ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஆரம்பம்
30 ஆவணி 2023 புதன் 06:09 | பார்வைகள் : 3657
இந்தியாவில் அக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்பதாக ஒத்திகை களமாக அமையவுள்ள 6 நாடுகள் பங்குபற்றும் ஆசிய கிண்ண கிரிக்கெட், பாகிஸ்தானுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான ஏ குழு போட்டியுடன் முல்தானில் இன்று புதன்கிழமை (30) ஆரம்பமாகவுள்ளது.
பாகிஸ்தானிலும் இலங்கையிலும் கூட்டாக நடைபெறும் ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ஆசிய கிரிக்கெட்டின் முன்னணி அணிகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகியன ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.
அதேவேளை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் தத்தமது அதிகபட்ச ஆற்றல்களை வெளிப்படுத்தவுள்ளன.
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் வரவேற்பு நாடாக பாகிஸ்தான் திகழ்கின்றபோதிலும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்த இந்தியா சம்பந்தப்பட்ட போட்டிகள் இலங்கையில் நடத்தப்படவுள்ளன.
ஏ குழுவில் இடம்பெறும் இந்தியாவும் பாகிஸ்தானும் நேபாளத்தை வீழ்த்தி சுப்பர் சுற்றுக்குள் நுழையும் என நம்பப்படுகிறது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் சந்திக்காத நிலையில் இந்த வருடம் முதல் தடவையாக இறுதிப் போட்டியில் ஒன்றையொன்று எதிர்த்தாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், பி குழுவில் இடம்பெறும் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளில் எந்த இரண்டு அணிகள் சுப்பர் சுற்றுக்கு முன்னேறும் என்பதை அனுமானிப்பது இலகுவல்ல.
எவ்வாறாயினும் நடப்பு ஆசிய கிண்ண (இ20) சம்பியன் இலங்கை, அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதைக் குறியாகக் கொண்டு விளையாடவுள்ளது.
ஆரம்பப் போட்டி
நேபாளத்துக்கு எதிராக முதல்தானில் புதன்கிழமை நடைபெறவுள்ள போட்டியின் மூலம் ஆசிய கிண்ண வெற்றிக்கான முயற்சியை கடும் உஷ்ணத்திற்கு மத்தியில் பாகிஸ்தான் ஆரம்பிக்கவுள்ளது. 15 வருட இடைவெளிக்குப் பின்னர் முதல் தடவையாக பாகிஸ்தானில் பன்னாடுகள் பங்குபற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முழுமையான வெற்றியை ஈட்டிய பாகிஸ்தான், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் முதலாவது அணி என்ற அந்தஸ்துடன் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை எதிர்கொள்கிறது.
இலங்கை அணியினர் மீது லாகூரில் 2009இல் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அண்மைக்காலமாகவே நடைபெற்றுவருகின்றன.
பாகிஸ்தானுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான போட்டியைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான போட்டி லாகூரில் செப்டெம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான போட்டியும் லாகூரில் செப்டெம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டிகளின் பின்னர் லாகூரில் சுப்பர் 4 போட்டி செப்டெம்பர் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதனிடையே இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான போட்டி ஆகஸ்ட் 31ஆம் திகதியும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மிக முக்கிய போட்டி செப்டெம்பர் 2ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.
இந்த இரண்டு போட்டிகளும் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறும்.
இரண்டு குழுக்களில் நடைபெறும் முதலாம் சுற்றுப் போட்டிகள் நிறைவுபெற்றதும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் 4 அணிகள் சுப்பர் 4 சுற்றில் ஒன்றையொன்று எதிர்த்தாடும். சுப்பர் 4 சுற்றில் 6 போட்டிகள் நிறைவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் ஆசிய சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் விளையாட தகதிபெறும்.
போட்டி விபரங்கள்
முதல் சுற்று
ஒகஸ்ட் 30 பாகிஸ்தான் எதிர் நேபாளம் (ஏ - முல்தான்)
ஒகஸ்ட் 31: இலங்கை எதிர் பங்களாதேஷ் (பி - பல்லேகலை)
செப். 2: இந்தியா எதிர் பாகிஸ்தான் (ஏ - பல்லேகலை)
செப். 3: பங்களாதேஷ் எதிர் ஆப்கானிஸ்தான் (பி - லாகூர்)
செப். 4: இந்தியா எதிர் நேபாளம் (ஏ - பல்லேகலை)
செப். 5: ஆப்கானிஸ்தான் எதிர் இலங்கை (பி - லாகூர்)
சுப்பர் 4 சுற்று
செப். 6: ஏ 1 எதிர் பி 2 (லாகூர்)
செப். 9: பி 1 எதிர் பி 2 (கொழும்பு)
செப். 10: ஏ 1 எதிர் ஏ 2 (கொழும்பு)
செப். 12: ஏ 2 எதிர் பி 1 (கொழும்பு)
செப். 14: ஏ 1 எதிர் பி 1 (கொழும்பு)
செப். 15: ஏ 2 எதிர் பி 2 (கொழும்பு)
செப். 17: இறுதிப் போட்டி (கொழும்பு)
சகல போட்டிகளும் பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகும்.
குழாம்கள்
ஆப்கானிஸ்தான்: துடுப்பாட்ட வீரர்கள் - ஹஷ்மதுல்லா ஷஹிதி (தலைவர்), இப்ராஹிம் ஸத்ரான், இக்ரம் அலிகில், நஜிபுல்லா ஸத்ரான், ரஹமானுல்லா குர்பாஸ், ரியாஸ் ஹசன். சகலதுறை வீரர்கள் - குல்பாதின் நய்ப், கரிம் ஜனத், மொஹமத் நபி, ரஹ்மாத் ஷா, ராஷித் கான், ஷராபுதின் அஷ்ரப். பந்துவீச்சாளர்கள் - அப்துல் ரஹ்மான், பஸால்ஹக் பாறூக்கி, மொஹமத் சலீம், முஜிப் உர் ரஹ்மான், நூர் அஹ்மத்.
பங்களாதேஷ்: துடுப்பாட்ட வீரர்கள் - லிட்டன் தாஸ் (தலைவர்), மொஹமத் நய்ம், முஷிபிக்குர் ரஹிம், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ, தன்ஸித் ஹசன், தவ்ஹித் ஹ்ரிடோய். சகலதுறை வீரர்கள் - ஷக்கிப் அல் ஹசன், அபிப் ஹொசெய்ன், மெஹெதி ஹசன், மெஹெதி ஹசன் மிராஸ், ஷமிம் ஹொசெய்ன். பந்துவீச்சாளர்கள் - ஈபாடொத் ஹொசெய்ன், ஹசன் மஹ்முத், முஸ்தாபிஸுர் ரஹ்மான், நசும் அஹ்மத், ஷொரிபுல் இஸ்லாம், தஸ்கின் அஹ்மத்.
இந்தியா: துடுப்பாட்ட வீரர்கள் - ரோஹித் ஷர்மா (தலைவர்), இஷான் கிஷான், ஷ்ரேயாஸ் ஐயர், விராத் கோஹ்லி, கே.எல். ராகுல், ஷுப்மான் கில், சூரியகுமார் யாதவ். சகலதுறை வீரர்கள் - ரவிந்த்ர ஜடேஜா, ஹார்திக் பாண்டியா, அக்சார் பட்டேல், திலக் வர்மா. பந்துவீச்சாளர்கள் - ஜஸ்ப்ரிட் பும்ரா, குல்தீப் யாதவ், மொஹமத் ஷமி, மொஹமத் சிராஜ். ப்ராசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர்.
நேபாளம்: துடுப்பாட்ட வீரர்கள் - ஆரிப் ஷெய்க், ஆசிப் ஷெய்க், திபேந்த்ரா சிங் ஐரீ, குஷால் பூர்டெல், அர்ஜுன் சாத், பிம் ஷர்க்கி. சகலதுறை வீரர்கள் - ரோஹித் பவ்டெல் (தலைவர்), கரன் கே.சி., குஷால் மல்லா, ப்ராட்டிஸ் ஜி.சி., சோம்பால் கமி. பந்துவீச்சாளர்கள் - குல்சான் ஜா, சந்தீப் லமிச்சான், லலித் ராஜபான்ஷி, மௌசம் தகால், சந்தீப் ஜோரா, கிஷோர் மஹோட்டோ.
பாகிஸ்தான்: துடுப்பாட்ட வீரர்கள் - பாபர் அஸாம் (தலைவர்), அபுதுல்லா ஷபிக், பக்கார் ஸமான், இப்திகார் அஹ்மத், இமாம் உல் ஹக், மொஹமத் ஹரிஸ், மொஹமத் ரிஸ்வான், சவ்த் ஷக்கீல். சகலதுறை வீரர்கள் - ஷதாப் கான் (உதவித் தலைவர்), அகா சல்மான், பாஹீம் அஷ்ரப், மொஹமத் நவாஸ், மொஹமத் வசிம். பந்துவீச்சாளர்கள் - ஹரிஸ் ரவூப், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்றிடி, உசாமா மிர்.
இலங்கை: துடுப்பாட்ட வீரர்கள்: குசல் மெண்டிஸ் (உதவித் தலைவர்), திமுத் கருணாரட்ன, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் பெரேரா, சதீர சமரவிக்ரம. சகலதுறை வீரர்கள் - தசுன் ஷானக்க (தலைவர்), சரித் அசலன்க, தனஞ்சய டி சில்வா, துஷான் ஹேமன்த. பந்துவீச்சாளரகள் - பினுர பெர்னாண்டோ, மதீஷ பத்திரண, ப்ரமோத் மதுஷான், கசுன் ராஜித்த, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே,