மக்ரோன் மீதான வெறுப்பும்... தீவிர வலதுசாரிகளின் எழுச்சியும்..!!
1 ஆடி 2024 திங்கள் 06:03 | பார்வைகள் : 5571
நடைபெற்று முடிந்த முதலாவது சுற்று தேர்தலில் தீவிர வலதுசாரிகள் பெரும்பான்மை வெற்றியை பெற்றிருந்தமை அறிந்ததே. ஐந்தாம் குடியரசில் முதன்முறையாக இந்த வலதுசாரிகளின் பெரும்பான்மை பதிவாகியுள்ளது. வலதுசாரி சிந்தனை பிரெஞ்சு மக்களிடம் பெருவாரியாக தோன்றியமைக்குரிய காரணம் குறித்து அலசுகிறது இந்த பதிவு.
’பிரான்ஸ் பிரெஞ்சு மக்களுக்கே!’ என்பது வலதுசாரிகளின் முக்கிய கொள்கையாகும். ஆனால், தற்போதைய ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் குடியேற்றத்தை ஆதரிப்பவர் ஆவார். நாட்டில் பதிவாகும் அனைத்து வன்முறைகளுக்கும் இந்த குடியேற்றமே காரணமாகும் என நம்பும் பெரும்பான்மையான மக்கள், இந்த சிந்தனைக்கு எதிராக திரண்டு வந்து வாக்குகளை அளித்துள்ளனர்.
Rassemblement National கட்சி சென்ற 2022 ஆம் ஆண்டு தேர்தலில் 4.2 மில்லியன் வாக்குகள் பெற்ற நிலையில், இம்முறை 12 மில்லியன் வாக்குகளைப் பெற்றுள்ளது. கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமான வாக்குப்பதிவாகும். இதனை ‘குடியேற்ற’ சிந்தனைக்கு எதிரான மாற்றமாக கருத முடியும்.
அதேவேளை, ஐந்தாம் குடியரசில் இரண்டாவது தடவையாக அதிகூடிய வாக்குப்பதிவுகள் ( 67.5%) இம்முறை பதிவாகியுள்ளது.
இதன் பின்னணியில் மக்களிடையே வலதுசாரி சிந்தனை மேலோங்கியுள்ளதைக் காணமுடிகிறது.
பிரான்சில் இடம்பெறும் துப்பாக்கிச்சூட்டுகள், போதைப்பொருள் கடத்தல்கள், வன்முறைச் சம்பவங்களை அரசு கட்டுப்படுத்த தவறியதாக மரீன் லு பென் தொடர்ச்சியாக பிரச்சாரங்கள் மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, மக்ரோனின் மீதான வெறுப்பை கொண்டுள்ள மக்கள், ஜனாதிபதியின் மறுமலர்சி கட்சியை மூன்றாவது இடத்துக்கு தள்ளி (22% வாக்குகள்) இடதுசாரி கூட்டணியான Nouveau Front Populaire இற்கு 29% சதவீத வாக்குகளையும் வழங்கியுள்ளது.
பிரான்சில் மட்டுமில்லாது ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்குமே வலதுசாரி சிந்தனை எழுந்துள்ளதாக பல்வேறு அரசியல் அவதானிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.