Paristamil Navigation Paristamil advert login

இணையவழி மோசடியும் சிறுவர் பாலியல் சுரண்டலும்

இணையவழி மோசடியும் சிறுவர் பாலியல் சுரண்டலும்

30 ஆவணி 2023 புதன் 06:05 | பார்வைகள் : 3568


சிறுவர் என்பவர்கள் ஒரு நாட்டினுடைய எதிர்காலத்தின் தூண்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். பதினெட்டு வயதுக்கு குறைந்த எந்த ஒரு நபரும் சிறுவர் என ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகள் சமவாயம் கூறுகிறது.

சிறுவர்கள் சார்ந்த பல்வேறு சமவாயங்கள், சட்டங்கள் காலத்துக்குக் காலம் உருவாகி வந்தாலும் இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை, சுரண்டல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

குறிப்பாக கொவிட் நோய்த்தொற்று காலத்தின் போதும் அதற்கு பின்னரும் நேரடியாகவும் இணையத்தின் மூலமாகவும் பல்வேறு சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல்  தொடர்பான முறைப்பாடுகள் பதியப்பட்டிருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (NCPA) குறிப்பிட்டுள்ளது. இதற்கான பிரதான காரணமாக சிறுவர்கள் மத்தியில் வெகுவாக அதிகரித்துள்ள இணையப் பாவனை மற்றும் கைத்தொலைபேசி பாவனையை சுட்டிக்காட்டலாம்.

சிறுவர்களில் பெரும்பாலானோர் சமூக ஊடகங்களுக்கும் (Social Media) பல்வேறு செயலிகளுக்கும் (Apps) அடிமையாகி உள்ளதோடு அதனூடாக உடல், உள, சமூக ரீதியாக பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளனர். சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இணையதள தொடர்பு சாதனங்களின் பாவனை தொடர்பான சரியான விழிப்புணர்வு இல்லாமையே இவ்வாறான பிரச்சினைகளுக்கு பிரதான காரணமாக அமைகின்றது.

சிறுவர்களும் பெற்றோர்களும் இணையவழி மோசடிகள் (catfishing) மூலம் எவ்வாறு பாலியல் ரீதியான சுரண்டலுக்கு உள்வாங்கப்படுகிறார்கள் என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.

இணையவழி மோசடி என்பது அல்லது (Catfishing) கெட்பிஷிங் என்பது ஒரு நபர் பொதுவாக மற்றவர்களுடைய தகவல் மற்றும் புகைப்படங்களை திருடி தனக்கென ஒரு பொய்யான அடையாளத்தை உருவாக்கி அவற்றை பயன்படுத்துவதைக் குறிக்கும். சில சமயங்களில் ஒரு கெட்பிஷர் மற்றொரு நபரின் முழு அடையாளத்தை (அவரது உருவம், பிறந்த திகதி மற்றும் இருப்பிடம்) என்பவற்றை உரியவருடைய அனுமதியின்றி பாவித்து அவர்கள் அந்நபரை போல பாசாங்கு செய்வர். இதில் பாதிக்கப்பட்ட பெற்றோர்களும் சிறுவர்களும் உள ரீதியான பிரச்சினைகளுக்கும் பொருளாதார ரீதியான பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்கின்றனர்.

முகப்புத்தக கணக்குகளில் 5 சதவீதமான கணக்குகள் போலியான தகவல்களை கொண்ட கணக்குகள் என கண்டறியப்பட்டுள்ளது.

கெட்பிஷிங் பெரும்பாலும் டிண்டர் மற்றும் கிரைண்டர் (Tinder and Grinder) போன்ற அந்தரங்க உறவுக்கான (Dating) செயலிகளிலும் முகநூல் (Facebook), வைபர் (Viber), டிக்டாக் (Tiktok), வட்ஸ்அப் (WhatsApp), வீசெட் (WeChat) போன்ற செயலிகளிலும் அதிகரித்துள்ளன.

பெரும்பாலும் இணையவழி மோசடிக்காரர்கள் சிறுவர்களை மையப்படுத்தி இதை செய்கின்றனர். அதற்கான காரணம் சிறுவர்களை இலகுவில் வசப்படுத்தி விடலாம் என்ற நோக்கத்தினாலாகும்.

ஆதிகமாக இணையவழி மோசடிக்காரர்கள் பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தி சிறுவர்களை அடைய முயற்சிப்பர்.

• காதல் (Romance) வசப்படக்கூடிய வார்த்தைகளை பேசி உறவை வலுப்படுத்தி அதன் மூலம் பணம் பறிக்க முயற்சித்தல்.

• நம்பிக்கை ஊட்டும் வகையில் நண்பரை போல் உறவாடி காதல் வார்த்தைகளை பேசி அவற்றை பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி, பாலியல் அல்லது பணம் பெற முயற்சித்தல்.

• பொய்யான படங்களை பகிர்ந்து நம்பிக்கையை ஏற்படுத்தி நேரடியாக சந்திக்க தூண்டுதல். இதன் மூலம் கடத்தல், பாலியல் ரீதியான வன்முறை மற்றும் சுரண்டலில் ஈடுபடல், உயிராபத்துக்களை ஏற்படுத்தல்.

• வசப்படுத்தும் வார்த்தைகளை பாவித்து போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை செய்ய தூண்டுதல்.

இலங்கையில் சிறுவர்களுக்கு எதிராக நேரலை (Online) மற்றும் இணையம் (Internet) மூலம் ஏற்படுகின்ற துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தரம் மற்றும் அளவு அடிப்படையிலான ஆய்வில் 1911 சிறுவர்கள் 25 மாவட்டங்களிலிருந்தும் உள்வாங்கப்பட்டார்கள். (965 சிறுவர்கள், 946 பெண் சிறுமிகள்).

இந்த ஆய்வானது மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் கொழும்பு பல்கலைக்கழக நெறிமுறை மீளாய்வு குழுவினால் அனுமதிக்கப்பட்ட ஆய்வாகும்.

இந்த ஆய்வின் அடிப்படையில்,

10 சிறுவர்களில் 3 பேர் நேரலை சம்பந்தப்பட்ட வன்முறை, துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல்களுக்கு உள்ளாகின்றனர். ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகளே அதிகமாக நேரலை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகின்றனர். அதனடிப்படையில் 22.90% சிறுவர்கள் அறிமுகமற்ற இணைப்புகள் மற்றும் புகைப்படங்களை அழுத்துவதன் மூலமும், 26.30 சதவீதமானோர் அறிமுகமற்ற வீடியோக்கள், புகைப்படங்கள், குறுஞ்செய்திகள், விளம்பரங்கள் போன்றவற்றை பெறுவதன் மூலமும் 24.30 சதவீதமானோர் சுய புகைப்படங்கள், வீடியோக்கள், தகவல்கள் போன்றவற்றை பகிர்வதன் மூலமும் இப்பிரச்சினைகளுக்கு உள்வாங்கப்படுகின்றனர்.

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 3,102 சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (NCPA) தெரிவித்துள்ளது.

தேசிய சிறுவர் அதிகார சபையின் சட்ட அமுலாக்க பணிப்பாளர் சஞ்சீவனி அபயகோன் மாதத்துக்கு 600க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவானதாக கூறுகிறார். அதிகப்படியான சம்பவங்கள் இந்த ஆண்டின் (2023) மார்ச் மாதத்தில்  பதியப்பட்டிருப்பதாகவும் மார்ச் மாதம் மொத்த பதியப்பட்ட சம்பவங்கள் 1026 எனவும் குறிப்பிட்டார். இந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் 779 சம்பவங்களும் பெப்ரவரி மாதத்தில் 709 சம்பவங்களும் பதியப்பட்டுள்ளது என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (NCPA) குறிப்பிட்டுள்ளது.

ஜூலை மாதம் கம்பஹாவில் ஒரு ஆண், பெண்பிள்ளையை போல இணையத்தில் நடித்து 14 வயது சிறுவனை கம்பஹாவிற்கு அழைத்து பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம், முகநூல் ஆடை விற்பனை பக்கத்தினூடாக பெண்ணொருவரின் ஆபாச படங்களை சேகரித்த உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் கைதுசெய்யப்பட்டமை போன்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

ஆயினும் சிறுவர்களுக்கு எதிரான நிறைய இம்மாதிரியான சம்பவங்கள் மறைக்கப்பட்டும் முறைப்பாடு செய்யப்படாமலும் இருக்கின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

இணையதள மோசடிகளில் ஈடுபடுவோரை எவ்வாறு இனங்காணலாம்?

• அவர்கள் நேருக்கு நேர் தொடர்பாடலை புறக்கணிப்பார்கள். அவர்களின் சுய முகத்தையோ தகவலையோ தருவதற்கு தயங்குவார்கள்.

• குரலொலி (Voice), காணொளி மூலமாக (Video) தன்னை வெளிப்படுத்த தயங்குவார்கள். அதற்கு பொய்யான காரணங்களை வெளிப்படுத்துவார்கள்.

• அடிக்கடி நேரலையில் (online) இருக்கமாட்டார்கள். சில சமயங்களில் போலியான படங்களை பதிவேற்றுவார்கள். மற்றவர்களால் சந்தேகப்பட முடியாதவாறு இணையத்தை பாவிப்பார்கள்.

• சமூக ஊடகங்களில் அவர்களை தொடர்பவர்கள் குறைவாக இருப்பர். அவர்களுக்கு இணைய நண்பர்கள் குறைவாகவே இருப்பர்.

• இணைய மோசடிக்காரர்களுக்கு எவ்வாறு நெருக்கமான தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என நன்கு தெரியும். அவர்கள் எதிர்பார்த்த தொடர்பை அடைந்ததும் நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு கேட்பார்கள். அவை எதிர்காலத்தில் மிரட்டுவதற்காக சேமிக்கப்படலாம்.

• அவர்களை பற்றி நிறைய விடயங்களை கூறமாட்டார்கள். தனது கடந்தகாலம் மற்றும் நிகழ்காலத்தை மட்டுமே கூறுவார்கள்.

இணையதள மோசடிகளில் இருந்து சிறுவர்கள் பின்வருமாறு தன்னை பாதுகாத்துக்கொள்ளலாம்.

• நேரலையில் சமூக ஊடகங்களில் அறிமுகமற்ற நபர்களோடு தொடர்புகளை ஏற்படுத்துவதை நிறுத்துதல், அவசியமற்ற இணைப்புக்கள் வரும்போது அழுத்துவதை நிறுத்தல்.

• சமூக ஊடகங்களில் சுய தகவல்களை பகிராமல் இருத்தல்.

• பொருத்தமில்லாத புகைப்படங்களை பகிர்தல் மற்றும் பதிவேற்றுதலை நிறுத்தல்.

• சமூக வலைத்தளங்களில் பாவனை இல்லாத கணக்குகளுக்கு குறுஞ்செய்தி மற்றும் தொடர்பாடல் ஏற்படுத்துவதை நிறுத்தல்.

• தெரியாத நபர்களிடம் இருந்துவரும் கோரிக்கைகள் (Requests) மற்றும் குறுஞ்செய்திகளுக்கு பதிலளிப்பதை நிறுத்தல்.

• நேரலை மற்றும் இணையதள பாவனை பாதுகாப்பு தொடர்பாக அறிந்து வைத்திருத்தல்.

பெற்றோர்கள் இணையதள மோசடிகளிலிருந்து தன் பிள்ளைகளை பாதுகாக்க செய்யவேண்டியவை

• நேரலையை அல்லது இணையதளத்தை பாவிக்கும் நேரத்தை மட்டுப்படுத்தல்.

• தேடல் முடிவுகளில் உள்ள தளங்கள் படங்களை பரிசீலனை செய்தல். இதன் மூலம் ஆரம்பத்திலேயே இணையவழி மோசடிகளை தடுக்கலாம். 73 சதவீதமான பெற்றோர்களுக்கு நேரலை மற்றும் இணையம் தொடர்பில் போதிய அறிவில்லை என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. (SLCERT)

• தொலைபேசி மற்றும் சமூக ஊடக கணக்குகளின் தனியுரிமை அமைப்புகளை (Privacy setting) காலத்துக்குக் காலம் புதுப்பித்தல். இது சில அச்சுறுத்தலுக்கு எதிராக பாதுகாப்பளிக்கும்.

• நேரலையின் மூலம் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள் தொடர்பாகவும் எவ்வாறு நேரலையில் பாதுகாப்பாக இருக்கலாம் என்பது பற்றியும் விளக்கமாகவும் விரிவாகவும் கலந்துரையாடல்.

• பெற்றோர் கட்டுப்பாடு (Parental control) என்பது அதிகமாக டிஜிட்டல் கருவிகளில் உள்ளது. அதை பெற்றோர் சரியான முறையில் அறிந்து செயல்பட செய்வதாலும் சிறுவர்களை நேரலை ஆபத்துக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

மேலும் இவ்வாறான சிறுவர்களுக்கு எதிரான இணையவழி மோசடிகள் மற்றும் பாலியல் சுரண்டலுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் பல்வேறு சட்ட வரைபுகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

அரச சார்பற்ற நிறுவனம் என்ற அடிப்படையில் ‘எங்குமுள்ள சிறுவர்களையும் சூழலையும் பாதுகாக்கும்’ (PEaCE /ECPAT Sri Lanka) அமைப்பானது சிறுவர்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல், சுற்றுலாத்துறையில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல், சிறுவர் கடத்தல், சிறுவர் தொழில், கட்டாய மற்றும் பலவந்த திருமணம், நேரலையில் சிறுவர்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுதல் போன்றவற்றுக்கு எதிரான பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக சிறுவர்கள், பெற்றோர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள், தனியார் நிறுவனங்கள் போன்றோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளூடாக நாடு முழுவதும் அறிவூட்டி வருகிறது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு சட்ட ரீதியான ஆலோசனைகள் மற்றும் சேவைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் எமது சிறுவர்களுக்கு எதிராக செய்யப்படுகின்ற பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பாக சமூக அக்கறை உடையவர் என்ற வகையில் நாம் அனைவரும் அறிந்துவைத்திருப்பது மிக முக்கியமாகும். இதன் மூலமாகவே நாம் அவற்றை தடுக்க முடியும்.

சிறுவர்களுக்கெதிரான பாலியல் ரீதியான சுரண்டல் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக எங்களோடு இணைந்துகொள்ளுங்கள்.

நன்றி வீரகேசரி

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்