Paristamil Navigation Paristamil advert login

ஊழல் செய்வதில் காங்., இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளது: பிரதமர் மோடி

ஊழல் செய்வதில் காங்., இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளது: பிரதமர் மோடி

30 வைகாசி 2024 வியாழன் 11:00 | பார்வைகள் : 1507


ஊழல் செய்வதில் காங்கிரஸ் இரட்டை முனைவர் (பி.எச்டி) பட்டம் பெற்றுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஹோஷியாப்பூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நீண்ட நாட்களுக்கு பிறகு, முழு மெஜாரிட்டி உடன் ஒரு அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க போகிறது. மத்தியில் ஆட்சி அமைத்ததும் ஆதம்பூர் விமான நிலையத்திற்கு குரு ரவிதாஸ் பெயர் சூட்டப்படும்.

ஊழல் செய்வதில் காங்கிரஸ் இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளது. ஏழைகள் நலனே எனது அரசின் முக்கியமான திட்டம். மாநிலத்தில் விவசாயம் மற்றும் தொழில்துறையை ஆம் ஆத்மி அரசு அழித்துவிட்டது.

அரசியலமைப்பு குறித்து இண்டியா கூட்டணியினர் பேசுவதை கேட்க முடிகிறது. இவர்கள் தான் அவசரகாலத்தில் அரசியலமைப்பை நெறித்தனர். 1984 ல் சீக்கியர்கள் கொல்லப்பட்ட போது, அவர்கள் ஏன் அரசியலமைப்பை பற்றி சிந்திக்கவில்லை.

தலித்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினரின் இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க விட மாட்டேன் என உறுதிமொழி எடுத்துள்ளேன். இதற்கு எதிராக காங்கிரஸ், இண்டியா கூட்டணியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இட ஒதுக்கீட்டை பறித்த வரலாறு அக்கட்சிகளுக்கு உண்டு. அரசியல்சாசனத்தின் ஆன்மா, அம்பேத்கரின் ஆன்மாவை அவர்கள் அவமதிக்கின்றனர். இந்த இட ஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் என சொல்கின்றனர். இதனை நான் அம்பலப்படுத்தியதால், அவர்கள் கோபம் அடைந்து என்னை திட்டுகின்றனர்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்