ஒழுக்கம், யோகா ஆகியவற்றை கடைபிடித்தால் வயதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்று இப்படத்தின் இயக்குனர் ஷங்கரும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சேனாபதி வயது சர்ச்சை குறித்து நடிகர் கமல்ஹாசனும் பதில் அளித்துள்ளார். பிரபல ஆங்கில ஊடகத்திடம் பேசிய அவர் “ இது போல கேள்வி எழுப்பும் சங்கடப்படுத்தும் நபர்களை நான் தவிர்க்க விரும்புகிறேன். சூப்பர்மேனின் வயதையோ, ஹனுமானின் வயதையோ யாரும் கேட்கவில்லை என்ற பதில் என்னிடம் உள்ளது.

ஹனுமான் இடங்களிலும் சுற்றிக் கொண்டிருக்கிறார், யுகங்களைக் கடந்து வருகிறார், அதனால்தான் அவரை தெய்வங்களிலேயே நீண்ட காலம் வாழ்ந்தவர் என்று சொல்கிறீர்கள்” என்று தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்